பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) வெளியான நடிகர் ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படத்தின் முதற்காட்சியைத் திருவிழாபோலக் கொண்டாடினர் சிங்கப்பூர் ரசிகர்கள்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பல்வேறு கலைஞர்களின் நடிப்பில் வெளியான இப்படத்தின் முதல் காட்சி ‘கார்னிவல் சினிமாஸ்’ அரங்கில் காலை 6.30 மணிக்குத் தொடங்கியது.
புதன்கிழமையிலிருந்தே இதற்குத் தயாராயினர் ‘அன்பு சாம்ராஜ்ஜியம்’ ரசிகர் குழுவினர். புதன்கிழமை மாலையே ரஜினிக்கு ஆளுயரப் பதாகை (cut-out) வைத்ததுடன், முதற்காட்சிக்கு முன்பாக அதற்கு மாலைகள் அணிவித்துக் கொண்டாடினர். ரஜினியின் 50 ஆண்டுகாலத் திரைப்பயணத்தைக் காட்டும் புகைப்படங்களையும் நிறுவியிருந்தனர்.
பெருங்குழுவாகத் திரண்டு வந்த அவர்கள், மேளதாளம், நடனம், ஆர்ப்பரிப்பு எனத் திரையரங்கை அதிர வைத்தனர். ‘கூலி’ கருப்பொருளில் அமைந்த சட்டைகள், அடையாள எண் கொண்ட ‘கைப்பட்டி’ அணிந்து வந்ததுடன் ரஜினி திரையில் தோன்றும் முதல் காட்சிவரை ஆர்ப்பரித்தபடி இருந்தனர்.
“நான் எப்போதும் சொல்வதுபோல, ரஜினி திரைப்பட வெளியீடுதான் எங்களுக்குப் பண்டிகை நாள்,” என்ற கெளஷிக் கார்த்திகேயன், கடந்த இரண்டு வாரங்களாக இவற்றுக்கான ஏற்பாடுகளைச் செய்ததாகக் கூறினார்.
13 ஆண்டுகள் முன்பு ரஜினி புகைப்படங்களில் தனக்குப் பிடித்தவற்றைக் கோத்து வடிவமைத்த படம், திரையரங்கிலும் திரையிலும் காட்சிப்படுத்தப்பட்டது மனமகிழ்ச்சி அளிப்பதாக அவர் சொன்னார்.
மலேசியாவின் ஜோகூர் பாருவிலிருந்து நண்பர்கள் ஏறத்தாழ 20 பேருடன் முதன்முறையாகச் சிங்கப்பூரில் முதற்காட்சியைப் பார்க்க வந்தார் சரா. “ரஜினி ரசிகர்கள் எங்கிருந்தாலும் அவர்களது கொண்டாட்டங்களில் வேறுபாடில்லை. இங்கு வந்து படம் பார்த்தது மாறுபட்ட அனுபவம்,” என்றார் அவர்.
தன் கணவரும் தீவிர ரஜினி ரசிகருமான பிரதீப்புடன் முதன்முறையாகத் திரைப்படத்தின் முதற்காட்சியைக் காண வந்திருந்தார் பிரீத்தி.
தொடர்புடைய செய்திகள்
“டீ- ஏஜிங் தொழில்நுட்பத்தில் ரஜினி இளமைத் துள்ளலுடன் காணப்படுகிறார். நடிகர்கள் அனைவருக்கும் சமமான கதாபாத்திரம் இருப்பதால், இது உண்மையான ‘பேன்-இந்தியா’ திரைப்படமாகியுள்ளது,” என்றார் அவர்.
இடைவேளைக் காட்சியும் இறுதிக் காட்சிகளும் எதிர்பார்ப்பை விஞ்சியுள்ளதாகக் கூறிய ரசிகர் சந்தோஷ், முதற்காட்சி முடிந்த கையோடு அடுத்த காட்சிக்கும் செல்லவிருப்பதாகக் கூறினார்.
“ரஜினியைத் திரையில் காண்பதே பெருமகிழ்ச்சி என்றும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் ஏற்றுள்ள சௌபின் ஷாகிர் சிறப்பாக நடித்துள்ளார் என்றும் வில்லன் நாகார்ஜுனாவின் நடிப்பு ரஜினியின் கதாபாத்திரத்துக்கு வலு சேர்த்துள்ளதாகவும் சொன்னார் ‘அன்பு சாம்ராஜ்ஜியம்’ குழுவைச் சேர்ந்த கெளஷிக்.