சினிமாவை ஒரு வட்டத்துக்குள் அடக்க முடியாது: சிம்பு

சினிமாவை ஒரு வட்டத்துக்குள் அடக்க முடியாது: சிம்பு

3 mins read
b9200e08-3ccb-40fe-b2d4-ad289d70b44d
சிம்பு. - படம்: சினிமா விகடன்

அண்மையில் வெளிநாடு சென்றிருந்த சிம்பு தமது பிறந்தநாளை (பிப்ரவரி 3) அங்கேயே கொண்டாடினார்.

பலருக்குத் தனிப்பட்ட வாழ்க்கையும் சினிமா வாழ்க்கையும் வெவ்வேறாக இருக்கும் எனில் சிம்புவுக்கு மட்டும் இரண்டும் ஒன்றுதான்.

‘உறவைக் காத்த கிளி’ படத்தின் மூலம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக இவர் அறிமுகமாகி ஏறக்குறைய 42 ஆண்டுகள் ஆகின்றன.

“இந்த நீண்ட பயணத்தை நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. இது மட்டும்தானா வாழ்க்கை என்று கேட்டால் அதற்கான பதில் என்னிடம் இல்லை‌.

“ஆனால், இதற்கு மேலும் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்று தோன்றுகிறது. என் அனுபவத்தில் இப்போதுவரை சினிமா குறித்து நான் புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் உண்மை. அதற்கான காரணம், சினிமாவைப் பலரும் நினைப்பதுபோல் ஒரு வட்டத்துக்குள் அடைக்க முடியாது.

“சினிமாவைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் எது சரியான சினிமா என்பதை அடையாளம் காண வேண்டும்.

“நடிப்பு பிடிபட வேண்டும். இந்த மாய உலகத்துக்குள் இருக்கும் தொழில்நுட்ப விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். திரையுலகிலும் அரசியல் உண்டு. அதையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதால் இங்கு எதுவும் எளிதில் அமைந்துவிடாது,” என்று சொல்லும் சிம்புவின் வார்த்தைகளில் முன்னைவிட மிகுந்த பக்குவம் வெளிப்படுகிறது.

தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் ‘அரசன்’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இது நீண்ட காலத்துக்கு முன்பே அமைந்து இருக்க வேண்டிய கூட்டணி என்கிறார்.

“தயாரிப்பாளர் தாணு, மூவரும் இணைந்து பணியாற்றலாம் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். ‘விடுதலை-2’ படத்தை முடித்துவிட்டு ஓர் இடைவெளியில் இருந்தார் வெற்றிமாறன். எனக்கும் கால்ஷீட் ஒதுக்க தேவையான தேதிகள் இருந்தன.

“அதனால் எல்லாம் சரியாக அமைந்ததில் சிக்கல் இன்றி ‘அரசன்’ படத்துக்கான பணி தொடங்கிவிட்டது. இப்படிப்பட்ட கூட்டணி அமைந்ததில் எனக்கும் மகிழ்ச்சிதான்,” என்று விகடன் ஊடகப் பேட்டியில் உற்சாகத்தைப் பகிர்ந்துள்ளார் சிம்பு.

‘அரசன்’ படத்தில் மூன்று வித்தியாசமான தோற்றங்களில் திரையில் தோன்றுவாராம். அதற்காக உடல் எடையைக் கணிசமாகக் குறைத்து இருக்கிறார்.

மேலும், நீண்ட நாள்களாக அனிருத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற விருப்பமும் இந்தப் படத்தின் மூலம் நிறைவேறி உள்ளதாம்.

“அனிருத்துக்கும் என்னுடன் இணைந்து பணியாற்றும் எண்ணம் இருந்தது. அதற்கான சூழல் ‘அரசன்’ படத்தின்மூலம் அமைந்தது.

“வெற்றிமாறன் எப்போதும் வித்தியாசமான முறையில் படைப்புகளை உருவாக்குபவர். அவருக்கு என தனிப் பாணி உள்ளது. அதை நேரில் பார்க்கும்போது நமக்கும் பிடித்துப் போய்விடும்.

“நடிப்பைக் கற்றுக்கொள்ள வேண்டும், தரமான படங்களை உருவாக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் இயக்குநர் அவர். அனைவர் மீதும் அன்பும் அக்கறையும் கொண்டுள்ள அவரை தனிப்பட்ட வகையிலும் மிகவும் பிடிக்கும்,” என்று சொல்லும் சிம்பு அண்மையில் தாய்லாந்து சென்று தற்காப்புக் கலைகளை கற்று வந்துள்ளார்.

தாய்லாந்தை தேர்ந்தெடுக்க சிறப்புக் காரணம் என்று எதுவும் இல்லையாம், இந்தியாவுக்கு அருகில் உள்ள நாடு என்பதால் அதைத் தேர்ந்தெடுத்ததாகச் சொல்கிறார்.

“மேலும், சென்னையில் இருக்கும்போது என்னால் சுதந்திரமாக வெளியே சென்றுவர முடியாது. சாலையில் நடந்து செல்லவோ கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளவோ இயலாது.

“ஆனால், வெளிநாடு சென்றால் இதையெல்லாம் செய்ய முடியும். தற்போது உடற்பயிற்சியில் கவனம் செலுத்துவதால் கிடைத்த நேரத்தில் இப்படி வெளியே சென்று வருகிறேன்,” என்று சொல்லி சிரிக்கிறார் சிம்பு.

இப்படித்தான் அண்மையில் ஒரு நகைக்கடை திறப்பு விழாவுக்காக மலேசியா சென்றபோது அஜித்தைச் சந்தித்துள்ளார். கார் பந்தயங்களில் கவனம் செலுத்திவரும் அவரைத் தொந்தரவு செய்யக்கூடாது என்றுதான் முதலில் நினைத்தாராம்.

ஆனால், சிம்பு பின்னர் தொடர்புகொண்டு பேசியதும் உற்சாகமான அஜித் உடனே சந்திக்க விரும்பினாராம்.

“நேரில் சந்தித்தபோது கார் பந்தயம் குறித்து மிக விரிவாக விளக்கினார் அஜித். அவர் சொன்னதைக் கேட்டபோது வியப்பாக இருந்தது. அவரை நேரில் சந்தித்துப் பேசியதில் எனக்கும் மகிழ்ச்சிதான்,” என்று ஊடகப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் சிம்பு.

குறிப்புச் சொற்கள்