சினிமாதான் எனது கனவு: திவ்யா துரைசாமி

3 mins read
d8c0ad7d-47b5-432c-87c9-4c42e8b095ea
நடிகை திவ்யா துரைசாமி. - படம்: ஊடகம்

சினிமாவில் நடிப்பது என்பது கனவுபோல் இருந்தது என்பதைவிடவும் அதுதான் எனது கனவாகவே இருந்தது. அதற்காகத்தான் தொலைக்காட்சியை விட்டுவிட்டு திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தேன் என்கிறார் நடிகை திவ்யா துரைசாமி.

திரையில் தோன்றவேண்டும் என்ற கனவோடு வந்த எனக்கு நான் எதிர்பார்த்தது போலவே ஒரு பொன்னான பட வாய்ப்பும் மனதுக்குத் திருப்தியான பாத்திரமும் கிட்டியது.

அதற்கு ரசிகர்களிடம் இருந்து பாராட்டுகள் கிடைக்கும்போது மனநிறைவும் மகிழ்ச்சியும் பொங்கியதாகச் சொல்லும் திவ்யா, இதற்காகத்தானே படாதபாடு பட்டோம் என்ற உணர்வும் மேலோங்கியதாகக் கூறுகிறார்.

தமிழக வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில் தனது ‘வாழை’ பட அனுபவம், காதல் குறித்துப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘வாழை’ படத்தில் வாழைத் தார் சுமந்து, ஏழ்மையின் உச்சத்தில் வாழ்பவராக மிகையில்லா நடிப்பை வெளிப்படுத்தி தனது பாத்திரத்துக்கு பெருமை சேர்த்திருந்தார் திவ்யா.

செய்தி வாசிப்பாளராக ஊடகத் துறையில் கவனம் ஈர்த்த இவர், ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தின் மூலம் தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கினார்.

தொடர்ந்து ‘மதில்’, ‘குற்றம் குற்றமே’, ‘எதற்கும் துணிந்தவன்’, ‘சஞ்சீவன்’, ‘புளூ ஸ்டார்’ உட்பட பல படங்களில் நடித்தவருக்கு ‘வாழை’ ஏராளமான ரசிகர்களின் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் அள்ளிக்கொடுத்துள்ளது.

‘‘வாழை’ படத்தில் நாயகியாக நடிக்கவேண்டும். இப்படம் எனது வாழ்க்கையைப் பற்றிய படம். குளிரூட்டப்பட்ட ஏசி கேரவனில் உட்கார்ந்து நடித்துவிட்டுப் போகும் வழக்கமான படம் கிடையாது. ரொம்ப ரொம்ப சிரமமான பாத்திரம்.

“உடல் வலிமை, மன வலிமை இருந்தால் மட்டுமே இந்தப் பாத்திரத்தை செய்யமுடியும். நீ உழைக்கத் தயாராக இருந்தால் உனக்கு வாழ்க்கையில் மிகச் சிறந்த படத்தைக் கொடுப்பேன். என்னை நம்பி வா,” என இயக்குநர் மாரி செல்வராஜ் என்னை அழைத்தார்.

முதலில் நம்மைப் பற்றி தெரிந்துதான் கூப்பிடுகிறாரா, தெரியாமல் கூப்பிடுகிறாரா என்ற பயம் இருந்தது.

படத்தில் ஒப்பந்தமான பின்னர் என்னை முழுமையாக அர்ப்பணித்து ‘வாழை’யின் ஒரு பகுதியாக நானும் மாற ஆரம்பித்தேன்.

“படப்பிடிப்பின்போது ஆரம்பத்தில் வாழைத் தார்களைச் சுமப்பது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால், அதுதான் அந்தப் பாத்திரத்தின் ஆன்மா என்பதைப் புரிந்துகொண்டேன். அந்தப் பெண்ணுக்கு அதுதான் வாழ்க்கை எனும்போது எந்தக் கோணத்திலும் அதனை கடினமான வேலையாகப் பார்க்கமுடியாது.

“ஒருநாள், இரண்டு நாள் எனத் தொடர்ந்து சுமையை சுமக்க ஆரம்பித்து நாளடைவில் பழகிப் போய்விட்டது. மற்றபடி ‘வேம்பு’வாக இயல்பான நடிப்பைக் கொடுக்க நினைக்கும்போது அது பெரிய சவாலாகத் தெரிந்தது.

“அது கற்பனையில் உருவான கதாபாத்திரம் அல்ல. இயக்குநர் மாரி செல்வராஜின் வாழ்க்கையில் கடந்து போனவர்களின் பாத்திரம். உண்மையாக வாழ்ந்த ஒருவரைப்போல் நடிப்பது என்பது நிச்சயம் சவாலான ஒன்றுதான். அதற்கான உடல் உழைப்பும் கடினமாக இருந்தது.

“சில நாள் பழக்கத்துக்குப் பின்னர் நானும் கொஞ்சம் கொஞ்சமாக ‘வேம்பு’வாக மாறிவிட்டதாக உணர்ந்தேன்,” என்கிறார் திவ்யா.

ஆரம்பத்தில் கிராமத்தில் இருந்துதான் சினிமாவுக்கு வந்தேன். எனது ஊர் பெரம்பலூர். கல்லூரிப் படிப்புக்காகச் சென்னைக்கு வந்தேன்.

“எனக்கு வரும் வாய்ப்புகளில் மன திருப்தியைத் தரும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறேன். கட்டாயத்துக்காகவோ, பட வாய்ப்புகள் இல்லாத காரணங்களுக்காகவோ படங்களில் நடிப்பதற்கு ஒப்புக்கொள்வதில்லை.

“எனக்குப் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றும் படங்களில் மட்டுமே நடிக்கிறேன் என்று கூறும் திவ்யா, எல்லோருக்கும் காதலிக்கப் பிடிக்கும். அதேபோல் எனக்கும் பிடிக்கும். நான் காதலிக்கும் போது அதை மறைக்காமல் சமூக ஊடகத்தில் சொல்லிவிடுவேன். எதையும் மூடி மறைக்கும் பழக்கம் எனக்குக் கிடையாது. தற்போதைக்கு அப்படி எதுவுமில்லை,” என ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகப் பேசியுள்ளார் திவ்யா.

குறிப்புச் சொற்கள்
நடிகைஒப்பந்தம்சினிமா