நடிகைகள் அழகாக இருப்பார்கள், நன்றாக நடிப்பார்கள் என்பது மட்டுமே செய்தியாகி வருகிறது.
ஆனால் ஓவியா, சம்யுக்தா போன்ற ஒருசில நடிகைகள் மட்டுமே வேறு சில காரணங்களுக்காக ரசிகர்களால் ஆராதிக்கப்படுகிறார்கள்.
நடிகை ஓவியாவுக்குத் திரையுலகில் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. ‘பிக்பாஸ்’ பட்டம் பெற்ற இவர், அண்மைக் காலமாக தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டு வரும் கருத்துகளுக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
அரசியல், சமூகம், கலை என அனைத்துத் துறைகளுக்கும் தனது கருத்துகளைத் தயங்காமல் பதிவுசெய்து வரும் இவருக்கு, அசாத்திய துணிச்சல் இருப்பதாக ‘ஓவியா ஆர்மி’ உறுப்பினர்கள் சமூக ஊடங்களில் ஆர்ப்பரிக்கிறார்கள்.
இன்னொரு பக்கம், விஜய் ரசிகர்களோ இவர் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
அண்மையில் 41 பேரைக் காவுகொண்ட கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, தவெக தலைவர் விஜய் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார் ஓவியா.
அதன் பின்னர் அவரைப் பற்றி சமூக ஊடகங்களில் மிக மோசமான வசைமொழிகள் வலம்வந்தன. ஆனால், அவரோ எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை.
எதிர்கருத்துகளை பதிவிட்டவர்களுக்குத் தாமே நேரடியாகப் பதிலடி தந்துள்ளார் ஓவியா.
‘கோமாளி’, ‘பப்பி’, ‘மன்மத லீலை’ ஆகிய படங்களில் நடித்துள்ள சம்யுக்தா ஹெக்டே, ‘டிஸ்கவரி’ தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளியேறி வரும் ‘ராணிஸ் ஆஃப் த ஜங்கல்’ நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
ஆகக் கவர்ச்சியான உடைகளை அணிந்து, நடுக்காட்டில் உள்ள அருவியில் குளிப்பது, காட்டில் யார் துணையும் இன்றி இரவுப்பொழுதைக் கழிப்பது எனக் கடினமான பல சுற்றுகள் கொண்ட இந்த நிகழ்ச்சியில் சம்யுக்தா அசத்துகிறார்.
“வெறித்தனமாகவும் சற்றே முட்டாள்தனமாகவும் காட்சியளிக்கும் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் அதிர்ச்சி அடைவீர்கள். அந்த அதிர்ச்சியை மீறி உங்கள் முகத்தில் தெரியப்போகும் மகிழ்ச்சியைக் காண நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்று காட்டில் இருந்தபடியே நேயர்களுக்கு இன்ஸ்டகிராம் மூலம் தெரிவித்துள்ளார் சம்யுக்தா.

