தீபாவளி வெளியீட்டுக்குப் படங்களுக்கான போட்டி தொடங்கிவிட்டது.
மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘பைசன் காளமாடன்’ படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இப்படம்தான் முதன்முதலாக தீபாவளி வெளியீட்டை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து சில படங்களும் தங்களுடைய வருகையை உறுதிப்படுத்தவுள்ளன.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடித்து வரும் படமும் தீபாவளிக்கு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. விரைவில் இறுதிகட்டப் படப்பிடிப்பை முடித்து, வெளியீட்டுத் தேதியினை அறிவிக்கவுள்ளது படக்குழு.
மேலும், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படமும் தீபாவளிக்கு வெளியாகும் எனத் தெரிகிறது. அதன் படப்பிடிப்பு முடிவடைந்து, கிராபிக்ஸ் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதன் வெளியீட்டில் உள்ள சில சிக்கல்கள் விரைவில் பேச்சுவார்த்தையில் சரிசெய்யப்படும் எனத் தெரிகிறது.
இந்த மூன்று படங்கள் தவிர மேலும் சில படங்களும் தீபாவளி வெளியீட்டை முன்வைத்து பணிபுரிந்து வருகிறார்கள். ஏதேனும் ஒரு பெரிய படம் அதிகாரபூர்வமாக வெளியீட்டை உறுதிசெய்தால் மட்டுமே இந்தப் போட்டிக்கு முடிவு வரும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.