நடிகர் கார்த்தி நடித்திருந்த ‘வா வாத்தியார்’ படம் இந்த ஆண்டும் வெளியாகாமல் தள்ளிப் போய் ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
நடிகர் கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ஆனந்த ராஜ், ராஜ் கிரண் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘வா வாத்தியார்’. படத்தை ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ளது. நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
படம் டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவித்திருந்த நிலையில், படம் குறிப்பிட்ட நாளில் வெளியாகாமல் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
‘வா வாத்தியார்’ படம் கடந்த ஆண்டு இறுதியில் தயாராகிவிட்டது. படத்தை எப்போது வெளியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருந்தது.
படம் மார்ச் மாதத்தில் வெளியாகும், ஏப்ரல் மாதத்தில் வெளியாகும், ஜூலையில் வெளியாகும், செப்டம்பரில் வெளியாகும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.
இது எப்படி இருந்தது என்றால் ‘புலி வருது புலி வருது’ என்று ஒரு கதை சொல்வார்கள் அல்லவா, அதுபோல இருந்தது என்று ரசிகர்கள் ஆதங்கத்துடன் பதிவிட்டு வந்தார்கள்.
இந்நிலையில், இறுதியாக டிசம்பர் மாதத்தில் படம் வெளியாகிறது என்று படக்குழு அறிவித்து விளம்பர வேலைகளைப் பார்த்தது. அட, இம்முறை புலி கட்டாயம் வருது என்று அனைவரும் தயாராக இருந்தார்கள்.
தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் படத்திற்கான திரையரங்குகள் எல்லாம் ஒருங்கிணைக்கப்பட்டு தயாராக இருந்த வேளையில் படக்குழு தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘வா வாத்தியார்’ படம் விரைவில் வெளியாகும் என்று பதிவிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. அதாவது புலி இப்போதும் வரவில்லையா என்ற சலிப்பை ஏற்படுத்தி உள்ளது. சில ரசிகர்களோ, இதுக்கு ‘பருத்தி மூட்டை குடோன்லேயே இருந்து இருக்கலாம்’ என்று பதிவிட்டு வருகிறார்கள்.
படம் வெளியாவதில் உள்ள பிரச்சினை என்னவென்று பார்த்தால், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுதான். அதாவது, ‘வா வாத்தியார்’ படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாதான் காரணம்.
அவர் கடனாக வாங்கிய ரூபாய் 21 கோடிகளை திரும்பச் செலுத்தினால்தான் படத்தை வெளியிட முடியும் என்று உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்திருந்தது.
இதனால் ரசிகர்கள் பலரும் படம் வெளியாகுமா இல்லையா என்ற சந்தேகத்தில் இருந்தனர். இந்நிலையில், படம் வெளியாகாது என்று படக்குழு சொல்லாமல் சொல்லி உள்ளது.
பொதுவாக முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இப்படி சிக்கலில் இருந்தால், அந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் அவர்களது சம்பளத்தை விட்டுக் கொடுத்தோ அல்லது நிதியுதவி செய்தோ படத்தை வெளியிட உதவுவார்கள். ஆனால், இந்தப் படத்திற்காக கார்த்தி எவ்விதத்திலும் உதவி செய்ய முன்வராதது தமிழ்த் திரையுலகத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

