நயன்தாரா ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துவருகிறார்.
சுந்தர்.சி இப்படத்தை இயக்குகிறார். அண்மையில் ‘மூக்குத்தி அம்மன் 2’ படப்பிடிப்பில் உதவி இயக்குநர் ஒருவர் நயன்தாராவிடம் அவர் நடிக்கவேண்டிய காட்சிகளை விளக்கிச் சொன்னதாகவும் அப்போது நயன்தாரா இடைமறித்து உதவி இயக்குநரிடம் சில கேள்விகளைக் கேட்டதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் செய்தி பரவியது.
அந்த மோதலைத் தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் நயன்தாராவுக்குப் பதிலாக தமன்னாவை நடிக்கவைக்க யோசனை நடப்பதாகவும் பேசப்பட்டது. இதற்குப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நடிகை குஷ்பு விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடகங்களில் குஷ்பு வெளியிட்ட அறிக்கையில், “சுந்தர்.சியின் நலனைப் பற்றி அக்கறை கொள்பவர்களுக்குத் தெரிவிப்பது, ‘மூக்குத்தி அம்மன் 2’ படம் குறித்து தேவையற்ற வதந்திகள் பரவிவருகின்றன. அவை உண்மையல்ல. படப்பிடிப்புத் திட்டமிட்டபடி சுமுகமாக நடந்து வருகிறது. சுந்தர்.சி எப்படிப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். நயன்தாரா திறமையான நடிகை. அதை அவரே நிரூபித்திருக்கிறார். நயன்தாரா கடந்த காலத்தில் நடித்த ஒரு கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்துவருகிறார். தற்போது பரவும் வதந்திகள் திருஷ்டி எடுத்த மாதிரி. நடப்பதெல்லாம் நல்லதுக்கே. உங்களின் ஆசிர்வாதம், அன்பை நம்புகிறோம். அடுத்த வெற்றிப் படத்துக்குக் காத்திருங்கள்.” என்று கூறியுள்ளார்.

