பாலமேடு ஏறுதழுவுதல் நிகழ்வில், துணை முதலமைச்சரைச் சந்தித்த நடிகர் சூரியை, இணையத்தில் ஒருவர் விமர்சித்ததற்கு பதில் அளித்துள்ளார் சூரி.
சனிக்கிழமை (ஜனவரி 17) அன்று பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை நேரில் காண நடிகர் சூரி சென்றிருந்தார்.
அங்கு இருந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு மரியாதை செலுத்திய சூரியை சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒருவர் விமர்சித்திருந்தார்.
அதற்கு சூரி “தம்பி, பிறரை மதித்துப் பேசுவதே தமிழ்ப் பண்பாடு. வெறும் கவனத்தை ஈர்ப்பதற்காகக் கூறுவதெல்லாம் உண்மையாகாது. திரைப்படங்களின் வெற்றியைப் பணமோ, அரசியலோ தீர்மானிப்பதில்லை; கதைக்கருவே அதன் அரசன். மக்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே ஒரு படைப்பு நிலைக்கும்,” என்று பதிலிட்டு இருந்தார் சூரி.
சூரியின் இந்தப் பதிலைக் கண்ட அந்த நபர், தன் பதிவை நீக்கிவிட்டு மன்னிப்புக் கோரினார்.
அதற்குச் சூரி, “தன் தவற்றை உணர்ந்து ஒப்புக்கொள்வது உயர்ந்த குணம். வேடிக்கைக்காகக் கூடப் பிறர் பெயரைப் பயன்படுத்திச் சிக்கலை உண்டாக்குவது முறையல்ல; அது இருவரின் மதிப்பையும் கெடுக்கும்,” என்று பெருந்தன்மையுடன் பதிவிட்டு இருந்தார்.

