ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித் போன்ற உச்ச நடிகர்களின் படங்களை மின்னணுத் தொழில்நுட்பத்தைக் கொண்டு மெருகேற்றி மீண்டும் வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வரிசையில் 1992ஆம் ஆண்டு வெளியான கமலின் ‘தேவர் மகன்’ படமும் மறு வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.
அதற்காக இந்தப் படத்தில் வரும் சில காட்சிகளைக் கூடுதலாகச் சேர்க்க அப்படக்குழு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக அப்படத்தில் வரும் குழந்தை நட்சத்திரங்களின் குரல்களை மாற்ற முடிவு செய்துள்ளனர். அப்பணிக்காக மதுரையைச் சேர்ந்த ஐந்து சிறார்களைப் அப்படக்குழு தேர்வு செய்தது.
அவர்களைச் சென்னைக்கு அழைத்துவந்து கமல் முன்னிலையில் குரல் பதிவுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
அப்போது கமலிடம் ஒரு சிறுவன் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தின் வசனத்தைப் பேசிக் காட்டினார். அந்தக் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது.
முதலில், பத்து திருக்குறளை இடைவெளியின்றி ஒப்பித்த சிறுவன் பின்னர், அந்த வசனத்தைப் பேசினார்.
இடையில் அச்சிறுவன் தவறவிட சில வசனங்களைக் கமல் சிறுவனுக்கு எடுத்துச் சொல்லி மகிழ்ந்தார்.
மேலும், சிறுவன் முழு வசனத்தைப் பேசி முடித்தவுடன் அவரைக் கமல் பாராட்டினார்.

