கண்ணியத்தின் எல்லைக்கோடு: ஜான்விக்கு நடிகைகள் ஆதரவுக் குரல்

கண்ணியத்தின் எல்லைக்கோடு: ஜான்விக்கு நடிகைகள் ஆதரவுக் குரல்

2 mins read
5b242a8d-f5a4-4239-bf6a-4f5c8a30aac2
நித்யா மேனன். - படம்: பின்டர்ரஸ்ட்
multi-img1 of 2

‘பெத்தி’ படத்தில் நடிகை ஜான்வி கபூர் கவர்ச்சியாகச் சித்திரிக்கப்பட்ட விதம், ரசிகர்களிடையேயும் திரை உலகினரிடையேயும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஜான்வி கபூருக்கு நேர்ந்த இந்தச் சித்திரிப்புக்கு எதிராக, திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்கள் ஆதரவு தெரிவித்து தங்களின் குரல்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

அந்தப் பட்டியலில், தங்களின் தனித்துவமான கொள்கைகளால் அறியப்படும் நடிகைகளான நித்யா மேனன், அனு அகர்வால் ஆகியோரின் குரல்கள் மிக ஓங்கி ஒலித்திருக்கின்றன.

எப்போதும் தமக்கான கதாபாத்திரங்களை மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நித்யா மேனன், “திரையுலகில் பயணிக்கும் ஒவ்வொரு நடிகையும், நடிப்பில் தங்களுக்கான எல்லைக்கோடுகளை வகுத்து, அதன்படி செயல்படுவது மிகவும் முக்கியம்,” என்று தெரிவித்துள்ளார்.

“திரையில் நடிகைகளை வெறும் கவர்ச்சிப் பொம்மைகளாகக் காட்டுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோல் கவர்ச்சியாகக் காட்டுவது என்பது உலகளாவிய ஒரு வணிகப் போக்கு. இதில் நடிக்க மறுத்தால் நமக்குப் பெரிய படங்கள் கிடைக்காமல் போகலாம். ஆனால், புகழை விடவும் சுயமரியாதையும் கொள்கையும்தான் பெண்களுக்கு மிகவும் முக்கியம்.

“என்னைக் கேட்டால், திரைப்படங்களில் எந்த மாதிரியான கதாபாத்திரங்களை ஏற்க வேண்டும், எவற்றைத் தவிர்க்கவேண்டும் என்பதில் நான் எப்போதும் நூறு விழுக்காடு தெளிவோடு இருக்கிறேன்,” என்று மற்ற இளம் நடிகைகளுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக நித்யா தன் கருத்தை முன்வைத்துள்ளார்.

பெரிய கண்கள், சுருள் முடி, எதார்த்தமான புன்னகை என்பதையும் தாண்டி, அசாத்திய நடிப்புத் திறமையால் ‘தேசிய விருது’ வரை வென்று, தற்போது தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் தன் அடுத்தகட்ட வெற்றிக்குத் தயாராகி வரும் நித்யா மேனன், தனது காந்தக் குரலால் பாடகியாகவும் வலம் வருகிறார்.

வேண்டாம் என்று சொல்லும் தைரியம் வேண்டும்

மறுபுறம், ‘திருடா திருடா’ புகழ் மூத்த நடிகை அனு அகர்வாலும் தனது சமூக ஊடகப் பக்கத்தில், “திரையில் பெண்கள் கண்ணியத்தோடு சித்திரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு இயக்குநர்களுக்கோ அல்லது தயாரிப்பாளர்களுக்கோ மட்டும் உரியதல்ல. அதில் சக நடிகர்களுக்கும் சமமான பொறுப்பு இருக்கிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திரையில் பெண்களைத் தரம் தாழ்த்தாமல் கண்ணியமாக நடத்தக் கோரி குரல் கொடுக்கும் தற்போதைய விழிப்புணர்வுமிக்க பார்வையாளர்களைப் பாராட்டிய அவர், இளம் நடிகைகளுக்கு ஒரு முக்கிய ஆலோசனையையும் வழங்கினார்.

“அந்தப் பொறுப்பு பார்வையாளர்களோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை. நடிகைகளும் தாங்கள் தேர்ந்தெடுக்கும் கதைகளில் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும்.

“இளம் நடிகைகளே, உங்கள் கதாபாத்திரங்கள் பெண்களின் மனித மாண்பை, சுயமரியாதையை மீறும் வகையில் அமைந்தால் ‘வேண்டாம்’ என்று முகத்திற்கு நேரே மறுக்கும் தைரியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்,” என்று அவர் அறிவுறுத்தி உள்ளார்.

‘பெத்தி’ பட விவகாரம் ஜான்வி கபூருக்குப் பின்னடைவை ஏற்படுத்தியிருந்தாலும், நித்யா மேனன், அனு அகர்வாலின் இந்தத் துணிச்சலான கருத்துகள், திரையுலகில் பெண்களின் கண்ணியம், சுயமரியாதையைப் பாதுகாப்பதற்கான ஒரு புதிய நம்பிக்கையை விதைத்திருக்கின்றன.

குறிப்புச் சொற்கள்