லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்துள்ள ‘கூலி’ முழு நீள ‘ஆக்ஷன் - டிராமா’ பாணியில் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. சத்யராஜ், நாகார்ஜுனா, ஷ்ருதிஹாசன், உபேந்திரா, சௌபின் ஷாகிர், ஆமீர்கான் உட்பட பலர் நடித்திருந்தாலும் ஒவ்வொருவருக்கும் வலுவான கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.
‘தேவா மேன்ஷன்’ எனும் பெயரில் ஆண்களுக்கான தங்குவிடுதியை நடத்தி வருகிறார் தேவராஜ் (ரஜினி). அவரது இளமைக்கால நண்பர் ராஜசேகர் (சத்யராஜ்) திடீரென இறந்துபோக, அது கொலையெனக் கண்டறிந்ததும், கொலையாளியைத் தேடிப் பழி தீர்க்க நினைக்கிறார் தேவா.
ராஜசேகரின் மகள் பிரீத்தியுடன் (ஷ்ருதிஹாசன்) இணைந்து தேடல் பணியைத் தொடங்குகிறார். ‘கிணறு வெட்டப் பூதம் புறப்பட்ட கதையாக’ அப்பாவிக் கூலித் தொழிலாளிகளின் இதயத்தைத் திருடி வெளிநாடுகளுக்குக் கடத்தும் குற்றக்கும்பல் குறித்துத் தெரிந்துகொள்கிறார்.
ராஜசேகரைக் கொன்றது யார், கொலையாளியையும் குற்றக்கும்பலைச் சேர்ந்த ‘சைமனையும்’ (நாகார்ஜுனா) பழிதீர்த்தாரா தேவா என்பது தான் மீதிக்கதை. இதற்கிடையே சைமன், தேவா, ராஜசேகர் ஆகியோருக்கிடையிலான தொடர்பு ‘ஃப்ளாஷ் பேக்’ காட்சிகளாகத் திருப்பத்துடன் காட்டப்படுகிறது. அக்காட்சிகளில் செயற்கை நுண்ணறிவு, ‘டீ- ஏஜிங்’ தொழில்நுட்பங்களின் உதவியுடன் 80கள் காலகட்டத்தில் இருந்ததைப்போல ரஜினியின் தோற்றத்தைக் கொணர்ந்துள்ளனர். அந்தக் காட்சிகளில் வரும் ரஜினி சிலிர்ப்பூட்டுகிறார்.
ரஜினி, 74 வயதிலும் மாறாத துள்ளல், அவருக்கே உரிய ‘ஸ்டைல்’ என ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொள்கிறார். சண்டைக் காட்சிகளில் கைதட்டல்களையும் ‘விசில்களையும்’ அள்ளுகிறார்.
நண்பனின் இறப்பு, காலஞ்சென்ற தமது மனைவியுடனான புகைப்படத்தைப் பார்ப்பது, மகள் யாரென அறிவது போன்ற உணர்வுபூர்வமான காட்சிகளில் ‘நடிகர்’ ரஜினி வெளிவருகிறார்.
‘சைமன்’ காதாபாத்திரத்தில் ‘கிங்’ நாகார்ஜுனா ‘ஸ்டைலிஷ்’ வில்லனாக மிளிர்கிறார். கோபம், ஆணவம், கண்ணை மறைக்கும் பாசம் என நடிப்பில் மிரட்டுகிறார்.
பாசமான மகள், பொறுப்பான அக்கா, உணர்வுகளுக்கும் பொறுப்புகளுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் இளம்பெண் எனப் பல்வேறு பரிமாணங்களைத் தூக்கிச் சுமந்திருக்கிறார் ஷ்ருதி.
தொடர்புடைய செய்திகள்
தயாளன் கதாபாத்திரத்தை ஏற்ற மலையாள நடிகர் சௌபினின், அபாரமான நடிப்பின் மூலம் படத்துக்கு வலுச் சேர்த்துள்ளார். அவரது மனைவியாக வரும் கல்யாணி (ரச்சிதா ராம்) வில்லி போன்ற கதாபாத்திரத்தில் சிறப்பாகப் பங்காற்றியுள்ளார்.
சில காட்சிகளில் வந்தாலும் ‘தாஹாவாக’ அமீர்கான், ‘காலீசாவாக’ உபேந்திரா இருவரும் கவனம் ஈர்க்கின்றனர். இணைக் கதாபாத்திரங்களில் நடித்த சார்லி, கண்ணா ரவி, காளி வெங்கட், ‘லொள்ளு சபா’ மாறன், மோனிஷா ப்ளெசி உள்ளிட்டோர் அவரவர் கதாபாத்திரங்களில் கச்சிதமாகப் பொருந்துகின்றனர்.
தேவாவுக்கும் ராஜசேகருக்குமான நட்பில் வலுவின்மை, பொருந்திப் போகாமல் நெருடும் பின்கதை, வலுவில்லாத குற்றக்கும்பல் உறுப்பினர்கள், உண்மையிலிருந்து சற்றே விலகி நிற்கும் காட்சிகள் போன்றவை ஏமாற்றமளிக்கின்றன.
அனிருத்தின் பின்ணணி இசை காட்சிகளுக்கு வலுச் சேர்க்கின்றது. சண்டைக் காட்சிகளில் கர்நாடக இசைக் கலவையுடன் அமைந்த இசை தாளம்போட வைக்கிறது. லோகேஷுக்கே உரிய பாணியில் ‘லயோலா காலேஜ் லைலா’ பாடல் சண்டைக் காட்சியில் இடம்பெறும்போது திரையரங்கு ரசிகர்களின் ஆரவாரத்தில் அதிர்ந்தது. அன்பறிவின் சண்டைக் காட்சிகளில் தனித்துவம் தெரிகிறது.
பல்வேறு திருப்பங்கள் முன்கூட்டியே கணிக்கும் வகையில் இருந்தாலும், 2 மணி நேரம் 50 நிமிடங்கள் ஓடும் படம் அதிகத் தொய்வின்றி நகர்கிறது.
சற்றே கூடுதலான வன்முறைக் காட்சிகள் இருந்தாலும், ரஜினி ரசிகர்களுக்கு அரங்கம் அதிரும் மற்றுமொரு கொண்டாட்டமாக அமைந்துள்ளது ‘கூலி’ என்றால் அது மிகையில்லை.