களைகட்டப் போகும் திரை நட்சத்திரங்களுக்கான கிரிக்கெட் போட்டித் தொடர் ‘சிசிஎல்’

2 mins read
63a3d4bf-f9a4-4ceb-b3a8-8d36e8453f74
சிசிஎல் போட்டியில் பங்கேற்கும் நடிகர்கள். - படம்: சிசிஎல்.இன்

விரைவில் களைகட்டப் போகிறது திரை நட்சத்திரங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டித் தொடர் ‘சிசிஎல்’.

‘செலிப்ரிடி’ எனப்படும் திரையுலக நட்சத்திரங்களுக்கு (சிசிஎல்) இடையேயான கிரிக்கெட் போட்டித் தொடர் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, போஜ்புரி திரையுலகங்களைச் சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் தனித் தனி அணிகளாக பங்கேற்று வருகிறார்கள்.

இதுவரை வளைகுடா நாடுகளில்தான் இந்தப் போட்டி அதிகம் நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டுக்கான சிசிஎல் போட்டி ஜனவரி 16 முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரை மதுரை, மைசூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு சிசிஎல் போட்டிக்கான விளம்பர‌த் தூதராக நடிகை மீனா அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டும் நடிகர்கள் ஆர்யா, பரத், கலையரசன், ரமணா, சாந்தனு, பிருத்விராஜ் ஆகியோர் போட்டித் தொடரில் விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், தொடர்ந்து படப்பிடிப்புகளில் கலந்துகொள்ள திட்டமிட்டிருக்கும் சிம்பு விளையாடுவாரா என்பது தெரியவில்லை.

இம்முறை தமிழ்த் திரையுலக அணிக்கு ‘வேல்ஸ் சென்னை கிங்ஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் சரத்குமார் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். தயாரிப்பாளர் ஜசரி கணேசன், நடிகை ஸ்ரீப்ரியா இணைந்து இந்த அணியை வாங்கியுள்ளனர்.

நடிகை மீனா, ஸ்ரீப்ரியாவுக்கு நெருக்கமானவர் என்பதால் அவரைத் தூதராக நியமித்துள்ளனராம். அதற்காக, மீனா குறைந்த தொகையை ஊதியமாகப் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, சிசிஎல் போட்டித் தொடரில் பங்கேற்க உள்ள மற்ற அணிகளை வாங்குவதற்கும் சில நிறுவனங்கள் தயாராக இருப்பதாகத் தகவல்.

இதன்மூலம் இந்தப் போட்டிக்கு நல்ல விளம்பரமும் வரவேற்பும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தென்னிந்திய திரை ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்