திரையுலகில் புதிய திரைப்படம் வெளியாகும்போது அதனைத் திரையரங்குக்குச் சென்று காண்பதே தனி இன்பம். அதுவும், நமக்குப் பிடித்த நடிகர் படத்தில் இருக்கும்போது ஆரவாரத்துடன் அப்படத்தைப் பார்ப்பது நம்மில் பலருக்கும் பெருமகிழ்ச்சிதரும் செயல்.
சிங்கப்பூரில் பொழுதுபோக்கைப் பொறுத்தமட்டில் திரையரங்குகளுக்கெனச் சிறப்பான இடமிருந்தது. ஆனால், காலப்போக்கில் இந்த திரையரங்குகளின் எண்ணிக்கை குறைந்துவருவதால், உற்சாகம் மிகுந்த சூழலில் படங்களைப் பார்க்க முடியாமல் போய்விடுமோ என்ற வருத்தமும் பலரை வாட்டுகிறது.
சென்ற ஆண்டு சிங்கப்பூரில் எங் வா, சிலேத்தார் கடைத்தொகுதியின் ஷா, அங் மோ கியோ ஹப் கடைத்தொகுதியின் கேத்தே ஆகிய மூன்று திரையரங்குகள் மூடப்பட்டன.
அண்மையில், லெஷர் பார்க் காலாங் கடைத்தொகுதியில் இயங்கிவந்த ஃபிலிம்கார்ட் சினிபிளெக்ஸ் திரையரங்கும் ஜூரோங் ஈஸ்ட் ஜெம் கடைத்தொகுதியில் இயங்கிவந்த கேத்தே திரையரங்கும் தங்கள் கதவுகளை மூடின.
இவை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது மட்டுமன்றி, சிங்கப்பூரில் இயங்கிவரும் திரையரங்குகளின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்துச் சிந்திக்கவும் வைத்தது.
சினிமா கலாசாரம் சிங்கப்பூரில் 20ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. மெளனப் படங்கள், நேரடி இசை நிகழ்ச்சிகளுடன் ஒருங்கிணைந்து, தொடக்கக் காலத்தில் பார்வையாளர்களை திரையரங்குகள் கவரத் தொடங்கின.
போருக்குப் பிறகு சிங்கப்பூரில் கேப்பிட்டல் தியேட்டர், கேத்தே சினிமா போன்ற பெரிய திரையரங்குகள் கட்டப்பட்டன.
அவை, குடும்பங்கள், நண்பர்களுக்கான சமூக மையங்களாக மாறின. 1980களில் தொலைக்காட்சி பயன்பாடு அதிகரித்ததால் திரையரங்குக்குச் சென்று திரைப்படங்கள் பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்தது. அதனால், புகழ்பெற்ற பல ஒற்றைத் திரையரங்குகளும் மூடப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
இன்றைய சூழலில் அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ் போன்ற மின்னிலக்கத் தளங்களும் சவாலாக விளங்கினாலும் திரையரங்குகளும் தங்களைத் தகவமைத்துக் கொண்டு, வீட்டிலிருந்தபடி படத்தைப் பார்ப்பதைவிட களிநயமான அனுபவத்தைப் பார்வையாளர்களுக்கு வழங்க தொடர்ந்து முயன்று வருகின்றன.
தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் 2023ல் வெளியிட்ட தகவலின்படி சிங்கப்பூரில் 277 திரையரங்குகள் தற்போது செயல்பட்டு வருகின்றன.
சிங்கப்பூர் திரைப்பட ஆணையம் வெளியிட்ட தரவின்படி, சிங்கப்பூரில் இருக்கும் திரையரங்குகளுக்குச் செல்லும் பார்வையாளர்களின் மொத்த எண்ணிக்கை கொவிட்-19 தொற்றுக்கு முந்தைய காலத்தை ஒப்பிடுகையில் 8.46 மில்லியன் குறைந்துள்ளது.
இந்த மாற்றங்களால் சிங்கப்பூரின் திரையரங்கச் சூழல், அவற்றின் எதிர்காலம் போன்றவற்றைப் பற்றி அறிந்தும் ஆராய்ந்தும் வந்தது தமிழ்முரசு.
‘மாற்றமிருந்தால் ஒளிமயமான எதிர்காலம்’
கடந்த ஆண்டு மூடப்பட்ட மூன்று திரையரங்குகளுக்கு அப்பாற்பட்டு 2023ல் மூடிய கேத்தே சினிபிளெக்ஸ் சினிலெஷர் திரையரங்கு பவித்திரன் பத்மநாதனுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.
திரைப்பட ஆர்வலரான 32 வயது பவித்திரனுக்கு இளவயதிலிருந்தே திரையரங்குக்குச் சென்று திரைப்படங்கள் பார்த்த இனிதான நினைவுகள் பல. வாரத்திற்கு மூன்று படங்களாவது பார்க்க வேண்டுமென்ற ஆவலுடன் இருக்கும் அவருக்கு சென்ற ஆண்டு மூன்று திரையரங்குகள் மூடப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கவில்லை எனினும், அது நடந்துவிட்டது என்ற கவலையை அளித்துள்ளது.
மின்னிலக்க ஒளிவழிகளின் ஆதிக்கத்தால் திரைப்படக் கலாசாரம் பெரிய அளவில் மாற்றம் கண்டு வருவதாகக் கருதும் பவித்திரன், சிங்கப்பூர் மட்டுமன்றி உலகளவில் திரையரங்குகளுக்கான தேவை எப்போதும் இருக்கும் என்றார்.
“ஒருவர் ஒரு கதை சொல்லும்போது அதை நாம் எவ்வாறு ஆவலுடன் கேட்கிறோமோ அதுபோலத்தான் திரைப்படங்களும். திரைப்படங்கள் கூற விரும்பும் கதையைக் கேட்க பலரும் ஆவலாகத்தான் இருப்பார்கள்,” என்று பவித்திரன் கூறினார்.
அண்மைக்காலமாக பழைய தமிழ்ப் படங்களை திரையரங்குகள் மறுவெளியீடு செய்யும் போக்கு அதிகரித்து வருவதைச் சுட்டிய பவித்திரன், அது தொடர்ந்தால் இளைய தலைமுறையினர் பழைய படங்களில் கதைக்கரு எவ்வளவு சிறப்பாக உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும் என்றார்.
பிறமொழிப் படங்களுக்கு அப்பாற்பட்டு சிங்கப்பூரில் உள்ளூர்த் திரைப்படங்களுக்கு கிடைக்க வேண்டிய ஆதரவு குறைவாக இருப்பதாகவும் அவர் சொன்னார்.
“சிங்கப்பூரில் இருக்கும் திரையரங்குகள் உள்ளூர்த் திரைப்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வந்தால் திரைப்படக் கலாசாரம் இங்கு இன்னும் செழிப்பாக இருக்கும் என நம்புகிறேன்,” என்று பவித்திரன் தெரிவித்தார்.
அதற்குச் சான்றாக பிரெஞ்சு, தென்கொரியத் திரைப்படக் கலாசாரத்தைக் குறிப்பிட்ட அவர், அங்குப் பொழுதுபோக்கிற்குத் திரைப்படங்கள் எடுக்கப்பட்டாலும் பல புத்தாக்க யோசனைகள் வரவேற்கப்படுவதாகவும் சொன்னார்.
‘எதிர்காலம் கேள்விக்குறிதான்’
சிங்கப்பூரில் வருங்காலத்தில் 10 திரையரங்குகள் இருந்தாலே வியப்புதான் என்கிறார் தந்த்ரா தயாரிப்பு நிறுவனத்தின் ஜே கே சரவணா, 43.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அந்நிறுவனத்தை நடத்தி வரும் ஜே கே சரவணா, திரைப்படங்கள் திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டால்தான் அப்படத்திற்கு வெற்றி எனும் கண்ணோட்டம் மாறி வருகிறது என்றார்.
இதற்குக் காரணம், ஏராளமான திரைப்படங்கள் ‘ஓடிடி’ வாயிலாக இணையத்தில் வெளியிடப்படுவதால் மக்கள் திரையரங்கிற்குச் சென்று படம் பார்க்கும் அவசியம் இருக்காது என்பது அவரது கருத்து.
திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டுவரும் அவரைப் பொறுத்தமட்டில், சினிமா கலாசாரம் ஓடிடியால் பெரிய அளவில் மாறியுள்ளது. பிரம்மாண்டமான திரைப்படங்களுக்குத்தான் திரையரங்குகளில் இனி இடமுண்டு எனக் கருதும் அவர், பார்வையாளர்கள் வீட்டில் இருந்தபடி சொகுசாக படம் பார்க்க விரும்பும் போக்கு அதிகரித்துள்ளதாகச் சொல்கிறார்.
“சிறு வயதிலிருந்தே சினிமா என் ரத்தத்தில் ஊறி இருக்கிறது. ஆனால், எனது மகள் அவளுக்குப் பிடித்த திரைப்படத்தை திரையரங்கில் காண விரும்புவதில்லை,” என்றார் ஜேகே சரவணா.
சென்ற ஆண்டு மூன்று திரையரங்குகள் மூடப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கவில்லை, எதிர்பார்த்ததுதான் எனக் கூறிய ஜேகே சரவணா, திரைப்படத் துறையில் கால்பதிக்க விரும்புவோர் சிறந்த வாய்ப்புகளுக்கு சிங்கப்பூருக்கு அப்பாற்பட்டு இதர நாடுகளையும் கவனத்தில் கொள்ளலாம் என்றார்.
“ஒரு தயாரிப்பாளராக நான் வாய்ப்புகளுக்காக மலேசியா, இந்தோனீசியா போன்ற நாடுகளை நாடுகிறேன். மாறுபட்ட சூழ்நிலையிலும் அங்கு திரைப்படத் துறைக்கு வாய்ப்புகள் உள்ளன. ஆனால், சிங்கப்பூரில் பொழுதுபோக்குக்கு திரைப்படம் இப்போது ஒரு தெரிவாக இல்லை,” என்பது அவரது கருத்து.
‘திரையரங்கு ஒரு சமூகத்தை உருவாக்குகிறது’
உள்ளூர்த் திரைப்படங்களிலும் நாடகங்களிலும் நடித்து வரும் ஹபீப், 23, கொவிட்-19 தொற்றுப் பரவலுக்குப் பிறகு திரைப்படக் கலாசாரம் சிங்கப்பூரில் நலிவடைந்து வந்தாலும் அது ஒரு சமூகம் போன்றது எனக் கருதுகிறார்.
ஒரே ஆண்டில் மூன்று திரையரங்குகள் மூடப்பட்ட செய்தி தமக்கு மிகுந்த கவலை அளித்ததாகக் கூறிய அவர், சினிமா ஒரு வகையில் மனவுளைச்சலுக்கு அளிக்கப்படும் சிகிச்சைபோல என்றும் சொன்னார்.
வருங்காலத்தில் சிங்கப்பூரில் திரையரங்குகளின் எண்ணிக்கை குறையும் என்றாலும் அது மோசமான அளவில் இருக்காது என ஹபீப் நம்புகிறார். சிங்கப்பூரில் திரைப்படங்களுக்கான தேவை இன்னும் இருப்பதே அதற்குக் காரணம் என்கிறார் அவர்.
“எடுத்துக்காட்டாக, அமரன், இந்தியன் 2 போன்ற திரைப்படங்கள் வெளியாகும் முன்னர் திரைப்பட நட்சத்திரங்கள் சிங்கப்பூருக்கு வந்து திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். சிங்கப்பூரில் சினிமா கலாசாரம் மோசமான நிலையில் இருந்தால் அவர்கள் இங்கு வந்திருக்க மாட்டார்கள்,” என்று ஹபீப் கூறினார்.
சிங்கப்பூர்த் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் பெரும்பாலும் அனைத்துலகப் படங்களாக உள்ள நிலையில், உள்ளூர் திரைப்படங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென்பது அவரது விருப்பம்.
“உள்ளூர்த் திரைப்படத் துறையில் இருப்பவர்களுக்கு அதிக அங்கீகாரம் தேவைப்படுகிறது. அவர்கள் இயக்கும் திரைப்படங்களும் அடிக்கடி திரையிடப்பட்டால் திரையரங்குகளுக்கு வருகைதரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம்,” என்கிறார் ஹபீப்.
‘மாற்றம் தேவை’
வருங்காலத்தில் மரபார்ந்த திரையரங்குகள் இருந்தாலும், அவை சற்று மாற்றியமைக்கப்பட்டால் திரைப்படக் கலாசாரம் சிங்கப்பூரில் செழிப்பாக இருக்கும் என்றார் உள்ளூர்த் திரைப்பட ஆசிரியர் பூபதி, 41.
காலப்போக்கில் திரையரங்குக்கு வந்து படம் பார்க்கும் போக்கு குறையும் என்றும், வீட்டில் படம் பார்க்கும் சொகுசு மக்களிடையே இன்னும் அதிகம் பரவலாகும் என்றும் நம்பும் பூபதி, குறைந்த எண்ணிக்கையிலான பார்வையாளர்களுக்கேற்ப திரையரங்குகள் அமைக்கப்பட்டால் சிறப்பாக இருக்கும் என்றார்.
“இந்தியாவில் இப்போது பல சிறிய திரையரங்குகள் தலையெடுத்துள்ளன. பெரிய திரையரங்குகளில் திரையிடப்படும் அளவில் செலவு செய்ய முடியாமல் போகும்போது இதுபோன்ற தனியார் திரையரங்குகள் கைகொடுக்கும். அவ்வாறு சிங்கப்பூரிலும் அறிமுகப்படுத்தலாம்,” என பூபதி பரிந்துரைத்தார்.
முன்பெல்லாம், வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டால் படம் பார்க்கச் சென்ற காலம் மலையேறி, இப்போது படம் பார்க்கச் செல்லும் பார்வையாளர்கள், படம் சலிப்புதரும் வகையில் உள்ளதா இல்லையா என்று விமர்சனம் செய்யும் அளவிற்கு சினிமா கலாசாரம் வெகுவாக மாறியுள்ளதாக பூபதி கூறினார்.
விரிவுரையாளர்கள் கருத்து
இணையத்தளங்களில் படங்கள் அதிகம் வெளியிடப்படுவதால் மக்கள் திரையரங்குகளுக்குச் சென்று திரைப்படங்கள் பார்க்கும் போக்கு நாளடைவில் குறையும் என நம்புகிறார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழத்தில் உலகளாவிய கதைகள் பிரிவில் விரிவுரையாளராக இருக்கும் டாக்டர் இல ராஜீவ் தியாகி.
மற்றவகைப் பொழுதுபோக்குகளால் திரையரங்குக் கலாசாரம் வருங்காலத்தில் குறைந்துவிடும் என்ற அவர், பொதுமக்கள் சிறப்பு நிகழ்ச்சிகளைக் காண திரையரங்குகளுக்கு செல்லும் காலம் வரும் என்றார்.
திரையரங்குகளுக்கு அதிகமானோரை ஈர்க்க சில வழிகளைப் பரிந்துரைத்த டாக்டர் ராஜீவ், இளையர்களை ஈர்க்கும் தொலைக்காட்சித் தொடர்கள், காற்பந்து விளையாட்டுகள் ஆகியவற்றையும் திரையிடலாம் என்றார்.
வருங்காலத்தில் திரையரங்குகளின் எண்ணிக்கை குறைந்து வருவது ஒன்றும் மோசமான நிலையன்று என்றார் லாசால் கலைக் கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கும் டாக்டர் நித்ய சாந்தினி மனோகரா.
டாக்டர் ராஜீவ் கூறியது போல, இணையத்தளங்களில் படங்களை வெளியிடும் போக்கு அதிகரித்து வருவதாக டாக்டர் நித்ய சாந்தினியும் சொன்னார்.
இந்த மாற்றத்திற்கு ஏற்ப திரையரங்குகளும் மாறிக்கொள்ள வேண்டுமென்ற அவர், சிறுவர்களுக்கான திரைப்படங்கள் ஷா திரையரங்கில் ஓடும்போது அவர்கள் விளையாடுவதற்குமான வசதிகளும் அங்கு இருப்பது போன்ற மாற்றங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என்கிறார்.
மாறிவரும் மனநிலை
ஒருகாலத்தில் திரைப்படங்களைத் திரையரங்கில்தான் பார்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த தன்னுரிமை ஊழியர் தர்ஷினி, 27, இப்போதெல்லாம் புதிய படங்களையும்கூட வீட்டில் இருந்தவாறே பார்த்து வருகிறார்.
“திரையரங்கிற்குச் சென்றால் செலவு செய்ய வேண்டும். அதை நான் வீட்டில் இருந்தவாறே சொகுசாக பார்க்கலாமே! புதிய படங்கள் வெளியான குறுகிய காலத்திலேயே இணையத்தளங்களிலும் அவை வெளியிடப்படும்போது திரையரங்கிற்குச் செல்ல வேண்டிய தேவை இல்லை,” என தர்ஷினி கூறினார்.
சிறிய நாடாக இருக்கும் சிங்கப்பூரில் நேரம் கிடைக்கும்போது ஈடுபடும் நடவடிக்கைகளில் திரையரங்கிற்குச் சென்று படம் பார்ப்பதும் ஒன்று என்று நம்பும் அஷ்வின், 39, திரையரங்குகளை மூடிவிட்டால் அந்தப் பொழுதுபோக்கு கலாசாரம் முற்றிலும் மறைந்துவிடும் என்கிறார்.
“என் நண்பர்களில் சிலர் சிங்கப்பூரில் செலவு செய்து திரைப்படம் பார்ப்பதைவிட மலேசியாவில் விலை மலிவு என்பதால் படம் பார்க்க அங்கு விரைகின்றனர். அதனால், சிங்கப்பூர்த் திரையரங்குகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இச்சூழலில், பலரும் இணையம் வழியாகப் படம் பார்ப்பதை விரும்பத் தொடங்கிவிட்டால் சிங்கப்பூருக்கென இருக்கும் சினிமா கலாசாரம் பெரிதும் பாதிக்கப்படும்,” என்று வருத்தத்துடன் கூறினார் அஷ்வின்.