அதிகமான விளம்பரமோ, ஊடக வெளிச்சமோ இன்றி தமிழ்த் திரையுலகில் கால்பதிக்கிறார் அவந்திகா.
இவர், ஒரு காலத்தில் தமிழ் ரசிகர்களால் கோவில் கட்டி ஆராதிக்கப்பட்ட நடிகை குஷ்பு மகள்.
தந்தையும் இயக்குநருமான சுந்தர்.சி, தாய் குஷ்பு ஆகிய இருவருமே மகளின் விருப்பத்துக்கு எந்தத் தடையும் விதிக்கவில்லையாம். ‘வருஷம் 16’ குஷ்புவை நினைவூட்டுகிறார் அவந்திகா.
“சினிமாவில் நடிக்க விரும்புகிறேன் என்று அம்மாவிடம்தான் முதலில் சொன்னேன். அவர் உடனே ஆதரவு தந்தார். ஆனால் கூடவே அறிவுரை கூறவும் அவர் மறக்கவில்லை.
“இங்கே தாக்குப்பிடிப்பது அவ்வளவு எளிதல்ல. கொஞ்சம் கடினமான துறை... எனவே பார்த்துக்கொள்’ என்பதுதான் அம்மா சொன்ன அறிவுரை,” என்கிறார் அவந்திகா.
சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் கல்வி நிமித்தம் லண்டனுக்குச் சென்றிருந்தாராம். கொரோனா நெருக்கடியின்போது தாயகம் திரும்பியுள்ளார். பலரது வாழ்க்கையில் திருப்புமுனைகளை ஏற்படுத்திய அந்தக் காலக்கட்டத்தில்தான் நடிகையாக வேண்டும் என அவந்திகாவும் முடிவெடுத்திருக்கிறார்.
அப்போது எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இன்றி, உடல் பெருத்திருந்தாராம். நடிகையாகும் ஆசை வந்ததுமே, தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு, மிகவும் மெனக்கெட்டு உடலைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாகச் சொல்கிறார்.
பிறகு மீண்டும் லண்டனுக்குப் பறந்தவர், அங்குள்ள நடிப்புப் பயிற்சிப் பள்ளியில் ஆறு மாதம் படித்துள்ளார். மேடைக் கூச்சத்தைத் தவிர்ப்பது, நடிக்கும்போது பின்பற்ற வேண்டிய உடல்மொழி, அசைவுகள், வசன உச்சரிப்பு, திரையில் தோன்றும் விதம் என அனைத்து நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டாராம் அவந்திகா.
தொடர்புடைய செய்திகள்
“இப்போது திரைத்துறையை வெறும் பொழுதுபோக்காகப் பார்ப்பதில்லை. இங்கு நேரம், திறமை எல்லாம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்துள்ளேன்.
“நிச்சயமாக என்னை அம்மாவோடு ஒப்பிடுவார்கள். அம்மாவைப் போல் உழைப்பு, அந்தத் தீவிரம், நடிப்பை மிகவும் அக்கறையாக எடுத்துக் கொள்வது எல்லாம் எனக்கும் அமைய வேண்டும். அதையெல்லாம் பெரிய அம்சங்களாகக் கருதுகிறேன்.
“அம்மாவைப் போல் பெயரெடுப்பது சிரமம் என்றாலும், அதற்கான பயிற்சியை மேற்கொள்வேன். அவர் மிகப்பெரிய நடிகை, கலைஞர்.
“வாரிசுகள் எல்லாருக்கும் இப்படி ஒரு சூழல் வந்துதான் சேரும். இயல்பாகவே அம்மாவின் மரபணுக்கள் என்னிடம் உள்ளன. அப்பா தன் படங்களுக்கு உழைப்பதைப் பார்த்தது, நான் அவர் கூடவே இருந்தது என எல்லாம் சேர்ந்துகொண்டதால் சினிமாவில் என்னால் நிலையான இடத்திற்கு வரமுடியும் என நம்புகிறேன்.
“எனது அறிமுகத்துக்கான வேலைகள் நடந்து வருகின்றன. எந்தப் படத்தில், யாருடைய இயக்கத்தில் நடிக்கிறேன் என்பது இன்னும் நூறு விழுக்காடு உறுதியாகவில்லை. ஒவ்வொரு நகர்வையும் நன்கு யோசித்து மேற்கொள்கிறேன்.
“மக்களுக்கு மிகவும் பிடித்த ஒரு கதாநாயகியாக இருப்பேன் என்று நம்புகிறேன். அதற்கான அறிவிப்பு இந்த ஆண்டுக்குள் நடக்கக்கூடும். இனி முழுக்க முழுக்க சினிமாதான் என் உலகம்,” என்கிறார் இளம் நாயகி அவந்திகா.