அண்மையில் மலையாளத்தில் வெளியான ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ திரைப்படம் நூறு கோடி ரூபாய் வசூல் கண்டு சாதித்துள்ளது.
இது ‘சூப்பர் பெண்’ கதையம்சத்துடன் உருவாகியுள்ள படம். தென்னிந்திய திரையுலகில் இப்படி நாயகியை ‘சூப்பர் பெண்’ணாகச் சித்திரித்து, உருவாக்கப்பட்ட முதல் படமும் இதுதான். இதையடுத்து, இப்படத்தின் கதாநாயகி கல்யாணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
மேலும், மலையாளத் திரையுலகில் இவரைப் பலரும் ‘வசூல் நாயகி’ என்று அழைக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், இன்னொரு படத்தில் நடிக்க அவர் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த ஆண்டு நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியாகி, நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் நடிப்பதற்குத்தான் கல்யாணி குறி வைத்துள்ளாராம்.
“நாக் அஸ்வின் மலையாளத் திரையுலகின் படைப்புத் திறனுள்ள, முக்கியமான படைப்பாளிகளில் ஒருவர். ஒருவேளை அவர் இந்தப் பேட்டியைக் காணும் வாய்ப்பு அமையக்கூடும்.
“அத்தகைய தருணம் அமைந்தால், ‘கல்கி’ இரண்டாம் பாகத்தின் நானும் நடிப்பதற்கான வாய்ப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்று அண்மைய பேட்டியின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார் கல்யாணி பிரியதர்ஷன்.