உறுதியானது வெற்றிமாறன், சிம்பு கூட்டணி

3 mins read
9ba1a7de-1adc-4caa-9787-ce791fbbaee1
சிம்பு. - படம்: ஊடகம்

இயக்குநர் வெற்றிமாறன், சிம்பு கூட்டணியில் உருவாகி உள்ள படம் குறித்து அதன் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு புதுத்தகவல் வெளியிட்டுள்ளார். வெற்றிமாறனின் பிறந்தநாளையொட்டி இந்த அறிவிப்பு வெளியானது.

இயக்குநராகப் பெரிய வெற்றிகளைப் பெற்ற வெற்றிமாறன், தயாரிப்பாளராகச் சமாளிக்க முடியவில்லை. இதை அவரே வெளிப்படையாகக் கூறிவிட்டார். தனது தயாரிப்பு நிறுவனத்தையும் நிரந்தரமாக மூடுவதாக அவர் அறிவித்துவிட்டார்.

இனி அவரை முழுநேர இயக்குநராக மட்டுமே பார்க்க முடியும் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

ஏற்கெனவே வெற்றிமாறன்-சூர்யா கூட்டணியில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ‘வாடிவாசல்’ படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். எனினும், பல்வேறு காரணங்களால் இப்படத்திற்கான வேலைகள் இன்னும் தொடங்கப்படவே இல்லை.

இந்நிலையில், சிம்புவை நாயகனாக நடிக்க வைத்து, வெற்றிமாறன் ஒரு படத்தை இயக்க இருப்பதாகத் தகவல் வெளியானது. இது தனுஷை வைத்து அவர் இயக்கிய ‘வடசென்னை’ படத்தின் இரண்டாம் பாகம் என்றும் கூறப்பட்டது.

கூடவே, ஒரு சர்ச்சையும் வெடித்தது. சிம்புவை வைத்து படம் எடுப்பதால் தனுஷ் கோபமடைந்ததாகவும் அதை வெளிப்படுத்தும் விதமாக வடசென்னை படத்தின் ‘காப்பிரைட்’ உரிமைக்காக ரூ.10 கோடி செலுத்த வேண்டும் என அவர் வெற்றிமாறனுக்கு நிபந்தனை விதித்ததாகவும் ஒரு தரப்பினர் தெரிவித்தனர்.

ஆனால் வெற்றிமாறன் இதைத் திட்டவட்டமாக மறுத்தார். தனுஷ் சிறந்த பண்பாளர் என்றும் தம்மிடம் பணம் தொடர்பாக எந்தவித நிபந்தனையும் விதிக்கவில்லை என்றும் கூறினார்.

இப்படி சர்ச்சைகள் பல தொடர்ந்தாலும், சிம்பு படத்துக்கான பணிகளில் கவனம் செலுத்த வெற்றிமாறன் தவறவில்லை.

சிம்பு படத்துக்காகச் சோதனை முயற்சியாக சில காட்சிகளைப் படமாக்கி உள்ளார். அவை எதிர்பார்த்ததைவிட மிகச்சிறப்பாக வந்திருக்கின்றனவாம்.

இதனால் மிகுந்த உற்சாகமடைந்துள்ளார் வெற்றிமாறன். அவர் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பேட் கேர்ள்’ திரைப்படம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 5) வெளியானது.

இதன் செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது, சிம்பு கூட்டணியில் உருவாகும் புதிய படம் குறித்தும், ‘வாடிவாசல்’ பற்றியும் அடுத்த 10 நாள்களில் புதுத்தகவல் வெளியாகும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தயாரிப்பாளர் தாணு, வெற்றிமாறனின் பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 4ஆம் தேதி புதுத்தகவல் ஒன்றை தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

“வெற்றி நடை வீர நடை வெல்லும் இவன் படை அகவை 50ல் வெற்றி மாறனின் புகழ் எட்டுத் திக்கும் எதிரொலிக்கப் பிறந்தநாள் வாழ்த்துகள்,” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘வாடிவாசல்’, சிம்பு படம், ‘வடசென்னை 2’ என வெற்றிமாறனின் அடுத்தடுத்த படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

இந்நிலையில் சிம்பு நடிக்கும் படமும் வடசென்னை பின்னணியில்தான் உருவாகிறது. எனினும் இது ‘வடசென்னை’ படத்தின் இரண்டாம் பாகம் அல்ல என்று வெற்றிமாறன் தெளிவுபடுத்தி உள்ளார்.

“முன்பு தனுஷ் நடிப்பில் ‘வடசென்னை’ உருவானபோது அதில் சிம்புதான் நடிப்பதாக இருந்தார். சில காரணங்களால் அவர் நடிக்க இயலாமல் போனதையடுத்தே தனுஷ் ஒப்பந்தமானார். இப்போது, அதேபோன்ற கதையில் சிம்பு நடிப்பது யாரும் எதிர்பாராத திருப்பம்,” என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.

வெற்றிமாறன் இயக்குவது சிம்புவின் 49வது படமாகும். தற்காலிகமாக, அதனை ‘STR 49’ என்று ரசிகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்