வலது காலை இழந்த நகைச்சுவை நடிகர் .சிரிக்கோ உதயா: சந்தானத்தின் நெருங்கிய நண்பர்

2 mins read
8805b8fe-120b-46ef-9e2c-8043e9ee5b99
சந்தானம் குழுவினருடன் நடிகர் சிரிக்கோ உதயா. - படம்: ஊடகம்

நகைச்சுவை நடிகர் சிரிக்கோ உதயா, நீரிழிவு நோயால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, தனது வலது காலை இழந்துள்ளார்.

சந்தானம் நடித்த பல படங்களில் அவருக்கான நகைச்சுவை வசனங்களை எழுதியவர் சிரிக்கோ உதயா.

‘லொள்ளு சபா’ உள்ளிட்ட சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

நடிப்புக்கு அப்பால் நல்ல வயலின் இசைக்கலைஞராகவும் விளங்கிய

இவர், கடந்த 35 ஆண்டுகளாக வயலின் கலைஞராக வலம்வந்தவர்.

15 ஆண்டுகளாக நடிகர் சந்தானத்துடன் இணைந்து நகைச்சுவைப் பகுதிகளை உருவாக்கி, வசனங்களையும் எழுதிய தன் தந்தை, அண்மைக் காலமாக நீரிழிவு நோயால் கடும் அவதிக்கு ஆளானதாகச் சொல்கிறார் சிரிக்கோ உதயாவின் மூத்த மகள்.

“அப்பாவை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தோம். உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தது. ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டதால் அறுவை சிகிச்சை மூலம் அவரது வலது காலை அகற்ற வேண்டியதாயிற்று.

“அப்பா இப்போது நன்றாக இருக்கிறார். அவர் விரைவில் முழுமையாக நலமடைய வேண்டும் என அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்,” என்கிறார் சிரிக்கோ உதயாவின் மூத்த மகள்.

சிரிக்கோ உதயாவுக்கு திரையுலகில் நிறைய நண்பர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் இவருக்கு உதவி செய்யத் தயாராக இருந்தாலும், யாரிடமும் தனது உடல்நிலை குறித்து இதுவரை உதயா எந்தத் தகவலையும் சொல்லவில்லையாம்.

உதயாவுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். அவரது சிகிச்சைக்கான செலவை இவர்கள்தான் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

“அப்பா எப்போதுமே இப்படித்தான். யாரிடமும் உதவி கேட்டதில்லை. அதனால் நாங்களும் யாரிடமும் அவரைப் பற்றி சொல்லவில்லை,” என்கிறார்கள் உதயாவின் குடும்பத்தார்.

குறிப்புச் சொற்கள்