'சூரரைப் போற்று' நாயகியிடம் மன்னிப்பு கேட்ட மாணவர் சங்கம்

'சூரரைப் போற்று' நாயகியிடம் மன்னிப்பு கேட்ட மாணவர் சங்கம்

1 mins read
f63c65b1-5797-4087-b30b-2d6c6be806e7
'சூரரைப் போற்று' படத்திற்காக தேசிய விருது வென்றவர் நடிகை அபர்ணா பாலமுரளி. படம்: ஊடகம் -
multi-img1 of 2

கொச்சி: நடிகை அபர்ணா பாலமுரளியிடம் மாணவர் ஒருவர் அத்துமீறி நடந்துகொள்ள முயன்றதற்காக எர்ணாகுளம் சட்டக் கல்லூரி மாணவர் சங்கம் அவரிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

தாங்கள் நடித்திருக்கும் புதுப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நடிகை அபர்ணா, நடிகர் வினீத் ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட படக்குழுவினர் அண்மையில் அக்கல்லூரிக்குச் சென்றிருந்தனர்.

நிகழ்ச்சியின்போது மேடைக்கு வந்த மாணவர் ஒருவர் அபர்ணாவிடம் பூங்கொத்தைக் கொடுத்தார். பிறகு அவருடன் கைகுலுக்கியவர், வற்புறுத்தி அவரை எழுந்திருக்கச் செய்து, அவர் தோள்மீது கைவைத்தபடி புகைப்படம் எடுக்க முயன்றார்.

அதனால் அதிர்ச்சியடைந்த அபர்ணா, அம்மாணவரிடமிருந்து விலகிச் செல்ல முயன்றார்.

இச்சம்பவம் குறித்த காணொளி சமூக ஊடகங்களில் தீயாகப் பரவியது. சம்பவம் நடந்தபோது அங்கிருந்த எவரும் அம்மாணவரின் செயலைக் கண்டித்து எதிர்வினையாற்றவில்லை.

பின்னர், மேடைக்கு வந்த கல்லூரி நிர்வாகி ஒருவர் அபர்ணாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். சம்பந்தப்பட்ட மாணவரும் மேடைக்கு வந்து அவரிடம் மன்னிப்பு கோரினார். ஆயினும், மீண்டும் அவர் கைகுலுக்க முயன்றபோது அபர்ணா அதனைத் தவிர்த்துவிட்டார்.

இச்சம்பவத்திற்காக எர்ணாகுளம் கல்லூரி மாணவர் சங்கம் ஒரு சமூக ஊடகப் பதிவு வழியாக வருத்தம் தெரிவித்துக்கொண்டது.

தமிழில் வெளியான 'சூரரைப் போற்று' படத்திற்காக அபர்ணாவிற்குச் சிறந்த நாயகிக்கான தேசிய விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.