நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியை விவாகரத்து செய்யவிருப்பதாக அறிவித்திருப்பது திரையுலகத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், ஜெயம் ரவி வெளியிட்ட அறிக்கைக்கு பதில் கொடுத்துள்ளார் ஆர்த்தி.
கணவர் ரவியின் முடிவு குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட ஒன்றல்ல என்றும் தனிப்பட்ட நலனுக்காக அவர் எடுத்த முடிவு என்றும் ஆர்த்தி கூறியுள்ளார்.
மேலும், ரவியின் இந்த திடீர் முடிவால் தானும் தன் குழந்தைகளும் மிகுந்த தவிப்புக்கு ஆளாகியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தனது ஒப்புதல் இல்லாமலேயே கணவர் ரவி அறிக்கை வெளியிட்டிருப்பதும் சமூக ஊடகங்களில் தங்களுடைய திருமண வாழ்க்கை குறித்து இந்த அறிக்கை வெளியாகி இருப்பதும் மிகுந்த மனவேதனை அளித்திருப்பதாகக் கூறுகிறார் ஆர்த்தி.
“பரஸ்பர நம்பிக்கை, மரியாதையுடன் கடந்த 18 ஆண்டுகளாக நான் வாழ்ந்த வாழ்க்கை இந்த அறிக்கையின் மூலம் அதற்குரிய கௌரவம், கண்ணியம், தனித்தன்மையை இழந்துவிட்டதாக நான் உணர்கிறேன்.
“என் கணவரிடம் மனம் விட்டுப்பேச அவரைச் சந்திக்க எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.
“மறுக்கப்படாத பொய்கள் காலப்போக்கில் உண்மையாக நம்பப்படும் என்பதால் ஜெயம் ரவியின் அறிக்கையை மறுப்பது எனது முதல் கடமையாகிறது,” என்று ஆர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
ஆர்த்தியின் நடத்தை குறித்து ஜெயம் ரவி பொது வெளியில் பேசுவது அவரது குடும்பத்தாரையும் நட்பு வட்டத்தையும் கொந்தளிக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
“பொது வெளியில் கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்கவே இப்போதும் விரும்புகிறேன். ஆனால் என் மீது குற்றம்சாட்டியும் என் நடத்தையின் மீது களங்கம் கற்பிக்கும் வகையிலும் பொது வெளியில் மறைமுகமாக நடத்தப்படும் தாக்குதல்களை மிகுந்த சிரமத்துடன் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
“எப்போதும் என் குழந்தைகளின் நலனும் எதிர்காலமும்தான் முக்கியம். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என் குழந்தைகளை காயப்படுத்துவதை அனுமதிக்க இயலாது,” என்று ஆர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.