என்னைத் துரத்திய இடத்தையே விலைக்கு வாங்கினேன் : சூரி

3 mins read
b46a563d-7767-47d5-88cc-3a10b6be2511
நடிகர் சூரி. - படம்: கோலிவுட்

மதுரையில் ‘இணைப்பு’ (The Connect) அமைப்பின் சார்பில் வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் வேலை தேடும் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்றும் நோக்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நடிகர் சூரி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தனது வாழ்க்கை அனுபவங்களை உருக்கமாகப் பகிர்ந்துகொண்டார்.

மாணவர்கள் மத்தியில் பேசிய சூரி, “உண்மையில் நான் ஒரு மாவட்ட ஆட்சியராகவும் என் தம்பி பொறியாளராகவும் இங்கு நின்றிருக்க வேண்டியவர்கள். என் பெயர் ராம், தம்பி பெயர் லட்சுமணன். மதுரை செனாய் நகர் பள்ளியில் படித்தோம். ஆனால், 8ஆம் வகுப்புடன் பள்ளிப் படிப்பு முடிந்துவிட்டது.

“‘பெரிய முதலாளியாக வரவேண்டும்’ என்று கூறி அப்பா என்னை டீக்கடையில் வேலைக்குச் சேர்த்துவிட்டார். பின்னர் திரைப்படங்களில் நடிக்கும் ஆசையில் சென்னை சென்றேன். அங்கு கடந்த 8 ஆண்டுகளாக வண்ணம் தீட்டும் வேலை உட்படக் கிடைக்கின்ற அனைத்து வேலைகளையும் செய்திருக்கிறேன். சென்னையில் எனது கைபடாத பெரிய கட்டடங்களே இல்லை எனலாம்,” என்று தனது கடந்த காலத்தை நினைவு கூர்ந்தார்.

“அவமானங்களும் போராட்டங்களும் திரைப்பட வாய்ப்புத் தேடிய நாட்களைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், “சினிமா வாய்ப்பிற்காகப் புகைப்படம் எடுக்க 20 ரூபாய் கூட கையில் இருக்காது. சாப்பிட்டுவிட்டால் புகைப்படங்களை நகல் எடுக்க முடியாது என்பதால், ஒரு டீ, பன் சாப்பிட்டு டீக்கடையில் கணக்கு வைத்துதான் வாழ்க்கையை ஓட்டினேன்.

“ஒருமுறை ஒரு வாய்ப்பு கிடைத்து, உடைக்கு அளவெல்லாம் எடுத்த பிறகு, கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது. ‘அந்தக் கதாபாத்திரத்திற்கு இன்னொருவர் தேர்வாகிவிட்டார், சட்டையைக் கழற்றுங்கள்’ என்று சொன்னபோது, கை, காலெல்லாம் நடுங்கிக் கண்கலங்கினேன். எல்லோருக்கும் நடப்பதுதான் எனக்கும் நடந்தது. ஒருமுறை பட வாய்ப்பிற்காக வரிசையில் நின்றபோது பசியால் மயங்கி விழுந்தேன்.

“2008ல் ‘வெண்ணிலா கபடி குழு’ பட வாய்ப்புதான் என் வாழ்க்கையை மாற்றியது. அதற்கு முன்பு அஜித்தின் ‘ஜி’ படத்தில் சிறு வேடத்தில் நடித்தேன். அப்போது ஒரு சண்டைக் காட்சியில் எனது மண்டை உடைந்தது. அதைப் பார்த்த அஜித், ‘பார்த்து பண்றது இல்லையா? எந்த ஊரு?’ என்று கேட்டார். மதுரை என்று சொன்னதும், ‘மதுரைக்காரங்க மட்டும் ஏன் இவ்வளவு பயரா (Fire), துருதுருவென இருக்காங்க? ஒன்னு சொன்னா நாலா செய்கிறீர்கள்’ என்று பாராட்டினார். அந்த வார்த்தைகள் எனக்குப் பெரும் நம்பிக்கையைக் கொடுத்தன.

“வெண்ணிலா கபடி குழு படத்திற்குப் பின் வாழ்க்கை மாறியது. ஒருமுறை ஒரு கட்டடம் விலைக்கு வந்தது. அதிக விலை கொடுத்து அதை வாங்கினேன். ஏன் இவ்வளவு விலை என்று என் மனைவி சண்டையிட்டார்.

“அதற்கு நான், ‘எவ்வளவு சொல்லியிருந்தாலும் வாங்கியிருப்பேன். நான் வாய்ப்பு தேடிய காலத்தில் மயக்கம் போட்டு விழுந்த அலுவலகம் இருந்த கட்டடம் அது. சிலவற்றிற்கு விலையே கிடையாது’ என்றேன். பல வலிகளைத் தாண்டியதால்தான் சூரியை இன்று இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

“வாழ்க்கையில் நிறைய அவமானங்கள் வரும். அதற்கு உடனே எதிர்வினை செய்யாதீர்கள். தோல்விகள் வரும். ‘அடிபட்டு ஜெயித்தவனிடம் இருக்கும் தெளிவு, ஆசைப்பட்டு ஜெயித்தவனிடம் இருக்காது’. விழுந்து எழ வேண்டும் என்று நினைப்பவனைக் கடவுள் கைவிட மாட்டார்.

“அதுபோல், நீங்கள் சம்பாதித்து உருவாக்கிய சாம்ராஜ்யத்தை அனுபவிக்க உடல்நலத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள். கைத்தொலைப்பேசியைப் பார்த்துக்கொண்டு உறவுகளைத் தொலைத்துவிடாதீர்கள். நான் இங்கு நிற்க முழுக் காரணம் என் குடும்பம்தான்,” என்று பேச்சை முடித்தார்.

நிகழ்ச்சியில் ஜி.ஆர்.டி. ஜூவல்லரி நிர்வாக இயக்குநர் அனந்தபத்மநாபன், தங்கமயில் ஜூவல்லரி நிர்வாக இயக்குநர் ரமேஷ், பொன் பியூர் கெமிக்கல்ஸ் நிர்வாக இயக்குநர் பொன்னுசாமி, அம்மா மெஸ் நிறுவனர் செந்தில்வேல் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்குத் தொழில் ஆலோசனைகளை வழங்கினர்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்