தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நட்சத்திரங்களும்... லட்சங்களும்... கோடிகளும்!

5 mins read
04b703bf-866a-449a-ac70-720ae32c41bb
ரஜினி. - படம்: ஊடகம்
multi-img1 of 2

விலைவாசி உயர்வு என்பது எல்லாவற்றிற்கும் பொருந்தும் என்றால், அது சினிமாவுக்கும் பொருந்தும்தானே!

நட்சத்திரங்களின் சம்பளம் எப்படியெல்லாம் எகிறிக் கொண்டிருக்கிறது என்பதைத்தான் இந்தக் கட்டுரையில் காணப்போகிறோம்.

தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த எம்ஜிஆர் அதிகபட்சமாக, 15 லட்ச ரூபாய்க்கு மேல் தனது சம்பளத்தை உயர்த்தவில்லை.

“யாரெல்லாமோ கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் நீங்கள் அதிகபட்சமாக லட்சங்களில் மட்டும் சம்பளம் வாங்கியிருக்கிறீர்கள். எவ்வளவோ சாதனைகளைச் செய்த உங்களை கௌரவப்படுத்த வேண்டும்,” எனச் சொல்லி, ‘படையப்பா’ படத்திற்காக சிவாஜிக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தார் ரஜினி.

ரஜினி சம்பளம்

ரஜினியின் சம்பளம் உயர்ந்த விதத்தைப் பார்ப்போம்.

கே.பாலச்சந்தரால் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் அறிமுகமான ரஜினிக்கு அப்போது சொற்ப சம்பளம்தான். ‘16 வயதினிலே’ படத்திற்கு ரூ.2,500 சம்பளம். ‘மூன்று முடிச்சு’ படத்தில் கமலுக்கு ரூ.30 ஆயிரம் சம்பளம், ஸ்ரீதேவிக்கு ரூ.3,000, ரஜினிக்கு ரூ.2,000.

ரஜினியை நாயகனாக அறிமுகப்படுத்தியவர் கதாசிரியர் - தயாரிப்பாளர் கலைஞானம்.

ஒப்பந்தம் செய்யப்போனபோது ரஜினியின் நண்பரான கே.நட்ராஜ் ரூ.15,000 சம்பளம் கேட்டார். அதுவும் மொத்தமாக வேண்டும் எனச் சொல்ல, மறுநாள் 15,000 தயார் செய்துகொண்டு போனார் கலைஞானம்.

சினிமாவுக்கு வந்த இரண்டு வருடங்களில் கதாநாயகனாக நடித்தால் மக்கள் ஏற்பாற்களா? என ரஜினி தயங்க, கதாநாயகன் வாய்ப்பை மறுப்பதற்காகவே, ரூ.50 ஆயிரம் வேண்டும் என கலைஞானத்திடம் சொல்லப்பட்டது. அசராத கலைஞானம், அந்தத் தொகையை தயார் செய்து கொண்டுபோய் கொடுத்தார். ‘பைரவி’ திரைப்படம் உருவானது.

இப்படித்தான் சில ஆயிரங்களில் இருந்து அரை லட்சமாக ரஜினியின் சம்பளம் உயர்ந்தது.

“உன்னை சிங்கப்பூர், மலேசியா அழைத்துச் சென்று ‘ப்ரியா’ எனும் படம் எடுக்கப் போறேன்,” என பஞ்சு அருணாச்சலம் சொல்லிவிட்டு, ‘என்ன சம்பளம் கேட்கிறாய் ரஜினி?’ என்றார்.

“35 ஆயிரத்துக்கும் மேல் எதிர்பார்க்கிறேன்”.

“என்னப்பா நீ? உன்னுடைய மதிப்பு உனக்கே தெரியவில்லையே.”

“ஏன் அதிகமாக கேட்டுவிட்டேனா?”

“அட.. அதில்லை... உன்னுடைய படத்தை வெளியிட விநியோகிப்பாளர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள். திரையரங்குகளில் மக்கள் கூட்டம். நல்ல வசூல் ஆகிறது,” என பஞ்சு அருணாச்சலம் சொல்ல, ரஜினியின் சின்ன கண்கள் வியப்பில் பெரிதாக விரிந்தன.

“அதனால் எல்லாவற்றையும் கணக்குப்போட்டு, நான் இந்தப் படத்திற்கு ரூ.1,10,000 உனக்கு ஊதியம் தருகிறேன்,” என்று சொல்லி ஒப்பந்தம் செய்தார்.

இப்படித்தான் லட்சம் கடந்து சம்பளம் வாங்கும் நடிகரானார் ரஜினி.

மணிரத்னத்தின் ‘தளபதி’யின் மூலம் கோடிச் சம்பளம் வாங்கும் நாயகனாக ஆனார் ரஜினி.

இன்று ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகர்களில் ரஜினியும் ஒருவர்.

‘ஜெயிலர்-2’ படத்திற்கு ரஜினியின் சம்பளம் ரூ.200 கோடியைத் தாண்டிவிட்டது.

சம்பள விஷயம் குறித்து ரஜினிக்கும் கமலுக்கும் இடையே ஒரு சங்கதி உண்டு.

கமலுடன் இணைந்து நடிப்பதே தனக்கு பாதுகாப்பு என நினைத்த ரஜினி, அப்படியே கமலுடன் பல படங்களில் நடித்தார்.

“ரஜினி, நாம் இருவரும் சேர்ந்தே நடித்துக் கொண்டிருந்தால், பொருளியல் ரீதியாக நாம் வளர முடியாது. நாம் தனித்தனியாக நடித்தால் ஆளுக்கு ஒரு ரூபாய் கிடைக்கும். சேர்ந்து நடித்தால், ஒரு ரூபாய் நோட்டை இரண்டாகக் கிழித்து ஆளுக்குப் பாதியாகக் கொடுப்பார்கள்” என்றார் கமல்.

இதனால் தெளிவடைந்த ரஜினி, தனியாக நடிக்கத் தொடங்கினார்.

ஆயிரங்களில் தொடங்கி கோடிகளில் சம்பளம் பெறுகிறார் ரஜினி!

கமல் சம்பளம்

ஐந்து வயதில் ‘களத்தூர் கண்ணம்மா’ படம் மூலம் திரைக்கு அறிமுகமான கமல், ‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ பாடலால் ரசிகர்களின் நெஞ்சில் நிலைத்தார்.

அவருக்கு சினிமாவே அம்மாவும் அப்பாவுமாக ஆனது. அன்று ஐநூறு ரூபாய் சம்பளம் பெற்றார் கமல்.

சிறுவனுக்கும் இளைஞனுக்குமான இடைப்பட்ட பருவத்தில் சில ஆயிரங்கள் சம்பளத்தில் மலையாளப் படங்களில் நடித்தார்.

‘அபூர்வ ராகங்கள்’, ‘மூன்று முடிச்சு’ படங்கள்தான் முப்பது ஆயிரம் ரூபாய் என்ற அடர்த்தியான சம்பளத்தைப் பெற்றுத் தந்தது.

பிறகு லட்சங்களில் தொடங்கிய கமலின் சம்பள வேட்டை 1990களின் தொடக்கத்தில் ரூ.50 லட்சமாக ஆனது.

‘மகாநதி’ படத்துக்காக இந்த மகா நடிகன் ஒரு கோடி ரூபாய் ம்பளம் பெற்றார்.

‘அவ்வை சண்முகி’ படத்திற்கு கமல் ஒன்றரைக் கோடி ரூபாய் கேட்டார். தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி தயங்கி மறுத்துவிட்டு, ‘நாலு ஏரியாவை வேணும்னா வாங்கிக்கோங்க’ எனச் சொல்ல, ஒப்புக்கொண்டார் கமல்.

‘அவ்வை சண்முகி’ பெரிய ஹிட்டாகாது என நினைத்த தயாரிப்பாளருக்கு வியப்பு. வசூலை வாரிக்கொடுத்தாள் சண்முகி மாமி!

அதிலிருந்து, ‘நான் கேட்கும் சம்பளம் கொடுக்க வேண்டும், அல்ல வசூல் லாபத்தில் பங்கு, அல்லது ஏரியா விநியோகம் தர வேண்டும்’ என ஒப்பந்தம் போட்டுக்கொண்டார் கமல்.

சினிமாவை விட்டு அரசியலில் தீவிரம் காட்டினார் கமல். அது எதிர்பார்த்த திருப்பத்தைத் தரவில்லை. ஆனால், சினிமா தந்தது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் தயாரித்து, நடித்த ‘விக்ரம்’ படம் ரூ.400 கோடி வசூலை அள்ளியது. கமலின் சம்பளம் ரூ.100 கோடியாக உயர்த்தப்பட்டது.

இன்று... ‘தக் லைஃப்’ படத்திற்காக சில உரிமைகள், லாபத்தில் பங்கு அடிப்படையில் என மொத்தமாக ரூ.150 கோடியை எட்டிப்பிடித்துள்ளது கமலின் சம்பளம்.

அன்றாட வசூல் அறிக்கை

கோடி கோடியாய் சம்பளம் கேட்க நடிகர்களுக்கு கூச்சமாக இருக்காதா? என்கிற கேள்வி பலருக்கும் எழும். அதற்குத்தான் ரகசிய பிரதிநிதிகளை வைத்திருக்கிறார்கள் நாயகர்கள்.

‘டெய்லி கலெக்‌ஷன் ரிப்போர்ட்’ (daily collection report) எனப்படும் ஒவ்வொரு தியேட்டரின் தினசரி வசூலையும் கண்காணிக்க விநியோகிப்பாளர்கள் தங்களது பிரதிநிதிகளை நியமித்திருப்பது வழக்கம்.

இதே பாணியில் நடிகர்களும் சில ரகசிய பிரதிநிதிகளை வைத்திருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொரு திரையரங்கிலும், தினசரி வசூல் அறிக்கையைத் தயார்செய்து சம்பந்தப்பட்ட நாயகனுக்கு அனுப்பி வைப்பர்.

இந்த வசூல் நிலவரம் மற்றும் ஓடிடி உரிமைத்தொகை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, தனது அடுத்த படத்திற்கான சம்பளத்தை தானே நிர்ணயிப்பார் அந்த நாயகன்.

நடிகர்கள் இப்படித்தான் படத்துக்குப் படம் தங்கள் சம்பளத்தை உயர்த்துகிறார்கள். வசூல் சொல்லிக்கொள்ளும்படி இல்லாத பட்சத்தில், சம்பளத்தை உயர்த்த மாட்டார்கள்.

இந்த முறையில்தான் நட்சத்திர நாயகர்கள் ஊதியம் தீர்மானிக்கப்படுகிறது.

இனி சினிமா அவ்வளவுதான், மெல்ல மெல்ல அழியப்போகிறது என்ற வாசகத்தை காலம் காலமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், ஒரு திரைப்படத்தின் விநியோக, விற்பனைத் தளங்கள் ஓடிடி, யூடியூப் எனப் புதிது புதிதாக வந்து கொண்டிருப்பதால், சினிமாவை ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்பதே நிதர்சன உண்மை.

மேலும் சில முன்னணி நடிகர்களின் சம்பள விவரங்களை பின்னர் பார்ப்போம்.

குறிப்புச் சொற்கள்