‘கறுப்பு’ படத்தின் வசூல் வெற்றிக்குப் பிறகு, ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்துக்குத் தெம்பாக களமிறங்கியுள்ளார் படத்தின் நாயகன் சூர்யா.
இந்தப் படத்துக்காக சூர்யா தனது முழுத்திறமையை வெளிப்படுத்தி உள்ளாராம். எனவே, படம்பார்க்கும் ரசிகர்களுக்குப் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன என்கிறார் அப்படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி.
‘லக்கி பாஸ்கர்’ படத்துக்காகத் தேசிய விருது பெற்றவர், சூர்யாவை வைத்துப் படம் இயக்கியது அற்புதமான அனுபவத்தைத் தந்ததாகச் சொல்கிறார்.
சூர்யாவை வைத்து படம் இயக்கும் ஆசை தன்னைப் போலவே பெரும்பாலான இயக்குநர்களுக்கு இருக்கும் என்றும் அவரை எப்படி வேண்டுமானாலும் செதுக்கிப்பார்க்கலாம் என்றும் அண்மைய பேட்டி ஒன்றில் புகழ்ந்துள்ளார் வெங்கி அட்லூரி.
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தை ஒரு வழக்கமான கதையாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் ஓர் இயக்குநராகத் தானும் நடிகராக சூர்யாவும் இணைந்து நல்ல முயற்சியில் ஈடுபட்டு மனநிறைவு பெற்றதை மறக்க முடியாது என்றும் அப்பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“சூர்யாவைப் போன்ற பெரிய நடிகர்களை வைத்து படம் எடுக்கும்போது நிறைய உழைப்பும் அறிவாற்றலும் தேவை. இந்த விஷயத்தில் ஆந்திராவாக இருந்தாலும், தமிழக மக்களாக இருந்தாலும் ரசிகர்களின் மனோபாவம் ஒன்றுதான்.
“தங்கள் அபிமான நாயகர்களிடம் இருந்து அவர்கள் நேர்த்தியான, தரமான படைப்புகளை மட்டுமே விரும்புகிறார்கள்,” என்கிறார் வெங்கி அட்லூரி.
தமிழ் சினிமாவில் அடிதடி திரைப்படங்கள் ஆதிக்கம் செலுத்திவரும் சூழலில், குடும்ப அமைப்பையும் மனித உறவுகளின் பரஸ்பர சார்பையும் கொண்டாடும் ஒரு திரைப்படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அனைத்துலகத் துப்பாக்கிச்சுடும் வீரரான சஞ்சய் விஸ்வநாத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது இக்கதை.
குடும்பப் பொறுப்புகளைச் சுமக்கும் நாயகனின் வாழ்வில் நுட்பமான காதல் நுழையும்போது ஏற்படும் உணர்வுபூர்வமான திருப்புமுனைகளே திரைக்கதை.
வணிக வெற்றிக்குப் பிறகு முற்றிலும் மாறுபட்ட தளத்தில் நடிக்க விரும்பியே சூர்யா இக்கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
படப்பிடிப்பின் இறுதி நாளில் காய்ச்சல் இருந்தபோதிலும், இரவு வரை தொடர்ந்து நடித்துக் கொடுத்துத் தன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினாராம்.
சூர்யா, ராதிகா சரத்குமார் இடையேயான அம்மா-மகன் பிணைப்பு படத்தின் முக்கியத் தூணாக அமைந்துள்ளது. நாயகியாக மமிதா பைஜுவும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ரவீனா டாண்டன் ஒரு முக்கியமான வேடத்திலும் நடித்துள்ளனர்.
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, நிமிஷ் ரவி ஒளிப்பதிவையும் நவின் படத்தொகுப்புப் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.
“சூர்யாவிடம் கதை சொன்னபோது அவர் வெகுவாக ரசித்தார். அவரைப் போன்ற பக்குவத்தில் இருக்கும் ஒரு நடிகரை வைத்துப் படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை என் மனத்தில் கனிந்துகொண்டேயிருக்க, அது நடந்தேவிட்டது. அவரால் எந்தப் பாத்திரத்துக்கும் வடிவம் தர முடிகிறது.
“சில விஷயங்களை, ஒருசிலரை உதாரணமாக வைத்துச் சொன்னால்தான் அந்தச் செய்தி ரசிகர்களைச் சென்றடையும். நடிப்பின் நுணுக்கமான எல்லையை சூர்யா நெருங்கிக்கொண்டிருப்பது இந்தப் படத்தில் தனியாகத் தெரியும்.
“இவ்வளவு இயற்கையான நடிகனைக் கையாள்வது எனக்கு நல்ல அனுபவமாக அமைந்தது,” என்கிறார் இயக்குநர் வெங்கி அட்லூரி.
சுவாரசியமான திரைக்கதையோடும் திரையரங்கை விட்டு வெளியேறும்போது நேர்மறை உணர்வைத் தரும் விதமாகவும் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படம், தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


