தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலகக் கிண்ணத்தை அறிமுகம் செய்துவிட்டு நாடு திரும்பினார் தீபிகா படுகோன்

1 mins read
4780fbb0-4b7b-42e5-b1a5-695b9ea23f7d
ஸ்பானிய முன்னாள் கோல்காப்பாளர் இகர் கசியாஸுடன் சேர்ந்து உலகக் கிண்ணத்தை தீபிகா அறிமுகம் செய்துவைத்தார். -

கத்தாரில் நடைபெற்ற ஃபிஃபா உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் பிரான்சுக்கும் அர்ஜென்டினாவுக்கும் இடையிலான இறுதியாட்டம் தொடங்குவதற்கு முன்பு உலகக் கிண்ணத்தை அறிமுகம் செய்துவைத்த இந்திய நடிகை தீபிகா படுகோன், நாடு திரும்பியுள்ளார்.

வெள்ளிக்கிழமை (டிசம்பர் 23) இரவு மும்பை விமான நிலையத்தில் அவர் காணப்பட்டார்.

தம்முடைய கணவர் ரன்வீர் சிங்குடன் சேர்ந்து இறுதியாட்டத்தை அரங்கில் கண்டுகளித்தார் தீபிகா. தம்முடைய புதுப்படமான Cirkus-இன் வெளியீட்டிற்காக மனைவிக்கு முன்னதாகவே இந்தியா திரும்பிவிட்டார் ரன்வீர் சிங்.

இந்நிலையில், மும்பை விமான நிலையத்தில் இருந்து தீபிகா வெளியேறுவதைக் காட்டும் காணொளி ஒன்று இன்ஸ்டகிராம் பக்கத்தில் வலம் வந்தது.

நாடு திரும்பியுள்ள தீபிகாவை வரவேற்ற அவருடைய ரசிகர்கள், இன்ஸ்டகிராம் காணொளிப் பதிவில் கருத்துகளைப் பதிவிட்டனர்.

"வரலாறு படைத்துவிட்டு 'ராணி' தீபிகா நாடு திரும்பியுள்ளார்," என்று ரசிகர் ஒருவர் பதிவிட்டார்.

தீபிகாவை 'லேடி சூப்பர்ஸ்டார்' என்று வேறொருவர் அழைத்தார்.

சொகுசு கைப்பைகளைத் தயாரிக்கும் நிறுவனமான 'லூயி விட்டோன்'-இன் தூதராக உள்ளார் தீபிகா. ஸ்பானிய முன்னாள் கோல்காப்பாளர் இகர் கசியாஸுடன் சேர்ந்து உலகக் கிண்ணத்தை தீபிகா அறிமுகம் செய்துவைத்தார்.