‘பாதி ராத்திரி’ என்ற மலையாளப் படத்தின் மூலம் மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார் நடிகை நவ்யா நாயர்.
நடிப்பு ஒரு பக்கம் என்றால், மற்றொரு பக்கம் நடனம் எனத் திட்டமிட்டு நாட்டிய நிகழ்ச்சிகளையும் அரங்கேற்றி வருகிறார்.
“நடிக்க வந்த புதிதில் நான் நடித்த மலையாள, தமிழ்ப் படங்களை பார்த்த எத்தனையோ பேர் வியந்து போயினர்.
“ஒரு கதாபாத்திரத்துடன் ஒன்றிப்போகவும் அப்பாத்திரமாகவே கரைந்துபோகவும் வாய்ப்பளிக்கும் கதைகள் அமைந்தால் நல்லது என நான் நினைப்பேன். அது எனக்குத் தானாக நேர்ந்தது,” என்கிறார் நவ்யா நாயர்.
தன் காலத்து முன்னணி நாயகர்களுடனும் இணைந்து நடித்துவிட்ட இவருக்கு, சிறு வயதில் சினிமா ஆசை அறவே இல்லையாம். இவரது குடும்பத்தில் யாருக்குமே திரையுலகத் தொடர்புகள் இல்லை என்கிறார்.
“கல்லூரியில் படித்தபோது பல குரலில் (மிமிக்ரி) பேசுவேன். அது போன்ற ஒரு நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு நடிக்க அழைத்தனர். முயன்றுதான் பார்ப்போமே என்ற எண்ணத்துடன் நடிக்கத் தொடங்கினேன்.
“அதன் பிறகு நடந்ததெல்லாம் நான் கொஞ்சமும் நினைத்துப் பார்த்திராத ஆச்சரியங்கள்,” என்று சொல்லும் நவ்யா நாயர், இரண்டு முறை கேரள மாநிலத்தின் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றுள்ளார்.
தமிழில் ‘ஆடும் கூத்து’ படத்தில் மணிமேகலா, கற்புக்கரசி, பிரபா மேனன் என இவருக்கு அமைந்த மூன்று கதாபாத்திரங்களும் பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்றுத்தந்தன.
தொடர்புடைய செய்திகள்
திடீரெனத் திருமணம் செய்துகொண்டு குடும்பம், ஒரே மகன் என்று திரையுலகை விட்டு ஒதுங்கிவிட்டார். ஆனாலும் பரதநாட்டியத்தை மட்டும் கைவிட முடியவில்லை என்கிறார்.
“பரதம் என் உயிருடனும் ஆன்மாவோடும் கலந்துவிட்டது. ஒரு தொழிலில் இருக்கும்போது இன்னொரு விருப்பத்தைக் கட்டிக்காப்பது கடினம். ஆனால் நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருந்த போதும்கூட என் விருப்பமெல்லாம் பரதத்தில்தான் இருந்தது.
“முன்பு சினிமாவில் நடிப்பது ஒரு வேலையைப் போன்று இருந்தது. இப்போது அது எனக்கு மனத்திற்கு விருப்பமான வாழ்க்கை அம்சமாக மாறிவிட்டது. ஆனால் இனி நான் அவசியமாகத் தேவைப்படும் படங்களில் மட்டும் நடிப்பேன்.
“மனமும் பக்குவம் அடைந்துவிட்டதால் நல்ல கதைகளாகத் தேடுகிறேன். நடிப்பு விளையாட்டல்ல, இப்போது ‘பாதி ராத்திரி’ படத்தையும் அப்படித்தான் தேர்வு செய்தேன். இனி ஒவ்வொரு படமும் எனக்கு மிக முக்கியம்.
“படம் இயக்கும் ஆசையும் உண்டு. அதற்காக ஒரு கதையை எழுதி வைத்திருந்தேன். ஒரு பெண்ணுக்கு மூன்று உலகங்கள் உள்ளன. மனத்துக்குள் ஒரு உலகம், வீட்டுக்குள் ஒரு உலகம், சமூகம் என்கிற மூன்றாவது உலகம். இதை அலசும் வகையில் அந்தக் கதை இருக்கும்.
“எனினும், எப்போது இயக்குநர் ஆவேன் என்பது இப்போது ஏதும் கூற முடியாது. காரணம், அது எப்போது நிகழும் என்பது எனக்கே தெரியாது.
“தற்போது எனது கவனம் முழுவதும் நல்ல கதைகள், பரதக் கலையில் மட்டுமே உள்ளது,” என்கிறார் நவ்யா நாயர்.
மீண்டும் நடிக்க வந்துள்ள இவருக்கு, ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

