திரைப்படமாகும் கேரம் சாம்பியனின் வாழ்க்கை

2 mins read
a571e5c2-7b40-47fc-be48-555b8af46cdf
‘தி கேரம் குயின்’ படத் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. - படம்: விகடன்

இந்தியத் திரையுலகில் அவ்வப்போது விளையாட்டு சாதனையாளர்களின் வாழ்க்கையைப் படமாக்கும் நல்ல முயற்சிகள் நடந்து வருகின்றன.

அந்த வகையில், அனைத்துலக கேரம் போட்டியில் வாகைசூடிய இந்திய வீராங்கனை காஜிமாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது.

அண்மையில் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் ஆறாவது அனைத்துலக கேரம் விளையாட்டுப்போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் வடசென்னை பகுதியைச் சேர்ந்த காஜிமா கலந்துகொண்டார்.

இவரது தந்தை ஆட்டோ ஓட்டுநராவார். பல போராட்டங்களுக்கு மத்தியில் கேரம் சாம்பியன் பட்டத்தை வென்றெடுத்து சாதனை படைத்துள்ளார் காஜிமா.

போராட்டங்கள் நிறைந்த இந்த இளம்பெண்ணின் வாழ்க்கை ‘தி கேரம் குயின்’ என்கிற பெயரில் திரைப்படமாகிறது. சென்னையில் நடந்த இப்படத்தின் தொடக்க விழாவில் காஜிமா கலந்துகொண்டார்.

இவரது தந்தை கதாபாத்திரத்தில் காளிவெங்கட் ஒப்பந்தமாகி உள்ளார். காஜிமாவின் கதாபாத்திரத்தில் கன்னட நடிகை ரந்தியா பூமேஷ் நடிக்க, முரளி இயக்குகிறார்.

இந்த விழாவில் பேசிய காஜிமா, விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க பணமின்றித் தவித்தபோதெல்லாம் தனது தந்தைதான் இரவு பகலாக ஆட்டோ ஓட்டி, தேவையான பணத்தை சேர்த்துக் கொடுத்ததாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

தான் கடுமையாக உழைத்து போட்டிகளில் வெற்றி பெற்று தந்தைக்கு சொந்த வீடு வாங்கிக் கொடுத்து இருப்பதாகவும் திறமையை ஊக்குவித்தால் எல்லாரையும் வெற்றி பெற வைக்க முடியும் என்றும் கைத்தட்டல்களுக்கு மத்தியில் குறிப்பிட்டார் காஜிமா.

“காளி வெங்கட்டை பல படங்களில் பார்த்திருக்கிறேன். அவர் என் தந்தையாக நடிப்பதில் மகிழ்ச்சி,” என்றார் காஜிமா.

இவரது சகோதரருக்கும் கேரம் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உள்ளதாம்.

இளம் வயதிலேயே தமக்குப் பயிற்சி கொடுக்கும் அளவுக்கு திறமையை வளர்த்துக் கொண்டுள்ள தன் சகோதரரும் இந்தப் புதுப் படத்தில் நடிக்க உள்ளதாக பார்ப்பவர்களிடம் எல்லாம் சொல்லி பூரிப்படைகிறார் காஜிமா.

குறிப்புச் சொற்கள்