இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘தண்டேல்’ என்ற தெலுங்குப் படத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி, கருணாகரன், ‘ஆடுகளம்’ நரேன், பப்லு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார்.
உண்மைச் சம்பவங்களைத் தழுவி உணர்வுபூர்வமான காதல் கதையாகத் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பன்னி வாஸ் தயாரித்திருக்கிறார்.
உலகம் முழுவதும் பிப்ரவரி 7ஆம் தேதி இன்று திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்ககளையும் சென்றடையும் வகையில் படக் குழுவினர் அயராது உழைத்து இருப்பதாகக் கூறினார் சாய் பல்லவி.
‘தண்டேல்’ படம் குறித்துப் பேசிய சாய் பல்லவி, “இந்தப் படத்தின் கதை உண்மைச் சம்பவத்தைத் தழுவி எழுதப்பட்டிருந்ததால் என்னைக் கவர்ந்தது. இந்த உணர்வு ரசிகர்களிடம் சரியான விதத்தில் சென்றடையும் என கணித்தேன்.
“தண்டேல்’ படம் ரசிகர்களுக்கு சிறப்பான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என உறுதியாக நம்புகிறேன். இந்தப் படத்தில் பாடல்கள், சண்டைக் காட்சிகள் இருக்கின்றன. நடனமும் இருக்கிறது. இவற்றையெல்லாம் விட உணர்வுபூர்வமான காதலும் இருக்கிறது. அதனால் ரசிகர்கள் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும் என நம்புகிறேன்.
“என்னுடைய நடிப்பு சிறப்பாக இருப்பதற்கு கதையும் கதாபாத்திரமும் அதனை இயக்கும் இயக்குநரும்தான் காரணம்,” என நடிகை சாய் பல்லவி தெரிவித்திருக்கிறார்.
சாய்பல்லவியைப் பொறுத்தவரை அவரது அதிரடி நடனத்திற்காக பிரபலமானவர். அப்படிப்பட்டவரிடம் நீங்கள் எந்த நாயகனுடன் இணைந்து போட்டி நடனம் ஆட விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு சிறிதும் தயங்காமல் நடிகர் விஜய்யுடன் என்று கூறினார் சாய்பல்லவி.
இதுகுறித்து அவர் கூறும்போது, “யார் ஒருவர் நடனத்தை ரசித்து ஆடுகிறார்களோ அவர்களுடன் ஆடுவதற்கும் அவர்களின் பாடல்களுக்கு ஆடுவதற்கும் எனக்கு விருப்பம். எப்போதும் விஜய்யும் சிம்ரனும் இணைந்து ஆடுவதை நான் ரசித்துப் பார்ப்பேன்,” என்று கூறியுள்ளார்