சின்னத்திரையில் அசத்தி வரும் ‘கலக்கப் போவது யாரு’ பாலாவுக்குத்தான் இப்போது சுக்கிர திசை போலிருக்கிறது.
அவர் கதாநாயகனாக நடிப்பது முடிவாகிவிட்டது. படத்துக்கு ‘காந்தி கண்ணாடி’ எனத் தலைப்பு வைத்துள்ளனர். இதை ‘ரணம்’ படத்தை இயக்கிய ஷெரீஃப் இயக்குகிறார். கதை நாயகியாக நமீதா நடிக்கிறார்.
“கதாநாயகனாக நடிக்கும்போது யாருக்குத்தான் மகிழ்ச்சி இருக்காது. இது மிகப் பெரிய வாய்ப்பு என்பதை உணர்ந்திருக்கிறேன்.
“முன்பு சம்பாதித்ததைவிட, இனி என்னால் அதிகம் சம்பாதிக்க முடியும். மேலும் அதிகமானோருக்கு உதவ முடியும் என்பதில் கூடுதல் உற்சாகமாக உணர்கிறேன்,” என்கிறார் பாலா.
விஜய் சேதுபதியின் ‘ஜுங்கா’ படத்தில், சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பாலா. அதன் பிறகு மேலும் பல படங்களில் நடித்து முடித்துள்ளார்.
தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வரும் பாலாவுக்கு ஏழைகளைத் தேடிச் சென்று உதவி செய்வதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பேரும் புகழும் கிடைத்துள்ளது.

