பெயர் என்பது சும்மா பெயருக்காக வைப்பதில்லை. அது அவன், அவள் இந்த உலகத்தில் வாழ்வதற்கான அடையாள அட்டை போன்றது; ஆதாரம் போன்றது.
அதனால்தான் பிள்ளைகளுக்கு மிகுந்த கவனத்துடன் பெயர் வைப்பார்கள்.
எல்லாப் பிள்ளைகளுக்கும் நிச்சயம் பெயர் இருக்கும். இங்கே இந்தக் கட்டுரையில் நாம் காணவிருப்பது பேர் சொல்லும் பிள்ளைகளைப் பற்றி….
தன் மூத்த மகனுக்கு ‘திருநீலகண்டன்’ என பெயரிட்டதால் கோபித்துக் கொண்டு தன் தாயாரின் வீட்டுக்குப் போய்விட்டார் அந்தத் தாய். இரண்டு மாதங்களுக்குப் பின் பெரியவர்களின் சமரசத்தை ஏற்று கணவரின் வீட்டுக்குத் திரும்பினார்.
“என்னதான் உன் பிரச்சினை?”
“பிள்ளையோட பெயரை மாற்ற வேண்டும்.”
“ஏன் மாற்ற வேண்டும்?”
“நாம் வைணவர்கள், நம் பிள்ளைக்கு வைணவக் கடவுள் பெயரைத்தான் வைக்க வேண்டும். ஆனால், நீங்களோ சைவக் கடவுளான சிவனின் பெயரை வைத்திருக்கிறீர்கள்”.
“சரி, என்ன பெயர் வைக்கலாம்?”
“சக்கரபாணி”
“பெயர் நன்றாக உள்ளதே... இதையே வைக்கலாம்.”
காலங்கள் கடந்தது. அத்தம்பதியர் தங்களது இளைய மகனுக்கு ‘ராமச்சந்திரன்’ எனப் பெயர் சூட்டினார்கள். அந்தக் குழந்தை, ‘மருதூர் கோபால மேனன் ராமசந்திரன்’ என்கிற எம்.ஜி.ஆர்.
ராமுச்சி, ராம், ராமு இப்படித் தன் உறவினர்களால் அழைக்கப்பட்ட ராமச்சந்திரன், சினிமாவில் நுழைந்ததும் ‘எம்.ஜி.ராமச்சந்திரன்’ எனப் பெயர் சூட்டப்பட்டார்.
காலச்சக்கரத்தின் சுழற்சியால், பின்னர் ரசிகர்களால் எம்ஜிஆர் எனக் கொண்டாடப்பட்டு, தமிழக முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் என்ற இறவாப்புகழோடு திகழ்கிறார். அவருடைய அண்ணன்தான் எம்.வி.சக்கரபாணி.
சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் எனும் அண்ணாவின் நாடகம் மூலம், தந்தை பெரியாரை வியக்க வைத்து, அவரால் சிவாஜி என்கிற சிறப்புப் பெயருடன் ‘சிவாஜி கணேசன்’ ஆகி உலகப் புகழ்பெற்ற நடிகரானார்… விழுப்புரம் சின்னைய்யா பிள்ளை கணேசன் மூர்த்தி எனும் வி.சி.கணேசன்.
ரஜினிகாந்தின் பிறந்தநாள் டிசம்பர் 12. ஆனால், மார்ச் 15 தான் ரஜினிகாந்தின் பிறந்தநாள் என்றால்… மூளை குழம்பிவிட்டதா என்பீர்கள். ஆனால், ரஜினிகாந்தின் பிறந்தநாள் மார்ச் 15 என்பது நிஜமோ நிஜம்.
மராட்டிய மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ரஜினிக்கு அவரின் குடும்பத்தினர் வைத்த பெயர் ‘சிவாஜி ராவ் கெய்க்வாட்’. இதன்படி ரஜினியின் பிறந்தநாள் டிசம்பர் 12.
ஆனால் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் பாண்டியன் பாத்திரத்துக்காக இயக்குநர் கே.பாலசந்தர் சிவாஜி ராவை தேர்வு செய்து ரஜினிகாந்த் என மாற்றியது மார்ச் 15ஆம் தேதிதான்.
அதனால்தான் அன்றைய தினம், ரஜினியை வைத்து ஆரம்பக் காலங்களில் படம் தயாரித்தவர்களுக்கும் அவற்றை இயக்கியவர்களுக்கும் ரஜினி வீட்டில் விருந்தளிக்கப்பட்டு வந்தது. அவர்களை இவ்வாறு கௌரவிப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகச் சொல்வாராம் ரஜினி.
வாலிபக் கவிஞர் என இன்னும் ரசிகர்களால் கொண்டாடப்படும் கவிஞர் வாலியின் இயற்பெயர் ரங்கராஜன். அந்தக் காலத்தில் பிரபல ஓவியர் மாலி மிகவும் புகழ்பெற்று திகழ்ந்தார்.
அதனால் அவரைப் போலவே சுருக்கப் பெயராக ‘வாலி’ என தன் பெயரை வைத்துக்கொண்டார். இராமாயணம் புராணக்கதையின் மிக முக்கிய கதாபாத்திரத்தின் பெயர் வாலி என்பது குறிப்பிடத்தக்கது.
கவியரசர் கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. காலத்தால் அழியாத பாடல்களைத் தந்தவர். கண்ணதாசனுடன் கருத்து வேறுபாடு கொண்டாலும், அவரின் தமிழ் நடையின் மீது காதல் கொண்ட முதல்வர் எம்ஜிஆர், ‘அரசவைக் கவிஞர்’ எனப் பதவி தந்து அழகு பார்த்தார்.
முருக பக்தரான சிவகுமார், தனது இரு மகன்களுக்கும் முருகனின் பெயர்களான, சரவணன், கார்த்திகேயன் எனப் பெயர் வைத்தார். சரவணன் நடிக்க வந்த பிறகு ‘சூர்யா’வானார்.
முன்பு ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என விஜயசாந்தி அழைக்கப்பட்டார். இன்று டயானா மரியம் குரியன் அவ்வாறு அழைக்கப்படுகிறார். நயன்தாராவின் இயற்பெயர்தான் ‘டயானா மரியம் குரியன்’.
ஆஷா கேளுண்ணி குட்டி எனும் ஆஷாகுட்டி, திரையுலகில் ரேவதி என்ற பெயரில் அறிமுகமாகி, கவர்ச்சி காட்டாத கண்ணியமான நடிகை எனப் பெயர் பெற்றார்.
ஏற்கெனவே தமிழ்த் திரையுலகில் ஒரு சுஹாசினி இருந்ததால் இந்த சுஹாசினி ‘சிநேகா’ ஆனார்.
உடலை ‘ஐ’ என தூணாக்கவும், ‘அய்யய்யோ’ என துரும்பாக்கவும் பரம(க்குடி) சக்தி படைத்தவர் கென்னடி ஜான் விக்டர். அவரின் சினிமா உலகப் பெயர் விக்ரம்.
‘வெங்கட் பிரபு’ இன்று தேசிய விருது பெற்ற நடிப்பு ‘அசுரன்’. அவர்தான் தனுஷ்.
‘உலகநாயகன்’ கமல்ஹாசனின் இயற்பெயர் பார்த்தசாரதி.
ஆக.. இயற்பெயரோ... செயற் பெயரோ… பேருக்கு அமைவதில்லை பெயர். காரணமின்றி அமைவதில்லை பெயர்கள்.
இவ்வாறு மேலும் பலர் தங்களுடைய பெயரை மாற்றிக் கொண்டு திரையுலகில் அறிமுகமாயினர். ஆனால் அவர்களில் ஒருசிலரால் மட்டுமே தங்கள் திறமையின் உதவியோடு முத்திரை பதிக்க முடிந்தது.