விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘ஹிட்லர்’ திரைப்படத்தின் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இப்படத்தில் ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். ஐஸ்வர்யா தத்தா ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார். இசை வெளியீட்டு விழாவில் இருவருமே கலந்துகொண்டது மற்றொரு நல்ல அம்சம்.
இந்நிகழ்ச்சியில் பேசிய நாயகி ரியா சுமன், இந்தப் படத்தில் தமக்கு நல்ல கதாபாத்திரம் அமைந்திருப்பதாகவும் இதற்காக பட இயக்குநர், விஜய் ஆண்டனி ஆகிய இருவருக்கும் தாம் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
“இது என் மனதுக்கு மிக நெருக்கமான, முக்கியமான படம். இயக்குநர் தனா ஒவ்வொரு காட்சியையும் மிக நேர்த்தியாக வடிவமைத்துள்ளார்.
“ஒரு மனிதரால் எப்படி எந்நேரமும் நேர்மறை சிந்தனையுடன், தன்னம்பிக்கையுடன் செயல்பட முடியும் என்று விஜய் ஆண்டனியைப் பார்த்து வியந்துபோனேன். அவர் மிகவும் நல்ல மனிதர். இந்தப்படத்தில் அவருடன் இணைந்து நடித்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.
“நான் இயக்குநர் கௌதம் மேனனின் தீவிர ரசிகை. அவருடன் திரையைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்குமென நினைத்துக்கூட பார்த்ததில்லை. அதுவும் இந்தப் படத்தின் மூலம் சாத்தியமாகி உள்ளது.
“ரசிகர்கள் அனைவருமே இந்தப் படத்தை குடும்பத்தோடு திரையரங்குக்குச் சென்று பார்த்து ஆதரவளிக்க வேண்டும் என்பதே என்னுடைய முக்கியமான வேண்டுகோள்,” என்றார் நாயகி ரியா சுமன்.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து பேசிய ஐஸ்வர்யா தத்தா, இந்தப் படத்தில் தாம் இடம்பெற்றுள்ள பாடல் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்றார்.
“திடீரென ஒரு நாள் இயக்குநர் தனா தொடர்புகொண்டு பேசி, ஒற்றைப் பாடலுக்கு நடனமாட வேண்டுமென்று கூறியபோது தயக்கமாக இருந்தது. ஆனால் தனா நல்ல இயக்குநர் என்பதால் ஒப்புக்கொண்டேன்.
“எனினும் பின்னர் நடன அமைப்பாளர் பிருந்தா பாடலுக்காக அமைத்திருந்த நடன அசைவுகள் என்னை யோசிக்க வைத்தன. துள்ளல் இசை, வேகமான நடன அசைவுகள் ஆகியவைதான் என்னை தயங்க வைத்தன.
“இயக்குநரும் பிருந்தாவும் எனக்கு ஊக்கமளித்து ஆடவைத்தனர். இருவருக்கும் நன்றி,” என்றார் ஐஸ்வர்யா தத்தா.
இந்த ஒற்றைக் குத்துப்பாடலை பாடலாசிரியர் கிருத்திகா எழுதியுள்ளார். இவரும் இயக்குநர் தனாவும் நீண்டநாள் நண்பர்களாம். அந்த நட்புதான் பாடலை எழுத வைத்ததாம்.
“ஒரு பெண்ணை அழைத்து அயிட்டம் பாடல் எனப்படும் குத்துப்பாடலை எழுதுங்கள், அதிலும் விரசமில்லாமல் எழுதுங்கள் என்று சொன்னது மிகவும் மகிழ்ச்சி அளித்தது.
“இப்படத்தில் நான் எழுதியுள்ள இரு பாடல்களுமே ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என நம்புகிறேன்,” என்றார் கிருத்திகா.
இந்த விழாவின் நாயகனான இசையமைப்பாளர் மெர்வின் பேசுகையில், முழுப்படத்தையும் பார்த்து முடித்தபோது மிகவும் மன நிறைவு அளித்தது என்றார்.
அடிதடி உள்ளிட்ட அனைத்து வணிக அம்சங்களும் நிறைந்த படமாக உருவாகி உள்ளது என்றும் பாராட்டு தெரிவித்தார். விஜய் ஆண்டனியின் நடிப்பு மிக அருமையாக இருந்தது என்றும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.
மற்ற அனைவரையும் போலவே இயக்குநர் கௌதம் மேனனுடன் இணைந்து பணியாற்றியது தமக்கும் உற்சாகம் அளித்ததாகச் சொன்னார் விஜய் ஆண்டனி.
ஒரு காலத்தில் கௌதம் மேனன் இயக்கிய படங்களுக்கு இசையமைக்க வாய்ப்பு கேட்டு தாம் அலைந்து திரிந்ததாகக் குறிப்பிட்டார்.
“கதாநாயகி ரியா சுமன் நடித்த ‘மன்மத லீலை’ படத்தைப் பார்த்தபோது அவர் மொழியைக் கற்றுக்கொண்டு பேசுவது வியப்பளிக்கிறது. இதற்காக அனைவருமே அவரை பாராட்ட வேண்டும்.
“தயாரிப்பாளர் ராஜா எத்தகைய தடைகளைக் கடந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளார் என்பது எங்களுக்குத்தான் தெரியும். இந்தப் படத்தில் பெரிதாக எந்த கருத்தையும் நாங்கள் சொல்லவில்லை. ஆனால் எல்லோருக்கும் பிடித்த மாதிரியான, ஜாலியான அடிதடி படமாக உருவாக்கி உள்ளோம்,” என்றார் விஜய் ஆண்டனி.
அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், இந்தப்படம் எதிர்வரும் செப்டம்பர் 27ஆம் தேதியன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியீடு காணும் என அறிவிக்கப்பட்டுள்ளது.