ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருக்கும் படம் ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம்.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அக்டோபர் 2ஆம் தேதி அப்படம் திரைக்கு வருகிறது.
கரூரில் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து, செப்டம்பர் 30ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருந்த அப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியைப் படக்குழு ஒத்திவைத்துள்ளது.
அது குறித்து அக்குழு வெளியிட்ட அறிக்கையில், “கரூர் சம்பவத்தைக் கருத்தில் கொண்டு, செப்டம்பர் 30ஆம் தேதி சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தின் விளம்பர நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளோம். பாதிக்கப்பட்டவர்களுடன் நிற்க வேண்டிய நேரம் இது என்று நாங்கள் நம்புகிறோம்.
“பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுடைய பிரார்த்தனை என்றும் அவர்களுக்குத் துணை நிற்கும்,” எனக் கூறியிருந்தது.
மேலும், தமிழக ரசிகர்களை வேறொரு பொருத்தமான நேரத்தில் சந்திக்க நாங்கள் காத்திருக்கிறோம் எனவும் அக்குழு குறிப்பிட்டிருந்தது.
இதற்கிடையே, செப்டம்பர் 28ஆம் தேதி நடக்கவிருந்த பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் ‘டீசர்’ வெளியீட்டு விழாவும் கரூர் சம்பவத்தால் ஒத்திவைக்கப்பட்டது.