நடிப்புடன் சேர்த்து பாடவும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி என்கிறார் இளம் நாயகி சைத்ரா.
கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவரிடம் தமிழ் கொஞ்சி விளையாடுகிறது.
“நான் பெரிய பாடகி அல்ல. சிறு வயதிலேயே முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டேன். தொழில் ரீதியில் நடிப்பைத் தேர்வு செய்தாலும், இசையிலும் நாட்டம் அதிகம்.
“எனக்கு ‘கருடா காமன விருஷ்பா வாஹனா’ என்ற கன்னடப் படத்தில்தான் முதன்முதலில் பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்தப் பாடல் நானே எதிர்பார்க்காத வகையில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அது மட்டுமல்ல. சிறந்த பாடகிக்கான சைமா விருதையும் பெற்றுத் தந்தது.
“தொடர்ந்து பல படங்களில் பாடுவதற்கான வாய்ப்புகள் தேடி வருகின்றன. தமிழிலும் பாட விருப்பமா என்று சிலர் கேட்கிறார்கள். யாருக்குத்தான் இந்த ஆசை இருக்காது? எனக்கு தமிழ்ப் பாடல்கள் மிகவும் பிடிக்கும்.
“இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமானின் தீவிர ரசிகை நான். தமிழில் பாடும் வாய்ப்பு என்பதை ஒரு பக்தனைக் கடவுள் கோவிலுக்கு அழைப்பது போன்ற அற்புதமான தருணம் என்பேன்,” என்கிறார் சைத்ரா.
இவர் நடித்த ஒரு கன்னடப் படத்தைப் பார்த்த இயக்குநர் ஸ்ரீகணேஷ், ‘3 BHK’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை அளித்தாராம்.
இவர் அறிமுகமானதும் கன்னடத் திரையுலகில்தான். சைத்ரா பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். உயிரித் தொழில்நுட்பத்தில் பட்டப்படிப்பை முடித்தவர்.
தொடர்புடைய செய்திகள்
கல்லூரி விழாவில் பங்கேற்ற நேரத்தில்தான் முதல் படத்துக்கான நடிப்புத் தேர்விலும் கலந்துகொண்டாராம்.
இவர் அறிமுகமான ‘மகீரா’ படம் 2019ஆம் ஆண்டில் வெளியானது. சைத்ராவின் நடிப்பு நன்றாக இருப்பதாக விமர்சகர்கள் பாராட்டியதை அடுத்து, புது வாய்ப்புகள் தேடி வரத் தொடங்கின. அவற்றுள் ஒரு படம் தான் ‘3 BHK’.
“தமிழில் முதல் படத்திலேயே சரத்குமார், தேவயானி, சித்தார்த் போன்ற ஆளுமையுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது நல்ல அனுபவம். படப்பிடிப்பு முடியும் வரை, முதல் படத்தில்தான் நடிக்கிறேன் என்ற உணர்வே ஏற்படவில்லை. அந்த அளவுக்கு கதையுடனும் மற்ற கலைஞர்களுடனும் ஒன்றிப்போய்விட்டேன்.
“இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவதற்குள் சசிகுமாருடன் நடிக்கும் ‘மை லார்ட்’ படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. இதனால் கடந்த நான்கைந்து மாதங்களாக வீட்டுக்கே போக முடியாத அளவுக்கு இங்கும் அங்குமாக ஓடிக்கொண்டிருக்கிறேன்.
“ஒரு கட்டத்தில் சோர்வடைந்தபோது, நடிகர் சித்தார்த் வீட்டு சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்கிறேன் என்று அன்போடு சொன்னார். அதன் பிறகு, ஒவ்வொரு நாளும் விருந்துதான்.
“சரத்குமாரும் அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்று இரவு விருந்தளித்து தன் குடும்பத்தாரை அறிமுகம் செய்தார். அதை ஓர் உணர்வுபூர்வமான அனுபவம் எனச் சொல்வேன்.
“ஒளிப்பதிவாளர் விஷ்வா, இயக்குநர் ஸ்ரீகணேஷ் என அனைவருமே என்னை தங்கள் குடும்ப உறுப்பினராகவே கருதி அன்பு காட்டினர்.
“அனுபவ கலைஞர்களிடம் நான் கவனித்த முக்கியமான அம்சம் என்றால், அது நேரம் தவறாமைதான். எல்லாருமே படப்பிடிப்புத் தொடங்க 15 நிமிடங்களுக்கு முன்பே வந்துவிடுகிறார்கள். அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறார்கள்,” என்று சொல்லும் சைத்ராவுக்கு, பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமார்தான் பிடித்தமான நடிகராம்.
சிறு வயது முதலே அவரது படங்களை விரும்பி பார்ப்பாராம். நடிகையாகவில்லை என்றால் பாடகியாக அல்லது பன்னாட்டு நிறுவனத்தின் ஊழியராக இருந்திருக்கக்கூடும் என்கிறார்.
“இன்றுள்ள நடிகர்களில் தனுஷ் நடிப்பு மிகவும் பிடிக்கும். நடிகைகளில் சரோஜா தேவி, மஞ்சு வாரியர், ராதிகா ஆப்தே, ஆலியா பட் ஆகியோரின் படங்களை ரசித்துப் பார்ப்பேன். அவர்களைப் போல் அங்கீகரிக்கப்பட்ட நடிகை எனப் பெயரெடுக்க வேண்டும் என்பதே என் ஆசை,” என்கிறார் சைத்ரா.