தந்தையை வைத்து ஜாலியான படம் இயக்க ஆசை: ஜேசன் சஞ்சய்

தந்தையை வைத்து ஜாலியான படம் இயக்க ஆசை: ஜேசன் சஞ்சய்

படம்: ஹிந்துஸ்தான் டைம்ஸ்

25 Sep 2026 - 2:13 pm

1 mins read

தமிழக முதல்வரும் நடிகருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், சந்தீப் கிஷன் நடிப்பில் சூதாட்டத்தைக் கருவாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் அக்டோபர் 2ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இப்படத்தின் விளம்பரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் ஜேசன் சஞ்சய், செய்தியாளர்களிடம் சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

“என் அப்பாவிற்குள் எப்போதும் ஒரு குழந்தைத்தனமும் சிறந்த நகைச்சுவை உணர்வும் இருக்கும். அதுவே எங்களுக்கு மிகவும் பிடித்த விஷயம். எனவே, அவரை இயக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக ஒரு ஜாலியான நகைச்சுவைத் திரைப்படத்தையே எடுப்பேன்,” என்று கூறினார்.

தொடர்ந்து, தந்தையின் எந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க விரும்புவீர்கள் என வினவப்பட்டபோது, “பத்ரி 2’ படத்தை இயக்க விரும்புகிறேன். ஏனெனில், அந்தப் படத்தில் ஒரு தனித்துவமான ‘சிக்மா’ உணர்வு உள்ளது,” என்றார் அவர்.

“சின்ன வயதில் அப்பாவுடன் சேர்ந்து ஏராளமான திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். அதில் ‘போக்கிரி’ படம் எப்போதுமே என் நினைவில் இருக்கும். அக்காலத்தில் ஒரு பக்கம் அப்பா படம், மறுபக்கம் அஜித்தின் படம் எனத் திரையரங்குகளில் கொண்டாட்டம் அனல் பறக்கும்,” என்று ஜேசன் சஞ்சய் குறிப்பிட்டார்.

அண்மையில் வெளியான ‘சிக்மா’ படத்தின் முன்னோட்டக் காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

குறிப்புச் சொற்கள்
விஜய்நடிகர்இயக்குநர்திரைப்படம்