‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘வடசென்னை’, ‘அசுரன்’ உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களைக் கவர்ந்தவர் இயக்குநர் வெற்றிமாறன். இவர், இயக்கத்தில் 2018ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘வடசென்னை’.
இதில் தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.
திரையரங்கில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் அமீர் நடித்திருந்த ராஜன் கதாபாத்திரம் பலரின் பாராட்டுகளைப் பெற்றது. அதேபோல் இப்படத்தின் இரண்டாம் பாகம் வரவேண்டும் என்பதும் பலரின் கோரிக்கையாக உள்ளது.
இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ‘வடசென்னை 2’ஆம் பாகத்திற்கான புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
நடிகர் தனுஷ், இயக்குநர் மாரி செல்வராஜ் மீண்டும் இணையும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது. இத்திரைப்படம் முற்றிலும் மாறுபட்ட ஒரு வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட படமாக இருக்கும். படம் குறித்த கூடுதல் விவரங்களை இப்போது வெளியிடமுடியாது என்றார் ஐசரி கணேஷ்.
மேலும், இந்தத் திரைப்படத்தை முழுமையாக எடுத்து முடித்த பிறகு, ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலக ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் ‘வடசென்னை பாகம் 2’ திரைப்படத்தின் பணிகளைத் தொடங்கவுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

