‘பட்டம் போலே’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, இன்று இந்தியத் திரையுலகின் கவனிக்கத்தக்க நடிகையாக வலம் வரும் மாளவிகா மோகனன், தன்னைச் சுற்றி எழும் விமர்சனங்களுக்குப் பக்குவமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘பாக்கெட் நாவல்’ திரைப்படத்தில் நடித்து வரும் அவர், தெலுங்கு, மலையாளப் படங்களில் மூத்த நடிகர்களுடன் இணைந்து நடித்தது குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின.
இந்த விமர்சனங்கள் குறித்து அண்மைய நிகழ்ச்சி ஒன்றில் கேட்கப்பட்டபோது, “சினிமாவில் விமர்சனங்களும் ஏச்சுப்பேச்சுகளும் இடம்பெறுவது என்பது மிகவும் இயல்பான ஒன்று.
“நம்மை நோக்கி விமர்சனங்கள் வருகின்றன என்றால், நாம் வளர்ந்து கொண்டிருக்கிறோம் என்றுதான் அதற்கு அர்த்தம்.
“எனவே, என்மீது வீசப்படும் அம்புகளை நான் காயமாகப் பார்க்காமல், அவற்றை என் வளர்ச்சிக்கான படிக்கட்டுகளாகவே எடுத்துக்கொள்கிறேன்.
“வாழ்க்கையில் எதையும் எளிதாகக் கடந்து சென்றாலே போதும், எந்தப் பிரச்சினையும் நம்மைப் பாதிக்காது,” என்று மிகத் தெளிவாகவும் துணிவுடனும் பதிலளித்துள்ளார்.
இக்கட்டான சூழல்களைக் கையாளும் மாளவிகாவின் இந்தப் பக்குவம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆறு மொழிகளில் தயாராகும் ‘சிலந்தி-2’
‘சிலந்தி’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, 18 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகமாக ‘சிலந்தி-2’ உருவாகவுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
2008ல் வெளியான இப்படத்தின் முதல் பாகத்தை இயக்கிய ஆதிராஜன், மீண்டும் இரண்டாம் பாகத்தையும் இயக்கவுள்ளார்.
இந்தப் புதிய படத்தில் நடிகை மாளவிகா மோகனன் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
ஏற்கெனவே ஆதிராஜன் இயக்கத்தில் வெளியான ‘அருவா சண்ட’ படத்தில் மாளவிகாதான் நடித்திருந்தார்.
அந்தத் கூட்டணியின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது ‘சிலந்தி-2’ படத்திற்காக மீண்டும் இவர்கள் இணைந்துள்ளனர்.
ஒரு மர்மமான, திகிலூட்டும் கதையாக உருவாகவுள்ள இப்படம், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்த் திரையுலகைத் தாண்டி, ‘பான் இந்தியா’ படமாக எடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ள ‘சிலந்தி-2’ படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் என மொத்தம் ஆறு மொழிகளில் தயாராகவுள்ளது.
ஒரே நேரத்தில் பல மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

