உலக அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது சிங்கப்பூர் ரசிகர்களிடம் பெரிதும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற அத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் சிங்கப்பூரிலிருந்து பலரும் கலந்துகொண்டனர்.
‘கோல்டன் வில்லேஜ்’, ‘ஷா தியேட்டர்ஸ்’ ஆகிய திரையரங்குகளில் இப்படத்திற்கான முதற்காட்சிக்குக் கடந்த சில நாள்களாக முன்பதிவு நடைபெற்றது.
பலரும் முன்பதிவு செய்து ஆவலுடன் காத்திருந்த நிலையில், தணிக்கை தொடர்பான சிக்கலினால் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத்தினர், நண்பர்கள் என 11 பேர் இணைந்து மலேசியா சென்று இசை வெளியீட்டில் பங்கேற்ற மகிழ்ச்சி இன்னும் நீடிக்கும் நிலையில் வெளியீடு தள்ளிப்போவது மிகப் பெரிய ஏமாற்றமளிப்பதாகச் சொன்னார் திருவாட்டி கோமதி ஜெயகுமார்.
“2026 மகிழ்ச்சியாகத் தொடங்கியது. ஆனால் இது எதிர்பாராதது. இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களின் மகிழ்ச்சியும் ஆரவாரமும் விஜய் மீது ரசிகர்கள் கொண்டிருக்கும் அளவுகடந்த அன்பை வெளிக்காட்டியது,” என்றார் அவர்.
“நான் சிங்கப்பூரில் ‘கோல்டன் வில்லேஜ்’ திரையரங்கிலும் ஜோகூரில் ‘பேரடைம் மால்’ திரையரங்கிலும் ஜனநாயகன் படத்தை இருமுறை பார்ப்பதற்கு முன்பதிவு செய்திருந்தேன். கட்டணம் திரும்பக் கிடைத்துவிடும் என்றாலும் ஏமாற்றத்தை ஈடுசெய்ய இயலாது. வெளியீட்டுத் தேதி குறித்த தகவலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்,” என்றும் அவர் கூறினார்.
சிங்கப்பூரில் திரைப்படங்களைத் தொடர்ந்து விநியோகிக்கும் மாஸ்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் திரு கார்த்திகேயன், “நாங்கள் இப்படத்தை விநியோகிக்கவில்லை என்றாலும் ஏமாற்றத்தை உணர முடிகிறது. பலரும் என்னிடம் இதுகுறித்துப் பகிர்ந்துகொண்டனர்,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
“ஜனநாயகன் படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த மறுநாள் சிவகார்த்திகேயன், ரவி மோகன் நடிக்கும் பராசக்தி படம் வெளியாகிறது. ஜனநாயகன் வெளியானாலும் பராசக்தியும் நன்றாக ஓடும் எனும் எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது பராசக்தி படம் மட்டுமே வெளியாகும் என்ற நிலையில் அத்திரைப்படத்தை அதிகமானோர் சென்று காண்பர் என்று கருதுகிறேன்,” என்றார் அவர்.

