தொடர்ந்து ஒற்றைப் பாடலுக்கு நடனமாட கேட்டு தம்மை அணுகும் இயக்குநர்களிடம், ‘அதற்கு வாய்ப்பே இல்லை’ என்று கைவிரிக்கிறாராம் தமன்னா.
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ படத்தில் ‘காவாலா’ எனத் தொடங்கும் பாடலுக்கு நடனமாடிய தமன்னா, இந்தியில் ‘ஸ்திரி-2’ என்ற படத்திலும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார்.
இரு பாடல்களுமே பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில், மேலும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஒற்றைப் பாடலுக்கு நடனமாடக் கேட்டு பல இயக்குநர்கள் இவரை அணுகுகிறார்களாம். இரு மடங்கு சம்பளம் தருவதாகவும் கூறுகின்றனராம்.
கிட்டத்தட்ட மலையாளத்தில் கதாநாயகிகள் பெறும் ஊதியத்தைவிட இந்தத் தொகை அதிகம் எனக் கூறப்படுகிறது. ஆனால் தமன்னாவோ எதற்கும் அசைந்து கொடுப்பதாக இல்லை.
“நான் நடனமாடும் ஒரு பாடல் படத்தின் வெற்றிக்கு உதவியாக இருந்தால் எனக்கும் அதில் மகிழ்ச்சிதான். ரஜினி படம் என்பதால்தான் ‘ஜெயிலர்’ படத்தில் நடனமாடினேன்.
“அதேபோல் ‘ஸ்திரி’ படத்தின் இயக்குநர் என் நண்பர் என்பதால் அந்த வாய்ப்பையும் மறுக்க முடியவில்லை. அதற்காக இவர்களைப் போன்று மற்றவர்களும் என்னிடம் உரிமை எடுத்துக்கொள்ள முடியாது,” என்கிறார் தமன்னா.