சான்றிதழ் கோரிய நடிகர் பார்த்திபன்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சான்றிதழ் கோரிய நடிகர் பார்த்திபன்: உயர் நீதிமன்றம் உத்தரவு

1 mins read
1a165d91-7f17-467a-84da-5a911362a0d6
பார்த்திபன். - கோப்புப்படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்.

சென்னை: தமிழகத்தில் சாதி, சமயமற்றவர் எனச் சான்றிதழ் பெற விரும்புவோருக்கு உடனடியாகச் சான்றிதழ் வழங்கும் வகையில் புதிய சட்டம் அல்லது அரசாணையை இயற்றக் கோரி, நடிகர் பார்த்திபன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாகத் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் சாதி, சமயமற்றவர் எனச் சான்றிதழ் கோரி விண்ணப்பிப்பவர்களின் மனுக்களைப் பரிசீலிக்கும் வகையில் வருவாய்த் துறை அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி அரசாணை பிறப்பிக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

எனினும், அன்றைய காலகட்டத்தில் அரசின் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே சுமுகமான உறவு இல்லாததால், அந்த உத்தரவு நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

தற்போது அத்தகைய சூழல் நிலவவில்லை என்பதால், சாதி, சமயமற்றவர் எனச் சான்றிதழ் கோருவோருக்கு உடனடியாக நிவாரணம் அளிக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று நடிகர் பார்த்திபன் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பொதுநல மனு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் உள்துறை, வருவாய்த் துறை மற்றும் சட்டத் துறைச் செயலாளர்கள் 4 வார காலத்திற்குள் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டு, விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்