தமிழ்த் திரையுலகம் பல நல்ல மாற்றங்களைக் கண்டு வருவதாகப் பலரும் பல்வேறு தருணங்களில் கூறியுள்ளனர்.
தொழில்நுட்பம், ஒப்பனை, இயக்கம், ஒளிப்பதிவு, பிரம்மாண்ட படங்கள் என்று பல அம்சங்களில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டிருப்பது உண்மைதான்.
ஆனால், அனைத்தையும் கடந்து படைப்பாற்றல் இல்லாமல் போனால் படங்களைத் தயாரித்து, வெளியிட்டு என்ன பலன்? மக்கள் நேசிக்காத எந்தப் படமும் வெற்றி பெறாது.
ஒரு திரைப்படத்துக்கான எல்லா அம்சங்களும் நன்றாக அமைந்துள்ளதாக ஒரு ரசிகன் கருதும் பட்சத்தில், அப்படத்தின் வெற்றியை யாராலும் தடுக்கவும் முடியாது. இந்தக் கூற்றுக்கு நடப்பாண்டு தீபாவளிப் பண்டிகை மௌன சாட்சியாக இருக்கிறது.
எப்போதும் பெரிய நடிகர்கள் நடித்த படங்கள்தான் தீபாவளியின் சிறப்பு வருகையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்த காலமும் இருந்தது. அந்தப் படங்களின் ஆதிக்கத்தால் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படங்கள், முதலீடு செய்த பணத்தை வசூல் தந்தால் பெரிய விஷயம். மறுபக்கம், முன்னணி நாயகர்கள் நடித்த மசாலா படங்கள்கூட நல்ல வசூல் காணும்.
காரணம், ஒரு படத்தை வெளியிட திரையரங்குகள் வேண்டுமே! ஆனால், ஒருசிலரது கட்டுப்பாட்டில்தான் தமிழகத் திரையரங்குகள் உள்ளன. இந்த நியாயமற்ற சூழலையும் இந்த வருடத் தீபாவளி மாற்றியமைத்துள்ளது.
இத்தீபாவளிக்கு முன்னணி நடிகர்கள் ஒதுங்கிவிட, வளரும் நாயகர்களான பிரதீப் ரங்கநாதன், ஹரிஷ் கல்யாண், துருவ் ஆகியோரின் ‘டியூட்’, ‘டீசல்’, ‘பைசன்’ ஆகிய 3 படங்கள் கவனம் ஈர்த்துள்ளன.
‘டியூட்’
சந்தை நிலவரப்படி, பிரதீப் படம்தான் வசூலைக் குவிக்கும், விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப செயற்கைக்கோள்-மின்னிலக்க உரிமம், இசை உரிமம், முன்பதிவு ஆகியவற்றின் மூலம் ஏற்கெனவே ரூ.35 கோடி கிடைத்துவிட்டதாம்.
தொடர்புடைய செய்திகள்
வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) படம் வெளியானது. இளையர்களைக் கவரும் காட்சி அமைப்பும் பாடல்களும் படத்தின் பலங்களாக அமைந்துள்ளன.
‘டீசல்’
ஹரிஷ் கல்யாண் வித்தியாசமான கதைக்களங்கள் கொண்ட படங்களை, கவனமாகத் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்தப் பட்டியலில், ‘டீசல்’ படத்துக்கும் நிச்சயம் இடமுண்டு.
அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய, எளிதில் புரியாத, ஒரு முக்கியமான விஷயத்தை கூடுமானவரை எளிமையான முறையில் சொல்ல இயக்குநர் முயற்சி செய்துள்ளார்.
ஹரிஷின் பாந்தமான நடிப்பு நிச்சயம் படத்தின் வெற்றியை உறுதி செய்யும் என்று படத்தயாரிப்புத் தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதற்கேற்ப, திரையரங்குகளில் முதல் நாள் முதல் காட்சி முடிந்து வெளியே வந்த ரசிகர்களில் பெரும்பாலானோர் ‘நல்ல படம்’ என்றனர்.
‘பைசன்’
தந்தை விக்ரமைப் போல மகன் துருவ்வும் சிறந்த நடிகர், அர்ப்பணிப்பு உணர்வு உள்ளவர் என்பதைக் கண்டறிந்த ஒரு காரணத்துக்காகவே இயக்குநர் மாரி செல்வராஜை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
தன்னுடைய மனத்தில் உள்ள வலிகளை, பாரத்தை அவர் இறக்கிவைக்க இந்தப் படம் கைகொடுத்திருக்கிறது. அந்தச் செயலை பிறர் மனம் நோகாமல் அவர் செய்துள்ளார் என்பதுதான் ரசிகர்களைக் கைத்தட்ட வைத்துள்ளது.
நாயகன் துருவ் விக்ரம் முறுக்கேறிய உடற்கட்டுடன் ஒவ்வொரு காட்சியிலும் தன் கதாபாத்திரமாகவே மாறியுள்ளார். எந்த நம்பிக்கையில் அவர் இந்த அளவுக்கு உழைப்பைக் கொட்டினார் என்று தெரியவில்லை.
ஆனால், அவரது அடுத்தடுத்த படங்களும் இதே தரத்துடன் அமைந்தால் தந்தை விக்ரம் மட்டுமல்ல, மொத்த திரையுலகமும் மகிழலாம்.