அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான ‘டிமான்ட்டி காலனி’ படத்தின் மூன்றாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது.
முதல் பாகத்தை இயக்கும்போது, அதன் அடுத்தடுத்த பாகங்கள் எடுப்பது குறித்து எந்தத் திட்டமும் தம்மிடம் இல்லை என்றார் அஜய் ஞானமுத்து.
“தமிழ்த் திரையுலகில் நிறைய திகில் படங்கள் வெளியாகி உள்ளன. எனினும், ‘டிமான்ட்டி காலனி’ படத்தின் இரண்டு பாகங்ளுமே மாறுபட்டு இருந்தன. தற்போது, அதன் மூன்றாம் பாகத்தை உருவாக்கி உள்ளோம். ஆறு பாகங்கள் வரை எடுக்கும் திட்டம் உள்ளது.
“மூன்றாம் பாகம் புதிய கதைக்கருவுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் வெறுமனே திகில் சம்பவங்கள் மட்டுமின்றி, ஒவ்வொரு கதாபாத்திரம் தொடர்பான உணர்வுபூர்வமான காட்சிகளும் இருக்கும்.
“ஹாலிவுட்டுக்கு நிகராக நம்மிடமும் நிறைய திகில் கதைகள் உள்ளன. புனித தேவதைகள், துர்தேவதைகள் என்று நிறைய உண்டு. தொன்மம், நாட்டுப்புறக்கதைகள் ஆகியவை இப்போதும் நம்மிடம் நிறைய உள்ளன,” என்கிறார் அஜய்.
‘டிமான்ட்டி காலனி’யின் வெற்றிதான் அடுத்தடுத்த பாகங்களை எடுக்கத் தூண்டியதாகவும் அதற்குப் பிறகும் மேலும் சில பாகங்கள் எடுக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறுகிறார் இயக்குநர்.
“முந்தைய பாகங்களில் எழுந்த கேள்விகளுக்கெல்லாம் இதில் விடை தெரியும். நடப்பு அம்சங்கள் தொடர்பான மர்ம முடிச்சுகள் அவிழும். திகில் படம் என்றால் தொடக்கம் முதல் இறுதி வரை திரையிலிருந்து கண் இமைக்காமல் பார்க்க வேண்டும். இந்தப் படம் நிச்சயம் அந்த அனுபவத்தைத் தரும்,” என்கிறார் அஜய்.
படத்தின் கதாநாயகன் அருள்நிதிக்கு இதில் இரண்டு விதமான நடிப்பு தேவைப்பட்டதாகவும் அவரது ரசிகர்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருப்பதாகவும் சொல்கிறார் அஜய்.
தொடர்புடைய செய்திகள்
“அருள்நிதி நடிப்பை வெளிப்படுத்தும் விதம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தும். இம்முறை அவரது உழைப்பும் மெனக்கெடலும் ரசிகர்களின் கூடுதல் கவனத்தைப் பெறும் என நினைக்கிறேன்.
“நாயகி பிரியா பவானி சங்கர் திறமையான நடிகை. படத்தின் முதல் இரண்டு பாகங்களை நன்கு புரிந்துகொண்டு நடித்தார். அவருக்கும் சவாலான கதாபாத்திரம்தான். இரவு நேரப் படப்பிடிப்புகளிலும் உற்சாகமாக நடித்தார்.
“மியா ஜார்ஜ், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன், ஜி.எம்.குமார் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். குரு சோமசுந்தரத்தின் கதாபாத்திரத்தைச் சுற்றித்தான் கதையே நகரும். அவரது நடிப்பு மிரளவைக்கும்.
“திகில் படங்களுக்குப் பின்னணி இசை பலம்சேர்க்கும். அதைச் சிறப்பாகச் செய்துள்ளார் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்.
“நல்ல கதைகளை ரசிகர்கள் நிச்சயம் ஆதரிப்பார்கள். அந்த வகையில், இந்தப் படத்துக்கு ஆதரவு கிடைக்கும் என நம்புகிறோம்,” என்றார் இயக்குநர் அஜய் ஞானமுத்து.

