யுகேஷ் குமார்
‘பளிச்’ என காட்சிகள், ஆர்ப்பாட்டமான இசை, சத்தம் மிகுந்த நடிப்பு. இவற்றுக்கெல்லாம் மத்தியில் பிரபல நட்சத்திரத்தின் திரைத் தோற்றம். பலத்த ஆரவாரத்துடன் நடிகர் அஜித் குமாரின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் சென்ற வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியீடு கண்டது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பேட்ட, விக்ரம், மலையாளத்தில் வெளியான லூசிஃபர், எம்புரான் படங்கள்போல இதுவும் ஒரு ‘ஃபேன்பாய்’ திரைப்படம். ‘மார்க் ஆண்டனி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, தனக்கு பிடித்த நாயகனான அஜித்தை வைத்து இயக்கியுள்ளார் இயக்குநர் ஆதிக் இரவிச்சந்திரன்.
பம்பாய் தாதாவான ரெட் டிராகன் என அழைக்கப்படும் ஏ.கே., அத்தொழிலினால் தனது குடும்பத்திற்கு ஆபத்து வருகிறது என உணர்கிறார். மனைவி, மகனைக் கூட பார்க்க அனுமதி மறுக்கிறார்.
காவல்துறையிடம் சரணடைந்து, 17 வருட சிறைத் தண்டனைக்குப் பிறகு ஸ்பெயினில் இருக்கும் மகனைப் பார்க்க வருகிறார். அங்கு அவரின் மகன், போதைப்பொருள் வழக்கில் கைதுசெய்யப்பட, அவனை அவர் எப்படி மீட்டெடுக்கிறார் என்பதே மீதிக்கதை.
படத்தின் மிகப்பெரிய பலமே நடிகர் அஜித்குமாரின் திரைத்தோற்றம்தான். தனி ஆளாக படத்தை மொத்தமாகத் தாங்கியிருக்கிறார். கடந்த சில படங்களில் முகத்திலும் உடல்மொழியிலும் தெரிந்த தொய்வைச் சரிக்கட்டும் வகையில் இப்படத்தில் அத்தனை புத்துணர்ச்சியுடன் நடித்திருக்கிறார்.
அறிமுகக் காட்சியிலும் சரி, இடைவேளையில் நக்கல் நிறைந்த வில்லத்தனத்துடன் அர்ஜுன் தாஸை மிரட்டும் காட்சியிலும் சரி, இரண்டாயிரத்தின் முற்பகுதியில் இருந்த அஜித்குமாரைக் காண முடிகிறது.
வில்லன் அர்ஜுன் தாஸ், நடிப்பாற்றலால் சுமாரான கதாபாத்திரத்தை மெருகேற்றிருக்கிறார். இடைவேளையில் வரும் திருப்பம், கணிக்கும்படியாக இருந்தாலும் அதை காட்சியமைத்த விதம் நன்றாக இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
திரிஷா, பிரசன்னா, சுனில், சிம்ரன், பிரபு, ஷைன் டாம் சாக்கோ, ஜாக்கி ஷராஃப், பிரியா பிரகாஷ் வாரியர், தினு ஆனந்த், யோகி பாபு என ஒரு நட்சத்திரப் பட்டாளமே இருக்கிறது.
ஆனால், கதாநாயகனின் முந்தைய படங்களை நினைவுபடுத்தவோ அல்லது அவரைத் துதிபாடுவதற்காவோதான் அவர்கள் வந்துபோகிறார்கள். பிரசன்னாவும் பிரபுவும் பெரிதளவில் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரின் பாடல்கள் எதிர்பார்த்த அளவுக்கு பூர்த்தி செய்யாவிட்டாலும், அவரது பின்னணி இசை சில காட்சிகளை மேம்படுத்தியிருக்கிறது.
அபிநந்தன் ராமானுஜமின் ஒளிப்பதிவு, படத்தின் சத்தம் மிகுந்த தொனிக்கு ஏற்றது போல் கச்சிதமாகவே இருந்தது.
இயக்குநர் ஆதிக்கின் படங்களில் பெரும்பாலான காட்சிகளில் மஞ்சள், சிவப்பு, பழுப்பு, பச்சை நிறங்கள் பிரதானமாகத் தெரியும். இந்தப் படமும் வண்ணமயமாகவே இருந்தது. விஜய் வேலுக்குட்டியின் படத்தொகுப்பு, அஜித் தோன்றும் பல காட்சிகளை பெரிதும் மெருகேற்றியிருக்கிறது.
இயக்குநர் ஆதிக், தனக்கு பிடித்த நாயகனுக்காக எழுதியிருக்கும் சத்தம் நிறைந்த காதல் கடிதம் தான் குட் பேட் அக்லி. அமர்க்களம், தீனா, வாலி, வில்லன், பில்லா, மங்காத்தா, சமீபத்தில் வெளியான விடாமுயற்சி என முந்தைய படங்களிருந்து பல வசனங்களைப் இப்படத்தில் சேர்த்திருக்கிறார்.
தி கெங்ஸ்டர், தி கோப், தி டெவில், ஜான் விக், மனி ஹேஸ்ட் என சில மேற்கத்திய படங்கள், தொடர்களிருந்தும் சில வசனங்களை எடுத்திருக்கிறார்.
‘நானும் ரவுடி தான்’ படத்தில் விஜய் சேதுபதி சொல்வது போல “அள்ளிப் போட்டு” திரைக்கு கொண்டு வந்திருக்கிறார். ஒரு ஃபேன்பாய் படம் என்ற அடிப்படையில் அஜித் ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்திருக்கிறது என்று சொல்லலாம்.
ஆனால் இதுவே படத்திற்கு பலவீனமாகவும் அமைந்திருக்கிறது. ஆரம்பத்தில் இந்த வசனங்கள் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருந்தாலும், போக போக சலிப்பு தட்ட, ஒரு கட்டத்தில் திகட்டலுக்கு உள்ளாகிறது. பல இடங்களில் உள்ள லாஜிக் அத்துமீறல்களும் படத்தை மிகப்பெரிய அளவில் பாதிக்கிறது.
இதற்கு முன்பு வந்த பேட்ட, விக்ரம் போன்ற படங்களில் அந்தந்த இயக்குநர்கள் அந்நடிகர்களுக்காக ஒரு கதையை எழுதி அதில் எப்படி முந்தைய படங்களை நினைவூட்டலாம் என்று பார்த்தார்கள்.
ஆனால், இப்படமோ மேற்கோள்களை வைப்பதற்காகவே கதையை எழுதியது போல இருந்தது. இதனாலேயே கதையின் முக்கிய கருவாக இருக்கும் தந்தை-மகன் உறவும் வலுவில்லாமல் போகிறது.
மொத்தத்தில், இந்த ‘குட் பேட் அக்லி’, நடிகர் அஜித்குமாரின் தீவிர ரசிகர்களுக்கும் மசாலா பட விரும்பிகளுக்கும் ஒரு நல்ல பொழுதுபோக்கு திரைப்படம்.