இசையமைப்பாளர் தேவா காலமானார்

இசையமைப்பாளர் தேவா காலமானார்

படங்கள்: மின்னம்பலம்

17 Oct 2026 - 2:24 pm

2 mins read

சென்னை: புகழ்பெற்ற இசையமைப்பாளர் தேவா, சனிக்கிழமை (அக்டோபர் 17), காலமானார். அவருக்கு வயது 75.

உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’, ‘வாலி’, ‘பஞ்சதந்திரம்’ உள்ளிட்ட 400க்கும் மேலான படங்களுக்கு இசையமைத்துள்ளார் தேவா.

‘தேனிசைத் தென்றல் தேவா’ என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட அவரது இயற்பெயர் தேவநேசன் ஆகும்.

கடந்த 1989ஆம் ஆண்டு வெளிவந்த ‘மனசுக்கேத்த மகாராசா’ என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் தேவா.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் இசையமைத்துள்ள தேவா, 1950ஆம் ஆண்டு, நவம்பர் 20ஆம் தேதி, வேலூர் மாவட்டத்தில் உள்ள மாங்காடு கிராமத்தில் பிறந்தவர்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மனோ, சித்ரா உள்ளிட்ட பலருடன் இணைந்து பணியாற்றியவர் அவர்.

இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் ஆகிய இருவரும் தமிழ்த் திரையுலகில் ஆதிக்கம் செலுத்திவந்த வேளையில், தமக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி நடைபோட்டவர் தேவா. தொடக்கக் காலத்தில் இசையமைப்பாளர் சந்திரபோசுடன் இணைந்து மேடை நிகழ்ச்சிகளை நடத்திவந்த தேவா, பின்னர் தனித்து இசையமைக்கத் தொடங்கினார்.

கடந்த 2022ஆம் ஆண்டு, ‘தேவா தேவாதான்’ இசை நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தேவாவின் தனித்துவமான இசையை வெகுவாகப் பாராட்டினார்.

சென்னையின் அடையாளமாக விளங்கிய கானா பாடல்கள் குறித்து உலக அளவில் பேசவும் பாடவும் வைத்தவர் தேவா.

தம்மை கானா பாடல்களோடு முத்திரை குத்துவது பற்றி தேவா பல இடங்களில் பேசியிருந்தாலும் அது தமக்கு மகிழ்ச்சி தருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேவா இசையமைப்பில் உருவான ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ எனத் தொடங்கும் பாடல் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.

காலஞ்சென்ற சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனுக்கு மிகவும் பிடித்தமான பாடல் இது. அவரது இறுதிச்சடங்கின்போது இந்தப் பாடல் ஒலிக்கச் செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.

தமிழக அரசின் திரைப்பட விருது, கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற தேவா, ஏராளமான கானா பாடல்களைத் தாமே இயற்றிப் பாடியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்