தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சண்டையை விரும்பும் சினிமா நாயகிகள்

4 mins read
1dbe3626-5678-4e05-b31f-78982edee77a
விஜயலலிதா. - படம்: ஊடகம்
multi-img1 of 8

தமிழ் சினிமா என்று மட்டும் சுருக்கிவிட முடியாது. உலக சினிமாவிலும்கூட என்றைக்குமே அடிதடிகள் (ஆக்‌ஷன்) படங்களுக்குத் தனி மவுசு உண்டு.

காரணம், சண்டைப் படங்களில் ரசிகர்கள் கதையைத் தேடுவதில்லை. தங்கள் அபிமான நாயகனின் அழகு, ஸ்டைல், கம்பீரம், கூடவே சில அதிரடி வசனங்கள் இருந்தால் போதும். ரசிகர்களுக்கு திருமண வீட்டில் மூக்குப்பிடிக்க உணவு சாப்பிட்ட மனநிறைவு கிடைத்துவிடும்.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, கதாநாயகர்களுக்கு இணையான புகழோடு வலம் வருபவர்கள் நாயகிகள்.

‘ஆக்‌ஷன்’ என்றதும், 40 வயதைக் கடந்த தமிழ் ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வரும் நடிகை விஜயசாந்தி. இன்றைய இளையர்களுக்கு மாளவிகா, ஆண்ட்ரியாவின் நினைவு வரக்கூடும்.

சமந்தா, சாய் தன்ஷிகா, ஜோதிகா, தமன்னா, வரலட்சுமி, சினேகா, நயன்தாரா, சிம்ரன், அனுஷ்கா எனப் பல நடிகைகள் வெவ்வேறு காலகட்டங்களில் ‘ஆக்‌ஷன்’ பாத்திரங்களில் மிளிர்ந்துள்ளனர்.

சரி, தமிழ்த் திரையுலகின் முதல் அதிரடி நாயகி யார்?

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே வெளியான பல தமிழ்த் திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளில் நாயகியாக நடித்து அசத்தியவர் எஸ்.டி. சுப்புலட்சுமி. சரித்திரப் படங்களிலும் நடித்துள்ளார்.

‘நவீன சதாரம்’ என்ற படத்தில்தான் முதன்முதலில் திரையில் தோன்றி சண்டைபோட்டார் சுப்புலட்சுமி.

கடந்த 1939ம் ஆண்டு வெளியான ‘தியாக பூமி’ படத்தில் அந்தக் காலகட்டத்திலேயே ஆங்கிலேயரை எதிர்த்து இந்திய விடுதலைக்காகப் படங்களில் நடித்தவர் சுப்புலட்சுமி.

இவருக்குப் பிறகு கதாநாயகிகள் யாரும் முழுநீள சண்டைப் படங்களிலோ, அதற்கான கதாபாத்திரங்களிலோ கவனம் செலுத்தவில்லை.

கடந்த 1970ம் ஆண்டு நடிகை விஜயலலிதா நடித்த ‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. பல படங்களில் அவர் ‘ஆக்‌ஷன்’ நாயகியாக நடித்து அசத்தினார். பொதுவாக கவர்ச்சிகரமான வேடங்களை மட்டுமே அதிகம் ஏற்று நடித்து வந்த விஜயலலிதா, ஒரு கட்டத்தில் தமிழ்த் திரையுலகின் ‘ஆக்‌ஷன்’ நாயகி என்று ரசிகர்களால் பாராட்டப்பட்டார்.

தமிழ் சினிமா வரலாற்றில் அதிக அளவிலான திரைப்படங்களில் காவல்துறை, ராணுவ அதிகாரியாக வேடமிட்டு அதிக சண்டைக் காட்சிகளில் நடித்து மிடுக்காக நடைபோட்டவர் நடிகை விஜயசாந்தி.

‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகை இவர்தான். எவ்வளவு கடினமான காட்சியாக இருந்தாலும், ‘டூப்’ போடாமல், தாமே நடிக்கும் வழக்கமுடையவர் விஜயசாந்தி. அவர் புகழின் உச்சியில் இருந்த வேளையில், மற்ற முன்னணி நாயகர்கள் சண்டைப் படங்களில் நடிக்கத் தயங்கினர்.

ஆனால் விஜயசாந்தியோ ‘வெல்வட் நகரம்’, ‘கிராக்’ ஆகிய படங்களில் சண்டைக் காட்சிகளில் நடித்து அசத்தினார்.

விஜயசாந்திக்குப் பிறகு தென்னிந்திய மொழிகளில் ‘ஆக்‌ஷன்’ நாயகிகளுக்கு பஞ்சம் ஏற்பட்டது. பின்னர் காலப்போக்கில் கதை நாயகியாக முக்கியத்துவம் பெற்ற சில நடிகைகள் மெல்ல சண்டைப் படங்களின் பக்கம் பார்வையைத் திருப்பினர்.

காரணம், பெரிய நாயகர்களின் படங்களில் சில நடிகைகள் இடம்பெற்ற சண்டைக் காட்சிகளுக்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பு இதற்கு முக்கியக் காரணம்.

‘கோவில்பட்டி வீரலட்சுமி’ மூலம் ‘ஆக்‌ஷன்’ பாதைக்குத் திரும்பிய சிம்ரன், ‘தி லாஸ்ட் ஒன்’ படத்தின் மூலம் முழு அதிரடி நாயகியாக மாறியுள்ளார்.

அழகு பொம்மைகள் என வர்ணிக்கப்பட்ட கீர்த்தி சுரேஷ் (‘ரிவால்வர் ரீட்டா’), ஹன்சிகா (‘காந்தாரி’), திரிஷா (‘ராங்கி’), நயன்தாரா (‘இமைக்கா நொடிகள்’) ஆகியோரும் தனி நாயகியாக நடிக்கும் படங்களில் அதிக சண்டைக் காட்சிகளை வைக்குமாறு இயக்குநர்களைக் கேட்டுக்கொள்வதாகத் தகவல்.

‘பாகுபலி’யில் அடக்கி வாசித்த அனுஷ்கா, ‘காட்டி’ படத்தில் மிரள வைத்திருக்கிறார். ‘பாகுபலி’ படம் தமன்னாவுக்குள் ஒளிந்துகிடந்த ‘ஆக்‌ஷன்’ நாயகியை வெளிக்கொணர உதவியது.

முன்னாள் நாயகியான மந்த்ரா ‘உசுரே’ படம் மூலம் வில்லியாகிவிட்டார்.

‘விடாமுயற்சி’யில் அஜித்துக்கு வில்லியாக மாறிய ரெஜினா, தமிழ் அல்லாத பிற மொழிப் படங்களிலும் எதிர்மறை வேடங்களில் கவனம் ஈர்க்கிறார்.

சமந்தா, சாய் தன்ஷிகா, ஜோதிகா, தமன்னா, வரலட்சுமி, சினேகா ஆகியோர் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி தங்களை ‘ஆக்‌ஷன்’ நாயகிகளாக முன்னிலைப்படுத்த முயற்சி மேற்கொண்டனர். அவர்கள் எடுத்த முடிவு சரியோ தவறோ, தொடர்ந்து அத்தகைய வாய்ப்புகள் அமையாவிட்டாலும் அவர்கள் நடித்த படங்கள் நல்ல பெயரை வாங்கித்தந்தன.

அண்மைய வரவுகளில் ‘கட்டாகுஸ்தி’ படத்தில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடித்த ஐஸ்வர்யா லட்சுமி, சண்டைக் காட்சிகளில் நடித்து கவனம் பெற்றுள்ளார்.

வரலட்சுமி சரத்குமார் தெலுங்கில் நடித்துள்ள சண்டைப் படங்கள் வசூல் ரீதியில் வெற்றி பெற்றுள்ளன. அதனால் தொடர்ந்து அத்தகைய வேடங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முழுநீள ‘ஆக்‌ஷன்’ படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

“இதற்கு முன்பு நடித்த படங்களில் என்னால் எத்தகைய கடினமான, வேகமான கதாபாத்திரங்களிலும் நடிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளேன். அந்த வகையில், சண்டைப் படங்களில் என்னால் பெயரெடுக்க முடியும்,” என்கிறார் ஐஸ்வர்யா.

மலையாள நடிகை நிவேதா தாமஸ், தற்காப்புக் கலைகளில் முறைப்படி தேர்ச்சி பெற்றவர். அதனால் சில சண்டைப் படங்களில் அவரால் வேகம் காட்ட முடிந்தது.

“சண்டைப் படங்களில் நடிப்பதால் மட்டும் ஒரு நடிகையின் ஊதியம் அதிகரித்துவிடாது. எனினும், முன்னணி நாயகர்களைப் போல் தங்களுக்கும் பெயர், புகழ் சம்பாதிக்க விரும்பும் நடிகைகள்தான் இதுபோன்ற படங்களில் நடித்து மெனக்கெடுகிறார்கள். அவர்களில் விஜயலலிதா, விஜயசாந்தி போன்ற சிலருக்குத்தான் காலம் கைகொடுக்கிறது.

“பொதுவாக, நடிகைகள் திருமணம் செய்துகொண்டால் திரையுலகில் இருந்து ஓய்வு பெற்றதாகக் கருதப்படுகிறது. அதன் பிறகு நடிக்க வந்தாலும் அக்கா, அண்ணி, அம்மா போன்ற வயதான கதாபாத்திரங்கள்தான் அமையும்.

“ஆனால், இந்த ‘ஏஐ’ காலகட்டத்தில் திரையில் தோன்றும் காட்சிகள் மட்டுமல்ல, திரையுலகமே மாற்றம் கண்டுள்ளது.

“இன்றைய தேதியில் திறமையும் தொழில்நுட்பமும் சேரும் பட்சத்தில், யார் வேண்டுமானாலும் ஆக்‌ஷன் நாயகனாக, நாயகியாக திரையில் ஆதிக்கம் செலுத்த முடியும். இந்த சூட்சமம் இப்போது நடிகைகளுக்கும் தெரிந்துள்ளது.

“எனவே, திரையுலகிலும் இனி ஆண், பெண் என்ற பேதம் இல்லை,” என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள்.

குறிப்புச் சொற்கள்