தனது திரை வாழ்க்கையில் சில தவறுகள் நடந்தன என்றும் அவற்றை எதிர்மறை விளைவுகளாகக் கருதி மனம் சோர்வு அடையவில்லை எனச் சொல்கிறார் நடிகர் ஷாம்.
இவரது நடிப்பில் உருவாகி உள்ள ‘அஸ்திரம்’ திரைப்படம் மார்ச் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஷாம், ஒரு நல்ல இயக்குநரின் நல்ல கதையில் நடித்துள்ள மனநிறைவு கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
“திரையுலகில் எனது அடுத்தகட்ட முயற்சிகளுக்கு ‘அஸ்திரம்’ படம் நிச்சயம் உதவும் என நம்புகிறேன். இந்தப் படம் எனக்கு பிரம்மாஸ்திரமாக அமையும்.
“நடிகராக வேண்டும் என்ற கனவுடன் திரையுலகுக்கு வந்த எனக்கு இயக்குநர் ஜீவா ‘12பி’ படத்தில் வாய்ப்பு தந்தார்.
“அப்போது எனக்கு வேறு எந்த அனுபவமும் இல்ல. சில தவறுகள் நடந்தன. அதை எதிர்மறையாக எடுத்துக்கொண்டு மனச்சோர்வு அடையவில்லை. ‘12பி’ படத்துக்குப் பிறகு அடுத்தடுத்து நான்கு படங்களை ஒப்புக்கொண்டது தவறாகிவிட்டது. அதுபோன்ற தவற்றை இனி செய்யக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன்,” என்றார் ஷாம்.
எல்லாருக்கும் சினிமாவில் நல்ல நேரமும் வெற்றியும் அமைய வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், தொடக்க காலத்தில் தனக்குப் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றார்.
“இன்று தமிழ் சினிமாவில் உயரத்தில் உள்ள சிலர் தொடக்கத்தில் பல சவால்களைச் சந்தித்திருப்பார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக சிவகார்த்திகேயனைச் சொல்லலாம்.
தொடர்புடைய செய்திகள்
“அவர் போட்டியாளாராக இருந்த நிகழ்ச்சியில் நான் நடுவராக இருந்திருக்கிறேன். அப்போதே அவரிடம் ‘உன்னோட நகைச்சுவை நன்றாக இருக்கிறது. குழந்தைகளுக்கு உன்னை மிகவும் பிடித்திருக்கிறது’ என்று சொல்லி இருக்கிறேன்.
“சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பலருக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால், நான் அதை முன்பே கணித்துவிட்டேன்.
“நான் ‘குஷி’ திரைப்படத்தில் விஜய் அண்ணனோடு ஒரே ஒரு காட்சியில் நடித்திருந்தேன். அடுத்த மூன்று ஆண்டுகளிலேயே நான் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது.
“எனவே, யாருடனும் நம்மை ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது. சிவகார்த்திகேயனும்கூட தற்போதுள்ள தனது நிலைகுறித்து மகிழ்ச்சி அடைவதுடன் முழுமையான மனநிறைவுடன் படங்களில் நடிக்க வேண்டும். அவர் அப்படித்தான் செயல்படுவதாக நினைக்கிறேன். அவர் மேலும் பல வெற்றிகளைப் பெற வேண்டும்.
“எல்லாருக்கும் வாழ்க்கையில் போராட்டங்கள் இருக்கும். எனக்கும் இருந்தன. அவற்றை நேர்மறையாகக் கருதி, கடந்து வந்துள்ளேன். மற்றவர்களும் இந்த வழியைப் பின்பற்ற வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்,” என்றார் ஷாம்.

