விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தை இயக்கியவர் ஆர்.கே. செல்வமணி.
அப்படத்துக்குப் பிறகே விஜயகாந்த், ‘கேப்டன் விஜயகாந்த்’ என அழைக்கப்பட்டார்.
கேப்டனின் 100வது திரைப்படமான அது வெளியாகி 34 ஆண்டுகள் ஆகிறது. அதைக் கொண்டாடும் வகையில், அப்படத்தின் மின்னிலக்கத் தரம் உயர்த்தப்பட்டு மீண்டும் திரையரங்குகளில் நாளை வெளியிடப்படுகிறது.
இந்நிலையில், ஆகஸ்ட் 19ஆம் தேதி நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அப்படத்தின் இயக்குநர் ஆர்.கே செல்வமணி பேசியிருந்தார். அப்போது, அப்படம் எடுத்தபோது தான் எதிர்கொண்ட சிரமங்கள், தடைகள் ஆகியவற்றை அவர் பகிர்ந்தார்.
“‘கேப்டன் பிரபாகரன்’ படம் எடுக்கப்பட்ட காலத்தில் நவீன வசதிகள் இல்லை. ஆளில்லா வானூர்தி மூலம் படமெடுப்பது, கணினிமூலம் வரைகலை தோற்றத்தை உருவாக்குவது போன்ற தொழில்நுட்ப வசதிகள் இல்லை,” என அவர் கூறினார்.
மேலும், “ஒரு காட்சியில் 2,000 பேர் நடிக்க வேண்டும் என்றால் அந்தக் காட்சி எடுப்பதற்காக 2,000 பேரையும் நேரில் அழைத்து வரவேண்டும். அப்படத்தில் நாயகனாக நடித்த விஜயகாந்த், வில்லனாக நடித்த மன்சூர் அலிகான், ரம்யா கிருஷ்ணன் எனப் பணியாற்றிய அனைவரும் நிறைய சிரமங்களை எதிர்கொண்டோம், உயிரைக்கொடுத்து அப்படத்தை எடுத்தோம்,” என அப்படக்குழு எதிர்கொண்ட சிரமங்களை விவரித்தார்.
அவை எல்லாவற்றையும் விடதுயர நிகழ்வு என்னவென்றால், அப்படத்தின் படப்பிடிப்பின்போது சிலர் உயிரிழந்ததாகவும் விஜயகாந்த்கூட சில காட்சிகள் படமாக்கப்பட்டபோது மரணத்தின் விளிம்புவரை சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு தமது அனுபவங்களைப் பகிர்ந்த ஆர்.கே.செல்வமணி, தற்போதிருக்கும் தமிழ்த் திரையுலகின் போக்கை எண்ணி வருந்தினார்.
தொடர்புடைய செய்திகள்
“உச்ச நடிகர் ஒருவர் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினால் உடனே தனக்கும் ரூ.100 கோடி சம்பளம் வேண்டும் என்று கேட்பது, படத்தின் வசூல் அடிப்படையில் நடிகர்களுக்கு இடையே நிலவும் போட்டி ஆகியவை திரையுலகை ஆட்டிப்படைத்து வருவதாக அவர் சாடினார்.
“தான் நடித்த படம் வெற்றி பெற வேண்டும் என நினைப்பது தவறல்ல, மற்ற நடிகர் நடித்த படம் தோல்வியடைய வேண்டும் என எண்ணுவதுதான் தவறு. ஒரு நல்ல படம் நிறைய வசூலிக்கலாம். அதேசமயம் அதிகம் வசூல் செய்த படம் நல்ல கருத்துள்ள படமாகிவிடாது,” என்றார் செல்வமணி.