தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘கூலி’ டிக்கெட் காலி!

2 mins read
அதிர்‌‌ஷ்ட ரசிகர்கள் ஜாலி
1b69c47c-084a-4d62-a088-008ce26425ce
‘கூலி’ திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். - படம்: இணையம்

ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ள ‘கூலி’ திரைப்படத்தின் காலை 6.35 மணி முதல் காட்சிக்கான நுழைவுச்சீட்டுகள், விற்பனை தொடங்கிய மூன்றே நிமிடங்களில் விற்றுமுடிந்தன.

சிங்கப்பூரின் கார்னிவல் திரையரங்குகளில் அத்திரைப்படத்தின் முதல் காட்சிக்கான நுழைவுச்சீட்டு விற்பனை ஆகஸ்ட் 11ஆம் தேதி காலை கிட்டத்தட்ட 11.50 மணிக்குத் தொடங்கியதாகவும் மூன்றே நிமிடங்களில் அனைத்துச் சீட்டுகளும் விற்று முடிந்ததாகவும் கூறினார் சிங்கப்பூரின் ரஜினி ரசிகர் மன்றம் அன்பு சாம்ராஜ்யத்தின் உறுப்பினர் கி‌‌ரிஷன் பிரகா‌ஷ் நம்பியார்.

ரஜினியின் திரைப்படத்தைக் காணும் வேட்கையில், ‘அன்பு சாம்ராஜ்யம்’ மொத்த விற்பனை (bulk) முறையில் நுழைவுச்சீட்டுகளை வாங்கியதாக ‘எஸ்ஜி_கஃபே’ (@sg_cafe) தன் இன்ஸ்டகிராம் தளத்தில் பதிவுசெய்தது.

சில ரசிகர்கள் நுழைவுச்சீட்டுகள் கிடைக்காத ஏமாற்றத்தை அப்பதிவுக்குப் பதிலடியாகத் தெரிவித்தனர்.

கார்னிவல் திரையரங்குகளின் இணையத்தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளால் இணையத்தில் நுழைவுச்சீட்டுகளை வாங்குவது சாத்தியமில்லாத நிலையில் நேரில் சென்று வாங்கினார் திரு விக்னே‌ஷ்.

“நண்பகல் 12 மணியிலிருந்து, 3-4 மணி நேரம் நுழைவுச்சீட்டுகளை இணையத்தளத்தில் வாங்க முயற்சிசெய்தேன். இருக்கைகளைத் தேர்வுசெய்ய முடிந்தாலும், கட்டணம் செலுத்த முடியவில்லை. மற்றொரு முறை இருக்கைகளைத் தேர்வு செய்யக்கூட முடியவில்லை. அத்தனைப் பேர் ஒரே சமயம் முயற்சி செய்ததால் அத்தளத்தால் சமாளிக்கமுடியவில்லையென நினைக்கிறேன்,” என்றார் விக்னே‌ஷ்.

‘அன்பு சாம்ராஜ்யம்’ என்னும் சிங்கப்பூர் ரஜினி ரசிகர் மன்றம், சிறப்பு கழுத்துச் சங்கிலியுடன் திரைப்படத்தை வரவேற்கிறது.
‘அன்பு சாம்ராஜ்யம்’ என்னும் சிங்கப்பூர் ரஜினி ரசிகர் மன்றம், சிறப்பு கழுத்துச் சங்கிலியுடன் திரைப்படத்தை வரவேற்கிறது. - படம்: கி‌‌ரிஷன் பிரகா‌ஷ் நம்பியார்

நண்பர் ராம் கொடுத்த ஆலோசனையில் நேரில் சென்று நுழைவுச்சீட்டுகள் வாங்க முயற்சி செய்தார் விக்னே‌ஷ். “முதலில் கேட்டபோது நுழைவுச்சீட்டுகள் தீர்ந்துவிட்டன என்றனர். நான் கிளம்பலாமென நினைத்தேன். நல்ல வேளை, திரும்பக் கேட்டுப் பார்த்தபோது அவர்கள் தளத்தை ‘ரிஃப்ரெ‌ஷ்’ செய்ததில், இருக்கைகள் காலியாக இருந்தது தெரியவந்தது. இரவு 7.30 மணிக் காட்சிக்கு எட்டு நுழைவுச்சீட்டுகளை ஒவ்வொன்றும் $20க்கு வாங்க முடிந்தது,” என்றார் விக்னே‌ஷ்.

ரஜினி ரசிகர் மன்றமான ‘அன்பு சாம்ராஜ்யம்’, ‘கூலி‘ சங்கிலிகள், ரஜினி பதாகைகள், பாரம்பரிய உறுமி மேளம், சிறப்பு உடைகளுடன் ‘கூலி’ திரைப்படத்தைப் பிரம்மாண்டமாக வரவேற்கும். ரஜினி பதாகைகளுக்கான திறப்பு விழா ஆகஸ்ட் 12ஆம் தேதி கார்னிவல் திரையரங்குகளில் நடைபெறும்.

‘கூலி’ திரைப்படத்துக்கு இந்தியாவிலும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. ‘புக் மை ‌ஷோ’ நுழைவுச்சீட்டு விற்பனைத் தளத்தில், கூலி திரைப்படத்துக்கு ஒரு மில்லியன் நுழைவுச்சீட்டுகள் விற்பனையாகிவிட்டதாகத் தினமணி நாளிதழ் பதிவுசெய்துள்ளது. இணைய முன்பதிவு வழி இத்தனை நுழைவுச்சீட்டுகள் விற்பனையாவது இந்தியாவில் இதுவே முதன்முறையெனக் கூறப்படுவதாகவும் அது பதிவுசெய்தது.

குறிப்புச் சொற்கள்