தமிழ் சினிமாவும் பிரச்சினைகளும் கைகோத்து வலம்வருவது வாடிக்கையாகிவிட்டது.
ஒவ்வோர் ஆண்டும் புதுப்புது சிக்கல்கள் எழுவதும் அவற்றுக்குத் தீர்வுகாண முடியாமல் திரையுலகச் சங்கங்கள் தவிப்பதும் வழக்கமான செய்திகளாகிவிட்டன.
எண்ணிக்கையை வைத்து தமிழ் சினிமாவின் வளர்ச்சியைத் தீர்மானிக்க இயலாது. கடந்த ஆண்டு 280 படங்களுக்கு மேல் வெளியாகின. எனினும் 30 படங்கள் மட்டுமே வசூல் ரீதியில் வெற்றிக்கோட்டை எட்டின.
காரணம் நிலைமை முன்புபோல் இல்லை. அவ்வளவு ஏன்? கடந்த ஆண்டு நிலைமைகூட இப்போது இல்லை என்பதே உண்மை.
ஓடிடி தளங்கள், தனியார் செயற்கைக்கோள் அலைவரிசைகள் முன்புபோல் செழிப்பாக இல்லை. பெரும் வெற்றி பெறும் என்று கணக்குப் போட்ட அவை வாங்கிய படங்கள் படுத்துவிட்டன. இதனால் ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்களால் பெரிய கதாநாயகர்கள் நடித்த படங்களைக்கூட அவை வாங்க மறுக்கின்றன.
இதனால் பல திரைப்படங்கள் வெளியீடு காணத் தயாராக இருந்தாலும் அவற்றை வெளியிட முடியவில்லை என விகடன் ஊடகத்தில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்த் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனான விஜய் இனி நடிக்க மாட்டார் என்ற அறிவிப்பும் தமிழ்த்திரைக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
போட்டி இருந்தால்தானே சுவாரசியம். இந்த அடிப்படையில் களத்தில் தனியாக நிற்கும் அஜித்துக்கும் மவுசு குறைந்துவிட்டது என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்கள் பலர் முன்வரவில்லை என்று அண்மையில் செய்தி வெளியானதை அவரது ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை.
இருப்பினும் அஜித் தனது சம்பளத்தைக் குறைப்பதாக இல்லை. அஜித் மட்டுமல்ல, கோடம்பாக்கத்தின் எந்த கதாநாயகனும் சம்பள குறைப்புக்குச் சம்மதிப்பதாகத் தெரியவில்லை.
மற்றொரு பக்கம் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் தொழிலாளர்கள் சங்கத்துக்கும் இடையேயான பிரச்சினைக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.
திரையரங்கக் கட்டணம், வாகனங்கள் நிறுத்தும் கட்டணம், திரையரங்க உணவகங்களில் பலமடங்கு விலையில் விற்கப்படும் பானங்கள், தின்பண்டங்கள் ரசிகர்களை மிரள வைக்கின்றன.
இதனால் வாரந்தோறும் திரையரங்கிற்குச் சென்றுகொண்டிருந்த ரசிகர்கள்கூட இப்போதெல்லாம் ஓடிடி தளத்தில் படத்தைப் பார்த்துக்கொள்வோம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர்.
சிறிய படங்களைப் பார்க்க ரசிகர்கள் வருவதில்லை என்பது திரையரங்கு உரிமையாளர்களின் ஆதங்கம்.
தற்போதைய நிலையில் திரையுலகம் எதிர்கொண்டிருக்கும் பெரிய சவால் படங்களின் வியாபாரம்தான். ஓடிடி நிறுவனங்களின் முடிவால் முன்னணி நாயகர்களின் படங்கள்கூட எதிர்பார்த்த தொகைக்கு விற்பனையாவதில்லை. இதனால் பல படங்கள் வெளியிட முடியாமல் முடங்கியுள்ளன. சில ஓடிடி தளங்கள் படம் வெளியான பிறகு படங்களை வாங்குகின்றன.
அதுவும்கூட லாபத்தில் பங்கு என்ற அடிப்படையில்தான் வாங்க முடிகிறது. இதனால் வருமான இழப்பு ஏற்படுகிறது என்கிறார் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ்குமார்.
ஒரே சமயத்தில் பல படங்கள் வெளியாவதால் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை என்பதையும் ஒரு தரப்பு சுட்டிக்காட்டுகிறது.
பல நடிகர்கள் மட்டுமல்லாமல் தொழில்நுட்பக் கலைஞர்களின் ஊதியமும் அதிகரித்துவிட்டது.
“தென்னிந்தியத் திரையுலகில் முன்பு தமிழ் சினிமா முதல் இடத்தில் இருந்தது. இப்போது நான்காம் இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டது.
“மலையாளப் படங்களுக்கு ஓடிடி தளங்களிலும் நல்ல மவுசு உள்ளது. அதேபோல் கன்னடத்தில் புது முகங்களை நம்பி படம் எடுப்பதால் தயாரிப்புச் செலவை வெகுவாகக் குறைக்க முடிகிறது.
“தெலுங்குத் திரையுலகின் வியாபாரச் சந்தை முன்பைவிட பெரிதாகிவிட்டது. தமிழ் சினிமாவும் இதேபோன்று திட்டமிட்டு முன்னேற வேண்டும் என்பது அனைவரது விருப்பம்,” என்கிறார் இயக்குநர் பொன்ராம்.
ஓடிடி, மின்னலக்க உரிமங்கள் நல்ல விலைக்குப் போகாததால் தயாரிப்பாளர்களுக்குப் பாதிப்பு இருப்பதை திரை உலகின் மற்ற தரப்பினரும் ஒப்புக்கொள்கிறார்கள்.
“இதனால் வருமானம் குறைகிறது. தயாரிப்புச் செலவைகக் குறைத்தே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு தயாரிப்பாளர்கள் ஆட்பட்டுள்ளனர். அதற்கு முதல் நடவடிக்கையாக நடிகர்கள் ஊதியத்தைக் குறைப்பதில் முனைப்பு காட்டுகிறார்கள்.
“ஒரு படத்தில் நடிக்க கோடிகளில் சம்பளம் பெறும் கதாநாயகர்கள், இதர நடிகர்கள் படம் தோல்வி அடைந்தால் நஷ்டத்தில் மட்டும் பங்கேற்பதில்லை. இதை ஏற்க முடியாது. எனவே லாப பகிர்வு அடிப்படையில் நடிக்க முன்னணி நாயகர்கள் முன்வர வேண்டும்.
“ஒரு படத்தில் நடிக்க பேசப்படும் சம்பளத்தில் பாதியை மட்டும் பெற்றுக் கொண்டு மீதி தொகையை படம் வெளியான பிறகு பெற்றுக்கொள்ள சம்பாதிக்க வேண்டும்.
“அப்போதுதான் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தில் இருந்து தப்பிக்க முடியும்,” என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள்.

