வீட்டு வேலைகளைச் செய்வதில் ஆண் - பெண் பாகுபாடு பார்க்கக்கூடாது என்றும் சமைப்பதும் வீட்டைச் சுத்தம் செய்வதும் பெண்களின் கடமை அல்ல என்றும் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள அண்மைய நேர்காணலில், சமூகத்தில் நிலவும் பாலினப் பாகுபாடுகள், திரையுலக மாற்றங்கள் குறித்துப் பல சுவாரசியமான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
“நம் சமூகத்தில் பெண்கள் மட்டுமே வீட்டுப் பொறுப்புகளை நிர்வகிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் ஆண்கள் பெரும்பாலும் அந்த வேலைகளில் ஈடுபடுவதில்லை.
“வீட்டு வேலைகளை ஒருபோதும் பாலினத்துடன் இணைக்கக் கூடாது.
“சுத்தம் செய்வதும், சமைப்பதும் பெண்களின் தனிப்பட்ட வேலையல்ல; அவை இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொரு வயது வந்த நபருக்குமான அடிப்படை அத்தியாவசிய வேலை.
“தயவுசெய்து உங்களின் பொறுப்பற்றத் தன்மையுடன் பாலினத்தைக் குழப்பிக் கொள்ளாதீர்கள்,” என்று சாடியுள்ளார்.
மின்னிலக்க உலகமும் திரையுலக மாற்றமும்
தொடர்ந்து பொழுதுபோக்குத் துறை குறித்துப் பேசிய அவர், “தொழில்நுட்பம் இன்று திரையுலகைப் பெரிய அளவில் மாற்றியுள்ளது. திரைப்படத் தயாரிப்பு முன்பைவிட இப்போது எளிதாகி இருக்கிறது.
“மின்னிலக்க மயம் வந்தபிறகு, படைப்பாளிகள் பாரம்பரிய திரையுலகக் கட்டமைப்புகளை மட்டுமே நம்பியிருக்காமல், நேரடியாகப் பார்வையாளர்களிடம் தங்கள் கருத்துகளைக் கொண்டு சேர்க்க முடிகிறது.
“உங்களுக்கு ஒரு நல்ல யோசனை இருந்தால், அதை உடனடியாகக் காணொளியாக மாற்றி யூடியூப்பில் வெளியிட்டு உங்களை நிரூபிக்கலாம்,” என்றார்.
பிரியங்கா சோப்ரா தற்போது அனைத்துலக அளவில் மிகவும் பரபரப்பான நடிகையாக வலம் வருகிறார்.
விரைவில் புதிய ஹாலிவுட் படம் ஒன்றில் உலகப் புகழ்பெற்ற நடிகை ஏஞ்சலினா ஜோலியுடன் இணைந்து நடிக்கப் போவதாக அவர் அண்மையில் உறுதிப்படுத்தியிருந்தார்.
அத்துடன், இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிரம்மாண்ட ‘வாரணாசி’ திரைப்படத்தில், டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோருடன் இணைந்து பிரியங்கா சோப்ரா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

