தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாழ்நாள் முழுவதும் கதாநாயகியாக இருக்க ஆசை: நிதி அகர்வால்

3 mins read
8c789abd-3ce3-45b7-aaf6-5c1f384e9420
நிதி அகர்வால். - படம்: ஊடகம்

இதுவரை தாம் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரங்களில் ஆகச் சிறந்தது என்றால், அது ‘ஹரி ஹர வீர மல்லு’ படத்தில் நடித்த வேடம்தான் என்கிறார் நடிகை நிதி அகர்வால்.

வாழ்நாள் முழுவதும் கதாநாயகியாக வலம் வரவேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வரான பவன் கல்யான் நடிப்பில் உருவாகியுள்ளது ‘ஹரி ஹர வீர மல்லு’. இதில் அவரது ஜோடியாக நடித்துள்ளார் நிதி அகர்வால்.

இதையடுத்து, நடிகர் பிரபாஸ் நடித்து வரும் ‘ராஜா சாப்’ படத்திலும் இவர்தான் நாயகி. இவ்விரு படங்களுமே தனது திரைப்பயணத்தின் பெரும் வெற்றிப் படைப்புகளாக அமையும் என்று உறுதியாக நம்புவதாகச் சொல்கிறார் நிதி.

“நான் ‘மாடலிங்’ துறையிலிருந்து சினிமாவுக்கு வந்தேன். அதற்காக மாடலிங் செய்வதில் அதிக விருப்பம் என நினைத்துவிட வேண்டாம். உண்மையில் அத்துறையில் எனக்கு எந்தவித நாட்டமும் இல்லை. ஆனால் திரைத்துறைக்குள் நுழைய அதுவே சிறந்த வழி எனப் பலரும் அறிவுறுத்தினர்.

“எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் நடிகையாக வேண்டும் என்பதே எனது கனவு. வேறு எதுவும் என் நினைவில் இல்லை. என் வாழ்நாள் முழுவதும் ஒரு கதாநாயகியாக இருக்க வேண்டும் என விரும்பினேன்.

“என் அபிமான நாயகிகளான ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென், பிரியங்கா சோப்ரா ஆகியோர் அழகிப் போட்டிகளில் பங்கேற்று, மாடலிங் செய்து, அதன் பிறகே ரசிகர்கள் மனம்கவர்ந்த நடிகைகளாக உருவெடுத்தனர். எனவே, அவர்களுடைய வழிதான் நான் பின்பற்ற வேண்டிய வழி என்பதை எப்போதோ முடிவு செய்துவிட்டேன்.

“இந்த வழி என்னைப் பல சுவாரசியமான இடங்களுக்கு கொண்டு சென்றுள்ளது. வழியில் வேறு எங்கெல்லாம் நின்று, அதன் பிறகு பயணத்தைத் தொடர வேண்டும் என்பது தெரியவில்லை. எனினும், நான் பெரிதும் எதிர்பார்க்கும் இரு படங்களும் உரிய நேரத்தில் வெளியானால், அதுவே போதும்,” என்கிறார் நிதி அகர்வால்.

‘ஹரி ஹர வீர மல்லு’ கடந்த ஜூலை 24ஆம் தேதி வெளியானது. சிலர் இப்படத்தைக் கடுமையாக விமர்சித்தனர். ஆனால் படக்குழு இத்தகைய விமர்சனங்களைப் பொருட்படுத்தவில்லை.

“ஒரு படத்தின் வெற்றி, தோல்வியை ஒருசிலர் மட்டும் தீர்மானித்துவிட இயலாது. விமர்சகர்கள் தோல்வி அடையும் என முடிவு கட்டிய பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன. நல்ல படம் என்று பாராட்டிய படைப்புகள் தோல்வி கண்டுள்ளன,” என்கிறார் நிதி.

இக்கூற்றுக்கு உதாரணமாக ‘சாவா’ இந்திப் படத்தை குறிப்பிடுகிறார்கள் இவரது ரசிகர்கள். பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்ட ‘சாவா’ படம் வசூலில் எந்த குறையும் வைக்கவில்லை. அதேபோல் ‘ஹரி ஹர வீர மல்லு’ படமும் வெற்றிப் படம்தான் என்பது ஒருதரப்பு ரசிகர்களின் வாதமாக உள்ளது.

“ஒவ்வோர் படத்திலும் நான் நடிக்கும் விதம், வெவ்வேறு விதமாக இருப்பதாக சிலர் விமர்சிக்கின்றனர். எனக்கென்று ஒரு நடிப்புப் பாணி இல்லை என்று ரசிகர்களும் கூறுகின்றனர். ஒரு வகையில் இது உண்மைதான்.

“ஒரே மாதிரியாக நடிப்பது இரு பக்கமும் கூராக உள்ள கத்தியைப் போன்றது. அதுபோன்ற நடிப்பு வெவ்வேறு கதாபாத்திரங்களின் தனித்தன்மையைக் கெடுத்துவிடும் என்று கருதுகிறேன்,” எனச் சொல்லும் நிதி அகர்வாலிடம், காதல், திருமணம் என்று கேட்டால், ‘அது குறித்தெல்லாம் பேச நேரம் இல்லை’ என்று பறந்துவிடுகிறாராம்.

குறிப்புச் சொற்கள்