திரையுலகைப் பொறுத்தவரை நடிகர் நடிகைகளுக்கு இணையாகச் சம்பளம் வாங்கும் அடுத்தத் துறை இசை தான்.
நடிகர்களுக்கு இணையாக இசையமைப்பாளர்களும் பாடகர்களும் வரவேற்பு பெற்றுவரும் நிலையில், அவர்களுக்குப் பெரிய அளவில் சம்பளமும் வழங்கப்பட்டு வருகிறது என்றால் அது மிகையாகாது.
1950களில், இந்திய திரையுலகில் சிறந்த பாடகர்களான லதா மங்கேஷ்கர், முகமது ரஃபி போன்ற ஜாம்பவான்கள் எல்லாம் ஒரு பாடலுக்கு 300 ரூபாய் வரை சம்பளமாகப் பெற்றுள்ளனர்.
நாளடைவில் லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே போன்ற சிறந்த பாடகர்கள் அதிகச் சம்பளம் கேட்கும் வரை பாடகர்களுக்குக் குறிப்பிடத்தக்க வகையில் ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறலாம்.
ஆனால் இன்று அந்த நிலையே மாறிவிட்டது. நாட்டின் தலை சிறந்த பாடகர்களுக்கு லட்சங்களில் சம்பளம் வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்ல ஒரு சில பாடகர்கள் ஒரு பாடலுக்கு 20 லட்சம் கூடச் சம்பளமாகப் பெறுகின்றனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, இந்திய மொழிகள் பலவற்றுள் முன்னணி பாடகியாகத் திகழும் ஸ்ரேயா கோஷல், ஒரு பாட்டுக்கு கிட்டத்தட்ட 25 முதல் 30 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெற்றுவருவதாகக் கூறப்படுகிறது. இந்தியில் மட்டுமல்ல தமிழிலும் அவர் முன்னணி பாடகியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படியெனில், ஸ்ரேயா தான் அதிகச் சம்பளம் வாங்கும் பாடகி என நீங்கள் எண்ணினால் அது தவறு. உண்மையில் இந்தியாவின் முன்னணி பாடகர்கள் பெறும் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கை கூடச் சம்பளமாக ஸ்ரேயா பெறவில்லை என்றே கூறலாம்.
இந்திய திரையுலகைப் பொறுத்தவரை ஒரே ஒரு பாடலுக்கு 3 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்கும் ஒருவர் இருக்கின்றார். அவர் வேறு யாருமில்லை நம் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தான். ஒரு படத்திற்கு இசையமைக்கக் கிட்டத்தட்ட 8 முதல் 9 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் ரகுமான், பாடகராக ஒரு பாடலை பாட கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகின்றார்.
தொடர்புடைய செய்திகள்
இந்திய திரையுலகை பொறுத்தவரை, இசைத்துறையில் 7 தேசிய விருதுகள் பெற்ற ஒரே கலைஞரும் அவர் தான். அத்தனை பெருமைக்கும் சொந்தக்காரரான இசைப்புயல் சிங்கப்பூரில் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி தேசிய விளையாட்டரங்கில் இசை விருந்து படைக்கவுள்ளார்.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இசைப்புயல் சிங்கப்பூரில் மீண்டும் நேரடி இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளார் என்பது கூடுதல் தகவல்.