‘ஜெயிலர்-2’ படத்தில் நடிப்பது மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாகச் சொல்கிறார் நடிகை வித்யா பாலன்.
தமிழில் தொடக்க காலத்தில் தனக்குக் கிடைத்த பல நல்ல வாய்ப்புகள் பறிபோக சக கதாநாயகிகள்தான் காரணம் என அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியத் திரையுலகில் நல்ல கதாபாத்திரங்களுக்குப் பெயரெடுத்த நடிகைகளில் வித்யா பாலனுக்கும் முக்கியமான இடமுண்டு. கதை, கதாபாத்திரத்தைத் தேர்வு செய்வதில் எந்தவித சமரசத்துக்கும் இடமளிக்காதவர். அப்படிப்பட்ட இவரையே சினிமாவில் அறிமுகமான நேரத்தில் சிலர் ஏமாற்ற முயன்றுள்ளனர்.
“அச்சமயம் விவரம் தெரியாமல் சில படங்களில் நடிக்க சம்மதித்தேன். பிறகுதான் அவை ஆபாசமான, இரண்டாம் தரமான படங்கள் எனத் தெரிய வந்தது. அவற்றிலிருந்து உடனே விலகிவிட்டேன்.
“என்னைப் பொறுத்தவரையில் சினிமாவில் நீடிக்க வேண்டும் என்பதற்காக என்னுடைய மனம், உடல் என எதையும் மாற்றிக்கொள்ள மாட்டேன். எனக்கேற்ற கதாபாத்திரங்கள் இருந்தால் வாருங்கள், இல்லையெனில் யாரும் வர வேண்டாம் என்பதே எனது நிலைப்பாடு,” என்று தெளிவாகச் சொல்கிறார் வித்யா பாலன்.
லிங்குசாமி இயக்கத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த ‘ரன்’ படத்தில் ஒப்பந்தமானாராம். ஆனால் திடீரென இவரை நீக்கிவிட்டு மீரா ஜாஸ்மினை நடிக்க வைத்தாராம் இயக்குநர். இவர் நடிக்கவிருந்த இரண்டாவது படமும் மீராவுக்குத்தான் சென்றதாம்.
“இப்படி இரண்டு படங்களை நான் இழந்தாலும் அதற்கு மீரா காரணமல்ல என்பது தெரியும். அதனால்தான் நாங்கள் இன்னும் நல்ல தோழிகளாக நீடிக்கிறோம்.
“நான் தமிழில் ஒப்பந்தமான மூன்றாவது படம் ‘மனசெல்லாம்’. இதிலும் என்னை நீக்கிவிட்டு திரிஷாவை ஒப்பந்தம் செய்தனர். ஓரளவு அனுபவம் பெற்ற பிறகு, திரையுலகில் இதெல்லாம் சகஜம் எனப் புரிந்துகொண்டேன்,” என்கிறார் வித்யா பாலன்.
தொடர்புடைய செய்திகள்
இவர் பிறந்து வளர்ந்தது மும்பை என்பதால் இந்தியில் சரளமாகப் பேசுகிறார். ஆனால், இவரது பெற்றோர் பாலக்காட்டு தமிழர்கள். இதை வைத்து சிலர் வித்யாவை கேரளாவைச் சேர்ந்தவர் என்று நினைத்து விடுகிறார்கள்.
‘ஜெயிலர்-2’ குறித்து?
“நான் எதிர்பாராத தருணத்தில் கிடைத்த வாய்ப்பு. ரஜினியுடன் நடித்தது ஜாலியான அனுபவம். எந்தவித ஒத்திகையும் இல்லாமல் நடித்தோம். ஒவ்வோர் காட்சியிலும் அவர் என்ன செய்யப் போகிறார் என்பது எனக்குத் தெரியாது. நான் என்ன செய்வேன் என்பது அவருக்கும் தெரியாது. ஆனால், அனைத்து காட்சிகளும் அருமையாகப் படமாக்கப்பட்டது. இருவரது நடிப்பும் காட்சிக்கேற்ப கச்சிதமாகப் பொருந்தியது. கதைதான் உண்மையான உடல்மொழி என்று சொல்ல வேண்டும்,” என்கிறார் வித்யா பாலன்.
நடிக்க வந்த புதிதில் நான் ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தினர். நான் மலையாளத்தில் மோகன்லாலுடன் நடிக்கவிருந்த படம் திடீரெனக் கைவிடப்பட்டது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தோல்வி மேல் தோல்விதான். ஒரே சமயத்தில் 11 படங்களில் இருந்து நீக்கப்பட்டேன்.
“அனைத்தையும் கடந்து இன்று கதாநாயகியாக உயர்ந்து ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி,” என்கிறார் வித்யா பாலன்.

